கரூர் சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல.. தவெக முறையீடு.. நாளை மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் விசாரணை

Su.tha Arivalagan
Sep 28, 2025,01:31 PM IST
சென்னை: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை நேரில் சந்தித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது எதிர்பாராத விபத்து அல்ல என்று தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதி தண்டபாணி இல்லத்திற்குச் சென்று தவெக சார்பில் இன்று கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது.  அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தவெக தரப்பு முன்வைத்தது.

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றைப்  பாதுகாக்க உத்தரவிடக் கோரி மனு செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். எனவே இதை தனி அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தவெக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.





இதையடுத்து இந்த முறையீடு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நாளை விசாரிக்கப்படும் என்று நீதிபதி தண்டபாணி தெரிவித்ததாக தவெக தரப்பில் செய்தியாளர்களிடம் நிர்மல்குமார் தெரிவித்தார்.  மேலும் தவெக தரப்பில் சிபிஐ விசாரணையும் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே் இந்த விவகாரம் எந்த திசையில் செல்லும் என்பது நாளை தெரிய வரும்.

முன்னதாக கரூரில் நேற்று நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நேற்று இரவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரும் நேற்று நள்ளிரவுக்கு மேல் கரூர் புறப்பட்டு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.