- "பக்தித் தென்றல்" பாவை.பு
சித்தர்கள் தன்னை அறிந்தவர்கள்,முக்காலமும் உணர்ந்தவர்கள், விதியை மாற்றக்கூடய வல்லமை கொண்டவர்கள், தனது ஐம்புலன்களையும் அடக்கி அழிவில்லா உடலை பெற்றவர்கள். இறைவனோடு இரண்டறக் கலந்து அவரோடு ஐக்கியம் ஆனவர்கள். அனைத்து வித சித்துக்களையும் கற்று பிறர் நலனுக்காக வாழ்ந்தவர்கள் சித்தமகாபுருஷர்கள்.
சித்தர்களின் ஜீவ சமாதிகள் பொதுவாக சிவாலயமாக இருக்கும் இல்லையென்றால் அதன் அருகிலேயே அமைந்திருக்கும்... பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவறையில் தான் சித்தர்கள் உறைந்து இருப்பார்கள் என்று பொதுவாக சொன்னாலும் சித்தர்களின் ஜீவ ஓட்டத்தை அறிவது காணல் நீர் போன்றது.
சித்தர்கள் பழமையான சிவாலயத்தின் கருவறை மட்டுமின்றி ஆலயத்தின் எந்தவொரு இடத்தில் வேண்டுமானாலும் ஜீவ சமாதி ஆகியிருக்கலாம், ஆலயத்தில் இவர்களின் தெய்வீக ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அளவு வரை பரவியுள்ளது. சில சித்தர்கள் ஆலயங்களில் இல்லாமல் மலை குகை போன்ற இடங்களிலும் ஜீவ சமாதி அடைந்துள்ளார்கள்.
சித்தர்களின் ஜீவ சமாதியில் அதிகளவில் தெய்வீக ஆற்றல் வெளிப்படுவதால், அதனை கிரகித்துக் கொள்ள அனைவருக்கும் ஜீவசமாதி வழிபாடு மிகவும் அவசியமாகிறது. சென்ற பதிவில் சித்தர்கள் பற்றியும் அவர்களின் தவமும் அதன் வலிமையையும் பார்த்தோம்..
இந்த பதிவில் சித்தர்களை வழிபடும் முறை மற்றும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் உரிய சித்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்...

1.அஸ்வினி நட்சத்திரம் -காளங்கி நாதர் சித்தர். இவர் போகர் சித்தரின் குரு, திருமூலரின் சீடர் ஆவார்.. இவரின் ஜீவ சமாதி சேலம் கஞ்சமலை சித்தர் கோவிலில் காளங்கி நாதர், சித்தேஸ்வர சுவாமியாக அருள்பாலிக்கிறார். மற்றும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திலும் ஒளி வடிவில் உள்ளார். கஞ்சமலை பெளர்ணமி கிரிவலம் மிகவும் பிரபலமானது.
2.பரணி நட்சத்திரம்-போகர் சித்தர் இவரின் ஜீவ சமாதி பழனி தண்டாயுதபாணி மூலவர் சன்னதிக்கு அருகில் உள்ளது. இவர் புலிப்பாணி, கொங்கணவர், கருவூரார், இடைக்காடர் சித்தர்களுக்கு குரு ஆவார். பழனி தண்டாயுதபாணி நவ பாஷாண சிலையை உருவாக்கியவர். இது செவ்வாய் தேஷ நிவர்த்தி தலமாகும். காளங்கிநாதர் மற்றும் அகத்தியர் இவரின் குருவாவர்.
3.கிருத்திகை நட்சத்திரம்- ரோமரிஷி இவர் ஜீவ சமாதி அடையாமல் நேரடியாக கைலாயம் சென்றவர் என்றும், கும்பகோணம் திருவிடைமருதூர் அடுத்த கூந்தலூரில் ஜீவ சமாதி ஆனார் என்றும் கூறுகிறார்கள். இத்தலத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் உண்டு நெடுங்காலம் இங்கு தவம் செய்தவர். இது சனி மற்றும் செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகும். இவரை நினைத்தும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். இவரின் குருநாதர் காகபுசுண்டர் சித்தர் ஆவார். இவருக்கு 12 தலைமுறை சீடர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இவரின் பெயர்களோ நேரடி சீடர்களின் பெயர்களோ எங்கும் குறிப்பிட படவில்லை. இவர் சந்திர கரகத்திற்கு உரிய சித்தர். சாப விமோசனம் அளிப்பவர்.
4.ரோகினி நட்சத்திரம்- மச்சமுனி சித்தர்-மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் இவரின் ஜீவ சமாதி உள்ளது. பின்னக்கீசர், காகபுசுண்டர், மற்றும் அகத்தியரை தனது குருவாக கொண்டவர். கோரக்கர் சித்தர் இவரின் சீடர் ஆவார்.
5.மிருகசீரிஷம் நட்சத்திரம்- பாம்பாட்டி சித்தர் - தென்காசி சங்கரன்கோவிலில் சங்கரநாராயணன் கோவிலில் இருந்து புளியங்குடி செல்லும் சாலையில் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இவரின் ஜீவ சமாதி. இவரின் குருவான சட்டமுனி சித்தரையும் திருவரங்கம் சென்று வணங்கலாம்.
6.திருவாதிரை நட்சத்திரம்- இடைக்காடர் சித்தர் திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்திலும் -திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திலும் ஜீவ சமாதி அடைந்தார் என கூறுகின்றனர்.. இதில் போகர் தனது ஜனன சாகரத்தில் திருவிடைமருதூரை குறிப்பிடுகிறார்... சித்தர் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் ஆலயத்தில் சமாதி அடைந்ததாகவும் கூறுகின்றனர். எனினும் இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையை உருவாக்கி ஆலயத்தின் கருவறையிலேயே ஜீவசமாதி ஆனார் என்று நம்பப்படுகிறது. இவரின் சீடர் கொங்கணர் சித்தர் ஆவார்.
7. புனர்பூசம் நட்சத்திரம்-தன்வந்திரி சித்தர் - இவரின் ஜீவ சமாதி சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இவர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார், தேவர்களின் மருத்துவராகவும் ஆயுர்வேதத்தின் தந்தையாகவும் போற்றப்படுகிறார். இவ்வாலயத்தில் நீண்ட ஆயுள் மற்றும் நோய் தீர்க்கும் மிருந்யுஞ்சய ஹோமம் பிரசித்திபெற்று. பகவான் ஸ்ரீ ராமரை வழிபடுதல் மூலமும் இவரின் ஆசியை பெறலாம்.
8.பூசம் நட்சத்திரம் - கமலமுனி சித்தர் - இவரின் ஜீவ சமாதி திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் மேற்கு பகுதியில் அம்மன் மற்றும் ஆனந்தேஸ்வரர் சன்னதிக்கு அருகே உள்ளது. இவர் அகத்தியர் மற்றும் போகரின் சீடர் ஆவார்.
9. ஆயில்யம் நட்சத்திரம்- அகத்தியர் சித்தர்- இவரின் ஜீவ சமாதி கேரளம் திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமிகள் கோவிலிலும், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலிலும் இவரின் ஒளி வட்டம் குற்றாலம் பொதிகை மலையிலும் உள்ளதாக சித்தர் மரபுகள் கூறுகிறது.
10. மகம் நட்சத்திரம்- சிவவாக்கியர் சித்தர் - இவரின் ஜீவ சமாதி எங்குள்ளது என்ற உறுதியான குறிப்புகள் இல்லை..எனினும் இவர் திருப்பூர் காங்கேயம் அருகே சிவன் மலை சுப்பிரமணியர் கோயிலில் சமாதி அடைந்ததாகவும், புதுக்கோட்டை பெருங்களூர் உருமநாதர் தலத்தையும் , கும்பகோணம் நாகேஸ்வரர் தலத்தையும் சிவவாக்கியருடன் தொடர்புடையதாகவும் சிலர் கூறுகின்றனர். இவரின் குரு உய்க்கொண்டார்.
11. பூரம் நட்சத்திரம் - ராமதேவர் சித்தர்- இவரது ஜீவசமாதி அரபு நாடு மெக்காவிலும், மதுரை அழகர் மலையிலும் உள்ளது. சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம் என்பதால் இவரை பூரம் நட்சத்திரத்திலும் வெள்ளிக்கிழமையிலும் வழிப்படலாம். இவரின் குருவான புலஸ்தியர் சித்தரை வழிபடுதலும் இந்த நட்சத்திரக் காரர்களுக்கு சிறப்பு தான். புலஸ்தியர் சித்தரின் ஜீவ சமாதி திருநெல்வேலி பாபநாசம் பாபநாசநாதர் சுவாமிகள் ஆலயத்திலும், புதுக்கோட்டை ஆவுடையார்கோயிலும் உள்ளதாக கூறப்படுகிறது. அகத்தியரை குருவாக கொண்ட புலஸ்தியர் சித்தர் கமலமுனி சித்தரின் பேரன் என்று போகர் சித்தர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
12. உத்திரம் நட்சத்திரம்- காகபுஜண்டர் சித்தர் -திருச்சி உறையூரிலும், சின்ன சேலம் தென் பொன்பரப்பி உள்ள சொர்ணபுரீசுவரர் ஆலயத்திலும் இவரது ஜீவ சமாதி உள்ளது. இவர் அருளிய மிகவும் சக்திவாய்ந்த மந்திரம் தான் நற்பவி - அதாவது நன்மை உண்டாகட்டும். காகபுஜண்டர் வாக்கின்படி இந்த மந்திரம் புருவ மத்தியிலுள்ள ஏழு திரைகளைத் தாண்டி பேரின்ப நிலையை அடைய உதவுகிறது.
13. ஹஸ்தம் நட்சத்திரம்- கருவூரார் சித்தர் -இவரின் ஜீவ சமாதி கருவூர் கல்யாண பசுபதீஸ்சுவரர் கோவிலில் உள்ளது. இவரின் ஒளி தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து செல்வதாக சித்தர் மரபு கூறுகிறது. இவரின் குருவாக போகர் சித்தரும், சீடராக இடைக்காட்டுச் சித்தரையும் கொண்டவர்.. இவர் தஞ்சை பெரிய கோவில் அஷ்டபந்தன மருந்துப் பணியிலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதிலும் முக்கிய பங்காற்றியவர்... ராஜராஜ சோழன் இவரையே தனது குருவாக ஏற்று கொண்டு அவரின் வழிக்காட்டுதலின் படியே தனது பணிகளை சிறப்புற செய்தார்.
14. சித்திரை நட்சத்திரம் - புண்ணாக்கிசர் சித்தர் -ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள குகையில் நீண்ட நெடுங்காலம் தவம் செய்து அங்கேயே இவர் ஜீவசமாதியும் அடைந்துள்ளார். இவரை சென்னிமலை சித்தர் என்றும் கூறுகின்றனர். போகர் மற்றும் காசபுஜண்டரின் சீடராக இருந்தவர்.
15. சுவாதி நட்சத்திரம்- புலிப்பாணி சித்தர் இவரின் ஜீவசமாதி பழனி வைக்காவூரில் உள்ளது.. இவர் போகரின் சீடர் ஆவார். போகரின் அறிவுறுத்தலின்படி புலிப்பாணியின் வழி தோன்றியவர்களே இன்றும் பழனி தண்டாயுதபாணி நவ பாஷாண சிலைக்கு பூஜை முறைகளை மேற்கொள்கின்றனர்.
16. விசாகம் நட்சத்திரம்- குதம்பை சித்தர். இவர் மாயவரம் மயூரநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு அருகில் இவரது ஜீவ சமாதி உள்ளது. இவர் தட்சிணாமூர்த்தியையும் அகத்தியரையும் தனது குருவாக கொண்டவர்.
17. அனுஷம் நட்சத்திரம்- வால்மீகி சித்தர்- திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோவிலில் இவரது ஜீவ சமாதி உள்ளது. நாரத முனிவரின் சீடரான இவர் பரத்வாஜ் முனிவருக்கு குரு ஆவார்.
18. கேட்டை நட்சத்திரம் - பகவான் வியாசர் - இவர் காற்றோடு கலந்தவர். இவரை நினைத்து தீபம் ஏற்றி வியாசரையும் இந்திரனையும் வழிபடுதலோடு, செவ்வாய்க்கிழமையும் கேட்டை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாட்களில் வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பை தரும். (கேட்டை செவ்வாய் க்கு உரிய நட்சத்திரம் இதன் அதிபதி இந்திரன்) மதுரை திருவண்ணாமலையில் இந்திரலிங்கம் உள்ளது.
19. மூலம் நட்சத்திரம் - பதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடராஜர் சன்னதி பின்புறம் இவரது ஜீவசமாதி உள்ளது. இவர் நந்தி தேவனிடம் யோகக்கலை பயின்றவர்.. ஆதிசேஷனின் அவதாரம் ஆவார். ராமேஸ்வரம் தவிர திருச்சி அருகே திருப்பத்தூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திலும் பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதி உள்ளதாக கூறப்படுகிறது.
20. பூராடம் நட்சத்திரம் - இராமேதவர் சித்தர் - மதுரை அழகர் மலை உச்சியில் பழமுதிர்சோலை க்கு அருகே உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோயிலை கடந்து மேல் பகுதியில் இவரின் ஜீவ சமாதி உள்ளது. இவர் போகரின் சீடர் ஆவார்.
21. உத்திராடம் நட்சத்திரம் - கொங்கணர் சித்தர் - திருப்பதி - கோவில் குலத்தில் தெற்கு பகுதியில் உரைந்துள்ளதாக கூறுவர்.
22. திருவோணம் நட்சத்திரம் - தட்சணாமூர்த்தி சுவாமிகள் -இவரின் ஜீவ சமாதி புதுச்சேரி அருகில் பன்னித்தென்றல் என்ற இடத்தில் உள்ளது. திருவோணம் நட்சத்திரம் அன்று பெருமாள் கோவில் அல்லது தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
23. அவிட்டம் நட்சத்திரம் - திருமூலர் சித்தர் - இவரின் ஜீவ சமாதி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உள் அமைந்துள்ளது. திருமூலர் மூன்று இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக கூறுகிறார்கள். தில்லை நடராஜர் கோயில், மயிலாடுதுறை குத்தாலம் அருகே கோமுக்தீஸ்வரர் கோவில் மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் கோவிலிலும் ஜீவ சமாதி அடைந்ததாக குறிப்பிடுகிறார்கள்.
24. சதயம் நட்சத்திரம் - கவுபாலர் சித்தர் - இவரின் ஜீவ சமாதி அடைந்த இடம் சரியாக தெரியவில்லை.. மானசீகமாக இவரை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
25. பூரட்டாதி நட்சத்திரம் - ஜோதி முனி சித்தர் - இவர் ஜோதி வடிவில் ஜீவனாக உள்ளதால் தீபம் ஏற்றி இவரை மனதார நினைத்து வழிப்படலாம். மேலும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சித்தர் திருமூலர், தட்சணாமூர்த்தி சுவாமிகள், நடராஜர் சுவாமிகள், சுந்தரானந்தர் சுவாமிகள் போன்ற சித்தர்களையும் வழிப்படலாம்.
26. உத்திரட்டாதி நட்சத்திரம் - டமரகர் சித்தர் -தன்னை காற்றில் கரைத்தவர், தீபம் ஏற்றி ஜோதி வழிபாடு செய்யலாம்..
27. ரேவதி நட்சத்திரம் - சுந்தரானந்தர் சித்தர்- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கு வாசல் அருகில் முக்குறுணி விநாயகர் சந்நிதிக்கு இடதுபுறம் இவரின் ஜீவ சமாதி உள்ளது. போகர் மற்றும் அகத்தியரின் சீடரான இவர் சட்டை முனி சித்தரிடம் பல சித்துகளை கற்று தீட்சை பெற்றவர்...
சித்தர்களை வழிபடும் முறை
சித்தர்கள் சூட்சம உடலுடன் அழிவின்றி வாழ்பவர்கள், அதித தெய்வீக ஆற்றலை பெற்று உலக நலனுக்காக தன்னை தியாகம் செய்தவர்கள். எப்போதும் கடவுளிடம் நேரடி தொடர்பை கொண்டவர்கள்.. இதனால் அவர்களின் ஜீவசமாதியில் தெய்வீக சக்தி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்...
இந்த ஆற்றலை நாம் பெற, நம் கர்ம வினைகளின் தாக்கம் குறைந்து நிம்மதியாக நிறைவான வாழ்க்கையை வாழ, ஜீவ சமாதி அடைந்த சித்தர்களை வழிபட்டு வர வாழ்வின் பயனை பெறலாம்.
மானிடராக பிறந்த நாம் அனைவரும் ஏதோ ஒரு நட்சத்திரத்தில் தான் பிறந்திருப்போம்.. அதே நட்சத்திரத்தில் அவதரித்த சித்தர்களை அவர்கள் ஜீவ சமாதி முன் நமது ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபடுவது மிகவும் சிறப்பானது.
இதேபோல் பெளர்ணமி அம்மாவாசை வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை போன்ற விசேஷ நாட்களிலும் வழிபாடு செய்யலாம்.
அடிக்கடி ஜீவ சமாதி சென்று தரிசிக்க முடியாதவர்கள் வருடம் ஒருமுறையாவது நேரில் சென்று தரிசிக்க வேண்டும்..மற்ற நாட்களில் தினமும் வீட்டில் நம்குறிய சித்தரை நினைத்து தீபம் ஏற்றி மனதார அவரின் பெயரை 108 முறை சொல்லி வழிபாட்டு வரலாம்.
சித்தர் ஜீவ சமாதி முன் 9 தேங்காய் மூடியில் சுத்தமான பசும் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். முடியாதவர்கள் தேங்காய் எண்ணெயோ அல்லது நல்லெண்ணெயிலேயோ தீபம் ஏற்றலாம்..
சித்தர்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமானது. இதேபோல் நமது குலத்தெய்வத்திற்கும் காலபைரவருக்கும் தேங்காய் தீபம் ஏற்றுவது சிறப்பானது.. நாம் எந்தவொரு ஆலயத்திற்கோ ஜீவ சமாதிக்கோ வழிபாடு செய்யும் போது குறைந்தது 2 முதல் 4 மணிநேரமாவது அங்கு அமர்ந்து தீயானமே அல்லது அவர்களின் மந்திரமோ சொல்ல வேண்டும். நாம் எவ்வளவு நேரம் அங்கு அமர்ந்து இருக்கிறோமோ அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்...
சித்தர்கள் சூட்சும ரூபத்தில் ஜீவ சமாதியில் இருந்து அருள்வதால் நாம் நீண்ட நேரம் அங்கு இருக்கும் போது தான் அவர்களின் தெய்வீக ஆற்றல் நம் நாடி நரம்புகளில் ஊடுருவி நமது உடலையும் மனதையும் சமநிலைப்படுத்துகிறது..
நாம் சித்தர் சமாதியில் கிழக்கு நோக்கி அமர்ந்து நமது நெற்றிக்கண் முன் அந்த சித்தரின் உருவத்தை நிலைநிறுத்தி தியானம் செய்யும் போது குண்டலினி சக்தி மேல் எழும்பி மன அழுத்தத்தை நீக்கி ஆழ்ந்த மன அமைதியையும் நமக்குள்ளே தெய்வீக ஆற்றலையும் தருகிறது.
மனதின் ஓட்டம் அடங்கும் நிலையில் மட்டுமே உள்ளிருக்கும் இறையின் ஓட்டம் தொடங்கும்
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
மஞ்சள் மாநகரம் ஈரோடு மாநகரின் மாபெரும் பெரிய மாரியம்மன் திருவிழா
தமிழ்நாட்டில் துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
என்ன சொல்றீங்க?...ஆப்பிள் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள்...நொடிக்கு நொடி மாறும் அரசியல் களம்
27 நட்சத்திரங்களும் அதற்குரிய சித்தர்களும்!
{{comments.comment}}