தமிழ்.. உயிரையே மெருகேற்றும் அமிழ்து!

Jun 19, 2026,11:47 AM IST

- அ. தாமஸ்


தமிழ் என் உயிரையே மெருகேற்றும் அமிழ்து.

அயல்மொழி கற்றேன் ஆளுமை கிடைத்தது; 

எம் தமிழ் மொழி கற்றேன் அகிலமே கிடைத்தது;

உலகின் மொழிகள் 7000 இருந்தும் செம்மொழிகள் ஏழு -அதில் எம்மொழியின் வரலாறு கேளு .


செம்மொழிக்குத் தேவை தகுதிகள் பதினொன்று -அவை 

அனைத்தையும் பெற்று நின்றது எம் தமிழ் மொழி நன்று.

அறம் பொருள் இன்பம் வீடு  கொண்டது  தமிழ் ;

கிமு ஆறாம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் அதன் தொன்மை பேசும்-ஆம் 

இன்றல்ல நேற்றல்ல மூவாயிரம் ஆண்டுகளாய் நின்று பேசும் உயர் மொழியே

எம் தமிழ்மொழி-அது மொழி மட்டுமல்ல  என் உயிர் .


பெண்ணுக்கு உரிமை கோருகிறோம் இன்று ; 




2000 ஆண்டுகளுக்கு முன்பே 40க்கும் மேற்பட்ட பெண்புலவர்களைக் கொண்டு தனி வரலாறு படைத்தது எம் தமிழ் மொழி அன்று;  

ஒரு தேசம் முழுமையும் பேசும் மொழியே அத்தேசத்தின் தாய்மொழி -ஆம்

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தேசம் இருக்கும் -ஆனால் 

எம்மொழிக்கு மட்டுமே அத்தேசத்தின் மீது நேசம் இருக்கும்;


இலங்கை சிங்கப்பூர் மலேசியா மொரிசியஸ் கனடா -என பல தேசங்களின் தாய் மொழியாய் எம்மொழி நிலைக்கும்;

உலகம் முழுமைக்கும் மொழி பேசினாலும் பத்துக் கோடிக்கு மேல் இலக்கிய நயத்தோடு  பேசும் மொழி தமிழர்கள் நாம் பேசும் உயர்மொழியாம் எம் தமிழ் மொழியே; இது மொழி மட்டுமல்ல என் உயிர். 


மாக்களை  செம்மைப்படுத்தி மக்களாக்கிய ஒரே உயிர் மொழி; எழுத்துக்கு இலக்கணம் வகுத்த மொழிகள் பல உண்டு -ஆனால் வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்த ஒரே மொழி எம் தமிழ் மொழி -ஆம் அது மொழி மட்டுமல்ல என் உயிர்.


கீழடி ஆய்வில் கிடைத்தது 16,000 தொல்பொருள்கள்;

ஒன்றிலும் மதம் இல்லை இனமில்லை -ஆனால் 

எம் உயிரினும் மேலான தமிழ் இருக்கிறது.

தமிழில் மாதங்கள் 12 அறிந்தோம்-அதில் 

ஆண்டுகள் 60 அறிந்தோமா -ஆம்  அவை அறுபதும் உயர் வாழ்வியல் தொகுப்பு ;

உலகில் தொன்மை மொழிகள் அனைத்தும் பேச்சு மொழி- ஆனால் அதன் வளம் குன்றா வாழ்வியல் இலக்கணம் மீட்கும் ஒரே மொழி எம் தமிழ் மொழி -இது 

மொழி மட்டுமல்ல என் உயிர்.


உலக மொழிகள் அனைத்தும் சங்கங்களில் அங்கம் வகிக்கும்- ஆனால்

எம் தமிழ் மொழி மட்டுமே சங்கம் அமைத்து மொழி வளர்க்கும்- இது மொழி மட்டுமல்ல என் உயிர்- எனவே தொடர்ந்து பேசுகிறேன் எம் மொழியை பழமையான மொழி; பண்பட்ட மொழி; தென்னவன் மொழி; தீந்தமிழ் மொழி; தேனினும் இனிய மொழி; பைந்தமிழ் மொழி-இது மொழி மட்டுமல்ல என் உயிர் .


தமிழ் என்றால் எளிமை தமிழ் என்றால் அழகு தமிழ் என்றால் அமிழ்தம் -ஆம்

எம் மொழி என் உயிர் மட்டுமல்ல அதனினும் மேலானது- தமிழா தமிழிலே பேசு தமிழினத்தின் மூச்சுக்காற்றாய் தமிழ் மண்ணெல்லாம் வீசு;

தமிழை நேசிக்க அதனையே சுவாசிக்க- தொடர்ந்து 

தமிழுக்காக ஏடுகள் படைப்போம்-அந்த

ஏடுகள் வழி பல நாடுகள் படைப்போம்.

வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ் !


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்