பெண்ணல்ல தேவதை!

Su.tha Arivalagan
Oct 27, 2025,10:17 AM IST


- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி


சென்னை நகரின் பிரபலமான கேன்சர் ஹாஸ்பிடல் அது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. தலைமை நர்சிங் சூபர்வைசர்  ஸ்ரீஜா அழகே உருவான கேரளத்துப் பைங்கிளி. நாற்பது வயதுக்குள் இருக்கும். ஒவ்வொரு வார்டாகப் பார்வையிட்டுக் கொண்டே வந்தவர் கண்ணில் பட்டது அந்த ஐ. சி. யூ வார்டு அறை.


அன்று காலை தான் ஆபரேஷன் முடிந்த நிலையில் ஐ. சி. யூ வில் அனுமதிக்கப்பட்டு சோர்வாகப் படுத்திருந்தார் ஷன்மதி. அவர் அருகே வந்த ஷ்ரீஜா அம்மா ஏன் நீங்க பில்லோ வெச்சுக்கல, வேண்டாம்னு சொன்னீங்களாமா? அக்கறையுடன் கேட்டார்.


நான் தலையனை வேண்டாம்னு சொல்லவில்லை சிஸ்டர். இன்று மாலை நான் இங்க அட்மிட் ஆனது முதல் யாரும் எனக்குப் பில்லோ தரலை மயக்கத்தில் இருந்ததால் நானும் கேட்கலை. சிஸ்டர் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா? பாவமாகக் கேட்டார் ஷன்மதி.


ஏதாவது வேணுமா அம்மா சொல்லுங்க என்றாள் ஷ்ரீஜா.


சிஸ்டர் எனக்கு யூரின் போகணும். ரொம்ப அவசரம் சிஸ்டர். நானும் நர்ஸ் யாராவது இந்தப்பக்கம் வருவாங்களானு பார்த்தேன். யாரையும் காணோம். ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் உதவமுடியுமா? அழுதுவிடுவது போல் கேட்டார் ஷன்மதி.


இருங்க. இதோ வர்றேன் என்று சொல்லி விட்டு கையில் பெட் பேனை எடுத்து வந்து ஷன்மதி யூரின் போக வசதியாக அவரது பெட்டில் வைத்து ஸ்கிரீனை இழுத்து மூடிவிட்டு காத்திருந்தார்.  உள்ளிருந்து  ஷன்மதி குரல் கொடுத்ததும் அவர் யூரின் போன பெட்பேனை எடுத்து டாய்லெட்டில் கொட்டிவிட்டு கைகளை கழுவித்துடைத்தபடி வெளியே வந்த ஸ்ரீஜாவை நன்றிகலந்த பார்வையுடன் பார்த்து நிம்மதியாகச் சிரித்தார் ஷன்மதி. 


ரொம்ப நேரமா அடக்கி வெச்சுகிட்டு தவிச்சுப்போயிட்டேன். நல்ல வேளை தெய்வம் போல நீங்க இங்க வந்தீங்க என்றவர் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.




அட ஏம்மா இதுக்குப் போய் கண் கலங்கறீங்க. நீங்க நர்ஸ் யாரையாவது வரச்சொல்லி கூப்பிட்டு இருக்கலாமே. சரி போகட்டும். நீங்க இன்னும் சாப்பிடலியா? டிபன் அப்படியே இருக்கு. ஏம்மா சாப்பிடலை? என்றவாறு ஷன்மதியைப் பார்த்த ஸ்ரீஜாவுக்கு அப்போதுதான் புரிந்தது. ஷன்மதியின் இடது மார்பகம், சர்ஜரி செய்யப்பட்ட நிலையில் அவரது வலது கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்ததைப் பார்த்தவர், சாரிமா நான் உங்க கையை இப்போ தான் கவனித்தேன். இருங்க நானே உங்களை சாப்பிட வைக்கிறேன் என்றபடி அருகில் இருந்த கோதுமை கிச்சடியை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஷன்மதிக்கு ஊட்டி விட்டார் ஷ்ரீஜா.


போதும்மா. இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாதுமா கெஞ்சினார் ஷன்மதி. இருங்கம்மா இன்னும் இரண்டு வாய் தான். இதை மட்டும் சாப்பிட்டுடுங்க. நீங்க மாத்திரை மருந்து சாப்பிடனும். அதுக்கு உங்க உடம்புக்கு தெம்பு வேண்டாமா? அவ்ளோ தான் முடிந்தது என்று பேச்சுக் கொடுத்துக் கொண்டே டிபனை ஷன்மதிக்கு ஊட்டிவிட்ட ஸ்ரீஜா அவர் வாயைத் துடைத்து விட்டு தண்ணீர், மாத்திரை கொடுத்து சாப்பிட வைத்தவர், அம்மா என்ன தேவை இருந்தாலும் சிஸ்டர்சைக் கூப்பிடுங்க. உங்களைப் பாத்துக்கத்தானே நாங்கள்லாம் இருக்கோம் என்றார் புன்னகைத்தபடி.


நல்லாச் சொன்னீங்க சிஸ்டர். நீங்கள் இங்க வந்து எவ்ளோ நேரம் ஆச்சு? எனக்கு நீங்க இத்தனை உதவி செஞ்சீங்களே, இதுவரை யாராவது இங்க வந்தாங்களா? சொல்லுங்க சிஸ்டர். ஏதோ என் நல்ல நேரம். நீங்க இங்க வந்து என்னை யூரின் போக வெச்சு சுத்தம் பண்ணி, சாப்பாடு ஊட்டிவிட்டு மாத்திரை கொடுத்து உதவினீங்க. நீங்க மட்டும் வரலேன்னா நான் பெட்லயே யூரின் போய் சாப்பிடாம ஈரத்திலேயே படுத்திருப்பேன் என்ற ஷன்மதியின் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிகள்.


அம்மா கவலைப்படாதீங்கம்மா. நான் பார்த்துக்கிறேன். இப்போ நீங்க நிம்மதியாத் தூங்கி ரெஸ்ட் எடுங்க. நான் இங்க தான் இருப்பேன் என்று ஷன்மதி தலைதடவி ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே வந்தார்.


இங்க டியூட்டி நர்ஸ் யாரு சத்தமாக கூப்பிட்டார் ஷ்ரீஜா. சிறிது  நேரக் காத்திருப்புக்குப் பின் அங்கு வந்து சேர்ந்தார் ஒரு நர்ஸ்.

நீங்க தானே இன்னிக்கு இங்கே டியூட்டி நர்ஸ்?  

யெஸ் சிஸ்டர். ஏன் கேட்கறீங்க?

இத்தனை நேரம் நீங்க எங்கே போயிருந்தீங்க? பர்ஸ்ட் ஆப் ஆல் இது ஐ. சி. யூ. வார்டுங்கிற நினைப்பாவது உங்களுக்கு இருக்கா?

சீறினார் ஸ்ரீஜா

சிஸ்டர் யூ ஆர் டாக்கிங் டூமச். எதுக்கு இப்போ கத்துறீங்க? பதிலுக்கு கத்தினார் அந்த நர்ஸ்.

சும்மா கத்தாதீங்க சிஸ்டர். இங்கே வாங்க. இவங்களுக்கு ஏன் நீங்க பில்லோ தரலை? இன்னிக்கு சர்ஜரி ஆகி அட்மிட் ஆன பேஷன்ட்.

ஒரு கையில் டிரிப்ஸ் போய்ட்டு இருக்கு. அனஸ்தீசியா தந்த மயக்கத்தில் படுத்திருக்காங்க. யூரின் போக ரொம்பக் கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க. எதேச்சையா நான் இந்தப்பக்கம் வந்தேன். இவங்க கூப்பிட்டதும் போய் ஹெல்ப் பண்ணேன். சாப்பிட வெச்சு, மருந்து, மாத்திரை கொடுத்துட்டு இப்பதான் வெளியே வரேன். இந்த வேலை எல்லாம் பார்க்கத்தானே நீங்க இங்க டியூட்டி நர்ஸா இருக்கீங்க.


இந்த பேஷன்ட் மாதிரி இன்னும் எத்தனை பேஷன்ட் வலியால் உதவிகேட்டு காத்திருந்திருப்பாங்க. அதையெல்லாம் விட்டுட்டு சாவகாசமா வந்து என்னை அதட்டுறீங்க. நீங்க உங்க வேலையில் கவனமாக இருந்தால் நான் ஏன் உங்ககிட்ட கத்தப்போறேன். போங்க போய் இந்த ஷன்மதி பேஷன்ட்டுக்கு தலையனை, போர்வை கொண்டு வந்து கொடுங்க என்றுவிட்டு அடுத்த வார்டு நோக்கி நகர்ந்தார் ஷ்ரீஜா.


ஆமாம் பெரிய இவ வந்துட்டா புத்திசொல்ல. இவளுக்குத்தான் இந்த ஆஸ்பத்திரியே சொந்தம்கிற நினைப்புனு ரொம்பத்தான் ஆடிகிட்டு இருக்கா என்று முணுமுணுத்தபடி ஷன்மதிக்கு தலையனையும், போர்வையும் தந்துவிட்டு அகன்றார் அந்த நர்ஸ் மீனா.


மறுநாள் காலை.


மருத்துவர்கள் ரவுண்ட்ஸ்க்கு வந்து ஒவ்வொரு பேஷன்ட்டாக செக் பண்ணிட்டுக் கொண்டு இருந்த நேரம். ஸ்ரீஜாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டு உதவினார். மருத்துவர்கள் குழு அகன்றதும் ஒவ்வொரு பேஷன்ட்டாகப் பார்த்து வந்த ஷ்ரீஜா அந்த வார்டின் நடுவில் இருந்த பேஷன்ட்டின் பெட்டை நோக்கி வேகமாக ஓடினார். சலைன் பாட்டிலில் டிரிப்ஸ் முழுவதும் தீர்ந்து போன நிலையில் பேஷன்ட்டின் கை நரம்பிலிருந்து டியூப் வழியாக பிளட் மேலே ஏறிக்கொண்டிருக்க பேஷன்ட்டின் கை வீங்கிப் போயிருப்பது கண்டு அதிர்ந்தார். 


ஓடிச்சென்று டிரிப்ஸ் டியூப் வழியே பிளட் ஏறிக்கொண்டிருந்த கனெக்சனைக் கட் செய்தவர் பேஷன்ட்டின் வீங்கிய கைகளை மெதுவாகத் தடவிக் கொடுத்து வீக்கம் குறைய மாத்திரையை எடுத்து வந்து நோயாளியிடம் கொடுத்து சாப்பிட வைத்தார்.

அந்த வார்டு நர்ஸ் யாரென சுற்றுமுற்றும் தேடிப்பார்த்த ஸ்ரீஜா யாரையும் காணாததால் அதைப் பொருட்படுத்தாமல் தானே ஒவ்வொரு பேஷன்ட் அருகில் சென்று அவர்கள் தேவைகளைக் கேட்டுக் கேட்டு அக்கறையுடன் கவனித்தார் ஷ்ரீஜா.


சிறிது நேரத்திற்குப் பிறகு செல் போனில் யாரிடமோ சிரித்துப் பேசிய நிலையில் அங்கு வந்து சேர்ந்தார் நர்ஸ் ராணி.


ஐ. சி. யூ. வார்டில் அந்த நேரத்தில் ஷ்ரீஜாவை எதிர்பார்க்காத ராணி செல் தொடர்பைக் கட் பண்ணிவிட்டு என்ன என்பது போல் ஷ்ரீஜாவைப் பார்த்தார்.


சிஸ்டர் இவ்ளோ நேரம் எங்க போயிருந்தீங்க?

ஒரு போன் கால் வந்தது அதான் பேசிட்டிருந்தேன்.


நீங்க கதை பேசறதாயிருந்தா டியூட்டி முடிஞ்சு வீட்ல போய்ப் பேசுங்க. டியூட்டி நேரத்தில் அதுவும் இந்த ஐ. சி. யூ. வார்டில் ஒவ்வொரு பேஷன்ட்டும் எந்த நிலமையில் இருப்பாங்க, அவங்க தேவைகள் என்னனு உங்களுக்குத் தெரியாதா? இவ்வளவு அலட்சியமா பதில் சொல்றீங்க. வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது நன்றியோட உழைக்கப்பாருங்க, தன்னை மறந்து கத்தினார் ஸ்ரீஜா


சிஸ்டர் எதுக்கு நீங்க இப்போ இப்படிக் கத்துறீங்க?  ராணியும் பதிலுக்கு கத்தினார்.


ஏன் கத்தறேனா? இங்க பாருங்க. இந்தப்பேஷன்ட்க்கு நேற்று தான் சர்ஜரி ஆச்சு. லெப்ட் சைடு பிரெஸ்ட் கேன்சர் பேஷன்ட். ஸோ வலது கைல டிரிப்ஸ் போட்டு இருக்கு. நீங்க பண்ண அலட்சியத்தால் டிரிப்ஸ் முழுவதும் தீர்ந்து டியூப் வழியே அவங்க பிளட் மேல ஏறிட்டு இருந்தது. எவ்ளோ நேரம் பிளட் மேலே ஏறுச்சோ தெரியல. எதேச்சையா நான் இங்க வந்து பார்த்த நான் சலைன் டியூபை டிஸ்கனெக்ட் பண்ணேன். இவங்க கை வீங்கி இருப்பதால் இப்போ வேறு டிரிப்சும் ஏத்த முடியாது. இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப சாதாரண விஷயமாத் தெரியுதா?


அதோ அந்தப் பேஷன்ட்டப் பாருங்க. ரொம்ப நேரமா ரெஸ்ட் ரூம் போக முடியாம தவிச்சுட்டு இருந்தார். நானும் என்னால முடிந்த உதவிகளைச் செய்தேன். சிஸ்டர் நீங்க என்னைப்பத்தி என்ன வேணாப் பேசுங்க. ஐ டோன்ட் கேர். பட் நம்மை மட்டுமே நம்பி பல லட்சங்களைக் கொட்டிக்கொடுத்து வைத்தியம் பார்க்க வந்திருக்கும் இவங்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவுறது தான் நம்ம கடமை. நம்ம அஜாக்ரதையால யாருக்கும் எந்த பாதகமும் நேர்ந்துவிடக் கூடாது. ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டான்டு. உங்களை ஹர்ட் பண்ணிப்பேசுவது என் நோக்கம் அல்ல. தயவுசெய்து கொஞ்சம் டியூட்டி கான்ஷியஸோடு இருக்க ட்ரை பண்ணுங்க என்றுவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார் ஷ்ரீஜா.


அந்த வார்டை ஒட்டிய டியூட்டி டாக்டர்ஸ் அறையில் சர்ஜரி ஒன்றை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த டாக்டர் விக்னேஷ் அங்கே நடந்த விஷயங்கள், விவாதங்கள் அத்தனையும் கேட்டுக் கொண்டு இருந்ததை யாரும் அறியவில்லை.


இரண்டு தினங்களுக்குப்பிறகு...


ஷன்மதிக்கு உடல்நலம் சற்றே தேறியிருந்தது. இயல்பிலேயே கலகலப்பான சுபாவம் கொண்டவர் ஷன்மதி. ஐ. சி. யூ. வார்டுக்கு வந்து அட்மிட் ஆகியிருந்த நிலையில் அவருக்கு அருகேயிருந்த வைஷ்ணவியோடு மிகவும் நெருக்கமாகிவிட்டாள். இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சேர்ந்து அந்த அறைக்குள்ளேயே சிரித்துப்பேசுவதும், வாக்கிங் போவதும், பிஸியோதெரபி பயிற்சியைச் செய்வதும் வழக்கமாயிற்று. அந்த வார்டுக்கு வரும் டாக்டர்ஸ்சும் அவர்களைப் பார்த்து என்ன பிளான் பண்றீங்க ரெண்டு பேரும் எங்களுக்கும் சொல்லுங்க. வெரிகுட் ஆபரேஷன் பண்ணா சும்மா படுத்துட்டே இருக்கக்கூடாது. இப்படித்தான் உங்களைப்போல் எப்போதும் ஹேப்பியா இருக்கனும் ஓகே கேரிஆன் என்றுவிட்டுச் சென்றனர்.


ஷன்மதி, வைஷ்ணவியைப் பார்த்து நடக்க முடியாத நிலையில் இருந்த நோயாளிகள் கூட மெதுவாக எழுந்து நடைபயில முயற்சித்தனர். இரவு நேரங்களில் கூட ஷன்மதியும், வைஷ்ணவியும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் சிரித்துப்பேசுவதுடன் தன்னால் முடிந்த உதவிகளைப் பிற நோயாளிகளுக்குச் செய்து வந்தது கண்டு வியந்தனர் பிற நோயாளிகள்.


அன்று மாலை ஷன்மதிக்கும், வைஷ்ணவிக்கும் டிஸ்சார்ஜ் என்று சொல்லிப்போனார் ஒரு மருத்துவர். ஹாஸ்பிடலை விட்டு வெளியே போனால் போதும் என்றிருந்த ஷன்மதிக்கும், வைஷ்ணவிக்கும் அவர்கள் சேர்ந்திருந்த தருணங்கள் நினைவுக்கு வரவே பிரியப்போவதை எண்ணிக்கலங்கினர். ஆனாலும் மருத்துவமனை அதைவிட்டுப் போனால் நல்லது தான் என்று ஏதேதோ பேசிக்கொண்டு இருக்க அறைக்கதவைத் தட்டிக்கொண்டு அங்கே வந்தார் ஒரு பெண் மருத்துவர்.


ஹாய் ஐம் டாக்டர் நர்மதா. இந்த ஹாஸ்பிடல் பற்றிய உங்க ஃபீட் பேக், நிறை, குறைகளைச் சொல்லமுடியுமா? கேட்டார்.

அஃப்கோர்ஸ் டாக்டர். நான் சொல்றேன். இந்த ஹாஸ்பிடல் டாக்டர்ஸ் டிரீட்மென்ட் இதெல்லாம் ஓகே. கிளீனிங் ஒர்க் எல்லாம் சூப்பரா ண்றாங்க. பட் ஒரே ஒரு குறை தான் என்ற ஷன்மதி நிறுத்த..


பரவாயில்ல எதுவானாலும் சொல்லுங்க. உங்கள் குறை எதுவாக இருந்தாலும் நாங்க அதைச் சரி செய்கிறோம் என்றார் டாக்டர் நர்மதா புன்னகைத்தவாறு.


டாக்டர் இங்க வர்ற நோயாளிங்க பெரும்பாலும் வயதானவங்க. அவங்களுக்கு சீக்கிரமா டைஜெஸ்ட் ஆகுற மாதிரி காலை, இரவு டயட் தந்தால் நல்லா இருக்கும்.


காலை, இரவு இரண்டே இரண்டு இட்லி மட்டும் தரச்சொல்லுங்க டாக்டர். அதைவிட்டு எப்போ பார்த்தாலும் சம்பா கோதுமை கிச்சடி, சேமியா கிச்சடினு கொடுத்து நோயாளிகளைக் கொல்லாதீங்க ப்ளீஸ் டாக்டர் என ஷன்மதி சொன்ன தோரணை கேட்டு டாக்டர் நர்மதா உட்பட அங்கு வந்து சேர்ந்த ஸ்ரீஜாவும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டனர்.


யூ நோ ஒன்திங் உங்களுக்கு மட்டுமல்ல. எங்களுக்கும் இதே கிச்சடி டிபன் தான். உங்களைப்போல பல நோயாளிகளும் இட்லி தரச்சொல்லிக் கேட்கிறார்கள். பட் இந்த டிபன் விஷயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. இருந்தாலும் உங்க கோரிக்கையை நான் மேலிடத்தில் சொல்கிறேன் என்றுவிட்டு அகன்றார் டாக்டர் நர்மதா.


அங்கே அமைதியாக டிஸ்சார்ஜ் சம்மரியைப் பார்வை இட்டுக் கொண்டிருந்த ஸ்ரீஜாவை நெறுங்கினார் ஷன்மதி.


உங்க டிஸ்சார்ஜ் சம்மரியத்தான் சரிபார்த்துட்டு இருக்கேன். இன்னும் கொஞ்சம் டைம் ஆகும். ஸோ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்ற ஸ்ரீஜாவை நிறுத்தினாள் ஷன்மதி.


சிஸ்டர் நான் இங்க வந்த இந்த நான்கு நாட்களாக உங்களைத்தான் வாட்ச் பண்ணிட்டே இருந்தேன். எப்போதும் நீங்க முக மலர்ச்சியோடு பேஷன்ட் கூடவே டைம் ஸ்பென்ட் பண்றீங்க. மற்ற நர்ஸ்ங்க வேளைகளையும் நீங்களே செய்யறீங்க. ஐம் ரியலி ஸோ ப்ரவுட் ஆப் யூ. உங்களை மாதிரி தன்னலம் பாராமல் உழைக்கிற சிலராவது இருப்பதால் தான் இன்னும் மனிதம் உயிர்ப்போட இருக்கு. எனக்கு உங்க ஆட்டோகிராப் வேணும் சிஸ்டர் ப்ளீஸ் மறுக்காதீங்க கேட்டவாறு ஒரு சிறு டைரியை நீட்டினார் ஷன்மதி.


இந்த ஹாஸ்பிடல்ல எல்லாரும் என்னைத் திமிர் பிடிச்சவ, வாயாடினு சொல்லுவாங்க. நான் சாதாரண சீனியர் நர்சிங் சூபர்வைசர். என்கிட்ட ஆட்டோகிராப் கேக்குற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல. எவ்வளவோ பெரிய ஆட்கள் இருக்க போயும்போயும் என்கிட்ட ஆட்டோகிராப் கேக்குறீங்களே சிரித்தார் ஷ்ரீஜா.


சிஸ்டர் மத்தவங்க பார்வையில் நீங்கள் தவறாகத் தெரியலாம். பட் என்னோட பார்வையில் நீங்கள் ஒரு நடமாடும் தெய்வம். எதையும் எதிர்பாராமல் கடமையைக் கண்ணாகக் கொண்டு சேவை செய்யும் நீங்கள்  நிச்சயமாக ஒரு சாதாரணப் பெண்ணல்ல தேவதை ஆமாம் சிஸ்டர் நீங்கள் ஒரு பெண் தேவதை. நீங்க சொன்ன மாதிரி இந்த ஹாஸ்பிடல்ல எத்தனையோ பெரிய மனிதர்கள்!! இருக்கலாம் தான். பட் மனித நேயத்தால் என் மனம் கவர்ந்த தேவதை நீங்கள். அதனால தான் எனக்கு உங்க ஆட்டோகிராப் கண்டிப்பாகத் தேவை என்றார் ஷன்மதி.


அம்மா நான் முன்பு பத்து வருடங்கள் கேரளாவில் உள்ள ஈ. எஸ். ஐ. ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணேன். என் வேலையில் நான் ஸ்டிரைட் ஃபார்வேடாக இருந்ததால் எனக்கு அங்கேயும் நல்ல பெயர் கிடைக்கல. பல மருத்துவமனைக்கு விரட்டியடிக்கப்பட்டேன். என் கண்முன்னே நடக்கும் அக்ரமங்களைக் கண்டும் காணாதும் போலிருக்க என்னால முடியாது. இந்த செவிலியர் யூனிபார்முக்குனு ஒரு புனிதம் இருக்கு. அதைக் காப்பாற்ற முடியலேனாலும் கூடப் பரவாயில்ல. கெடுத்துக்கக்கூடாதுனு நினைக்கிறவ நான். அப்படித்தான் இங்கேயும் நான் ஒரு செவிலித்தாயாகவே என் கடமையைச் செய்கிறேன். அது பிடிக்காத சிலர் எனக்குப் பின்னாடி என்னைப் பற்றிப்பலவாறாக அவதூறு பேசுவாங்க. இதில் என் தவறு ஏதும் இல்லாத பட்சத்தில் நான் எதையும் கண்டுக்காம என் வேலையைப் பார்த்துட்டுப் போய்ட்டே இருப்பேன். இன்னிக்கு நீங்க என்னைப் பாராட்டுறீங்க பாருங்க இது தான் என் சேவைக்கு கிடைத்த சன்மானம்.


இதைவிட எனக்குப் பெரிய சந்தோசம் தரும் விஷயம் வேறெதுவும் இல்லை. தேங்க்ஸ் பார் யுவர் கைன்ட்னெஸ் என்றவாறு ஷன்மதி நீட்டிய டைரியில் வாழ்க நலளமுடன், வளமுடன் என்று எழுதிக் கையெழுத்திட்டுத் தந்து சிரிப்புடன் திரும்பியவள் அதிர்ந்தார். 

அங்கே டாக்டர் விக்னேஷ் புன்னகைத்தவாறு நின்று கொண்டு இருந்தார்.




ஐம் சாரி ஸ்ரீஜா. இந்த ஹாஸ்பிடல்ல பலர் உங்களைப்பற்றி என்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணி உங்களைப் பணிநீக்கம் செய்யச்சொன்னாங்க. அப்படி அவங்க கம்ப்ளெய்ண்ட் பண்ற அளவுக்கு நீங்கள் என்ன தவறு செய்திருப்பீர்கள்? என்ற எண்ணத்தில் நானும் உங்களுக்குத் தெரியாமலே உங்களைத் தொடர்ந்து வாட்ச் பண்ணேன். நேர்மையா டியூட்டி கான்ஷியஸோட, டியூட்டில நீங்க காட்டும் சேக்ரிஃபைஸ் தான் பல பொறாமைக் கண்களுக்குத் தவறாகத் தெரியுதுனு உங்கள் ஒவ்வொரு ஆக்டிவிடீஸ் பார்த்து நான் தெரிஞ்சிக்கிட்டேன். இந்த ஹாஸ்பிடல்க்கு நீங்க சீனியர் நர்ஸாக கிடைத்தது பெரிய வரம். இனி நீங்கள் எதற்காகவும், யாருக்காகவும் இங்கே பயந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஷ்ரீஜா உங்கள் திறமைக்குத் தகுந்த வெகுமானம், பதவி உயர்வு இரண்டு தினங்களில் உங்கள் கைக்கு வந்து சேரும். இனி எப்போதும் நீங்கள் என்னோடு பயணிக்கத் தயாராக இருங்கள். 

ஆல் தி பெஸ்ட் ஸ்ரீஜா என அவரிடம் கைகுலுக்கிவிட்டுச் சென்றார் டாக்டர் விக்னேஷ்.


நடப்பது எல்லாம் கனவா, நனவா? என்ற குழப்பத்தில் இருந்தவளை கைதொட்டு இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார் ஷன்மதி.


சிஸ்டர் இது தான் நிஜம். இது உங்க நேர்மைக்குக் கிடைத்த பரிசு. ஐ லவ் யூ சிஸ்டர். ஃபார் யுவர் கைன்டு இன்ஃபர்மேஷன் ஐம் ஒன் ஆப் எ தமிழ் ஸ்டோரி ரைட்டர். வித் யுவர் பர்மிஷன் இந்த நான்கு நாட்களில் உங்களைப்பற்றி நான் கவனித்த, சேகரித்த விஷயங்களை வைத்து உங்களைப்பற்றி நான் உங்க பெயரில் ஓர் கதை எழுதலாமா? கேட்டார் ஷன்மதி.


நான் மறுத்தால் மட்டும் என்னைநீங்கள் விடவா போகிறீர்கள். கோ அகெட். பர்மிஷன் கிராண்ட்டடு.


இந்தாங்க உங்க டிஸ்சார்ஜ் சம்மரி. நௌ யூ அன்ட் வைஷ்ணவி போத் ஆர் டிஸ்சார்ஜ்டு. நீங்கள் இப்போதே கிளம்பலாம்.  என்னைப் பற்றி கதை எழுதுகிறேன்ற சாக்கில் உடல் நலத்தைக் கெடுத்துக்காதீங்க. டேக் கேர் ஆப் யுவர் ஹெல்த், அன்டு டேக் ரெஸ்ட். மீண்டும் நோயாளியாக இங்கே வரவே கூடாது ஓகே என்று ஸ்ரீஜாவிடைகொடுக்க அப்படியே ஆகட்டும் என்று ஷன்மதியும், வைஷ்ணவியும் மகிழ்ச்சியோடு தலையசைக்க மகிழ்வித்து மகிழும் அந்த செவிலித்தாய் ஷ்ரீஜா புன்னகையோடு கடந்தார்.


அவரது தலை புள்ளியாகி மறையும் வரை காத்திருந்து பெண் தேவதையே நீ வாழ்க என்று மனதார வாழ்த்தியபடி ஐ. சி. யூ. அறையை விட்டு வெளியேறிய ஷன்மதியும், வைஷ்ணவியும் காத்திருந்த தங்கள் சொந்தங்களோடு கலந்து புறப்பட்டனர்.


(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர்.  பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்)