விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

Su.tha Arivalagan
Oct 04, 2025,12:39 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சரமாரியான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. வருகிறவர் போகிறவர் எல்லாம் மிகக் கடுமையாக விஜய்யை விமர்சித்துப் பேசுவதை அவரது ரசிகர்களும், தொண்டர்களும் வேதனையுடன் பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த நிலைக்கு வேறு யாருமே காரணம் அல்ல.. சாட்சாத் விஜய் மட்டுமே காரணம்.


விஜய் கட்சி ஆரம்பித்தது, தனது கொள்கைகளைச் சொன்னது, யார் யார் தனது எதிரிகள் என்று வரையறுத்துக் கொண்டது எல்லாமே சரிதான்.. மாநாடுகள் நடத்தியதும் கூட இயல்பாகவே இருந்தது. ஆனால் பிரச்சாரக் கூட்டங்கள் தொடங்கிய பிறகுதான் அவருக்கான உண்மையான சோதனையும் சிக்கலும் ஆரம்பித்தது. இதை அவர் திருச்சியிலேயே உணர்ந்திருக்க வேண்டும். திருச்சியை அவரது தொண்டர் படை ஸ்தம்பிக்க வைத்தபோதே அவர் கவலைப்பட்டிருக்க வேண்டும்.


இப்படி சாலை சாலையாக தெருத் தெருவாக மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைக்கிறோமே இது சரியா.. மக்கள் நம் மீது அதிருப்தி அடைவார்களே.. மக்களுக்குப் பாதிப்பு வருமே.. என்று அவர் கவலைப்பட்டிருக்க வேண்டும். தனது பஸ் அதி வேகமாக போய்க் கொண்டிருக்கும்போது அபாயகரமான வகையில் அதைத் துரத்திக் கொண்டு பைக்குகளில் தொண்டர்கள் உயிரை வெறுத்தபடி ஓட்டி வருவதைப் பார்த்தபோது அவர் பதறியிருக்க வேண்டும். ரசிகர்களை தொண்டர்களாக்கியிருக்க வேண்டும்.. இப்படி நிறைய நிறைய அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல் விட்டதுதான் விஜய் செய்த பெரிய தவறுகளில் ஒன்று.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள் என்று பார்த்தால் விரல் விட்டுக் கூட எண்ண முடியவில்லை. காரணம், விஜய்யே கூட இன்னும் முழுமையான, பக்குவமான தலைவராக மாறவில்லை. கரூர் சம்பவத்திற்குப் பிறகு அவர் போட்ட வீடியோவில் அவரே அதை சுட்டிக் காட்டி விட்டார். விஜய் கட்சியைப் பொறுத்தவரை எக்கச்சக்கமான தொண்டர்கள் உள்ளனர். டவுட்டே இல்லை. பொதுமக்களிலும் கூட அவருக்கான அனுதாபிகள் நிறையவே உள்ளனர். அவரது கட்சியினர் கூறுவது போல வீட்டுக்கு வீடு அவருக்கு குறைந்தது ஒரு ஓட்டு உள்ளது. அதிலும் சந்தேகம்  இல்லை. ஆனால் கரூர் சம்பவத்திற்குப் பிறகு இதில் மாற்றம் வரும் அபாயம் உள்ளது. அதை சரி செய்ய விஜய் உடனடியாக சில காரியங்களைச் செய்தாக வேண்டும்.




1. கட்சிக்குள் நிறைய அனுபவம் வாய்ந்த தலைவர்களைக் கொண்டு வர வேண்டும். பிற கட்சிகளில் நிறைய தலைவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், சரியான வாய்ப்புகள் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களில் நல்ல திறமையான தலைவர்களை உடனடியாக தவெகவுக்குத் தூக்கி வர வேண்டும்.


2.தற்போது தவெகவில் 2ம் நிலை தலைவர்களாக அடையாளம் காட்டப்படும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா போன்றோருக்கு வேறு வேலை கொடுத்து அனுப்பி விட வேண்டும். அவர்கள் முழுமையான தோல்வியைத் தழுவியுள்ளனர். விஜய்க்குப் பாதுகாப்பாக என்ன தேவை என்று பார்த்தார்களே தவிர தொண்டர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அவர்கள் செய்யத் தவறி விட்டனர்.


3. அரசியல் ஆலோசகர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என்ற பெயரில் விஜய்யுடன் இருப்பவர்களையும் விஜய் உடனடியாக மாற்ற வேண்டும். பிரஷாந்த் கிஷோர் போன்ற கள உத்தி அனுபவத்தில் தலை சிறந்தவர்களை உடன் வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சீனியர் அரசியல்வாதிகளின் ஆலோசனைப்படி நடக்க முன்வரலாம். விஜயகாந்த்தின் ஆரம்ப கால அரசியலை செதுக்கி சிறப்பாக மாற்றிய பெருமை பண்ருட்டி ராமச்சந்திரனுக்கே உண்டு. வேறு எந்த சோ கால்டு அரசியல் உத்தி வகுப்பாளர்களையும் விஜயகாந்த் நாடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


4. தனது ரசிகர்கள், தொண்டர்களிடம் நிச்சயம் விஜய் கண்டிப்பு காட்டியே தீர வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது, அவரது தொண்டர்களுக்கும் நல்லது. உட்கார் என்றால் அவர்கள் உட்கார வேண்டும். அமைதியாக இருங்கள் என்றால் அமைதியாக இருக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் விஜய் தலைவராக முடியாது. நடிகராகவே இருக்க முடியும்.




5. ஒரு தலைவராக தன்னை உடனடியாக மாற்றிக் கொள்ள முயல வேண்டும் விஜய். விமர்சனம், எதிர்ப்புக்குப் பயந்து பதுங்குவது நல்ல தலைவனுக்கு அழகல்ல. தவறு என்றால் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிப்படையான ஒரு தலைவராக அவர் மாறுவது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, அவரது இமேஜுக்கும் ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லாவிட்டால் எல்லாமே டேமேஜாகிப் போய் விடும்.


6. செய்தியாளர்களை விஜய் சந்திக்கத் தொடங்க வேண்டும். அவர்கள் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள். குண்டக்க மண்டக்க கேட்கத்தான் செய்வார்கள். ஆனால் சமாளிக்க வேண்டும், பதில் தர வேண்டும், பதில் தர முடியாவிட்டால் ஏதாவது திசை திருப்பும் பதிலை சொல்லியாவது சமாளிக்கப் பழக வேண்டும். செய்தியாளர்கள் சந்திப்பு விஜய்யை, மக்களிடம் படு வேகமாக கொண்டு செல்ல உதவும். சீமான், அண்ணாமலை போன்றோர் மக்களிடம் பிரபலமானது செய்தியாளர்கள் சந்திப்பில்தான். இதை விஜய் மனதில் கொள்ள வேண்டும்.


7. முதலில் விஜய் தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பேசப் பழக வேண்டும். பேப்பரைத் தூக்கிப் போட்டு விட்டு கலகலவென பேசப் பழகுவதுதான் ஒரு தலைவனுக்குரிய முதல் அடிப்படைத் தகுதி. தேவையான விஷயங்களுக்கு குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் எல்லாவற்றையுமே பேப்பர் பார்த்துதான் படிப்பேன் என்றால் தலைவனாக நீடிக்க முடியாது.


விஜய் நிறைய நிறைய மாற வேண்டியுள்ளது. மக்கள் அவரை விரைவில் மன்னிப்பார்கள், கரூர் சம்பவத்தைக் கூட மறந்து விடுவார்கள்..  ஆனால் விஜய் மாறாவிட்டால் யாருமே எதுவுமே செய்ய முடியாது. இதை விஜய் உணர வேண்டும்.. அல்லது விஜய்யின் உண்மையான நலம் விரும்பிகள் யாராவது இதை அவரிடம் தைரியமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.


தவெக தொடர்பான செய்திகளை படிக்க இங்கு சொடுக்கவும்