அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

Nov 24, 2024,06:05 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் வி.என். ஜானகி அம்மையார் அதிமுக தொடர்பாக சரியான முடிவெடுத்து கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து இந்த கட்சியின் உயர்வுக்கு வித்திட்டவர். என் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். அவருக்கு நூற்றாண்டு விழாவை நடத்துவது  பாராட்டுக்குரியது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி அம்மையார், தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டது. மூத்த தலைவர்கள் சிலரின் வற்புறுத்தலால் ஜானகி அம்மையார் முதல்வர் பதவியில் அமர்ந்தார். ஆனால் 24 நாட்களே அவர் முதல்வர் பதவியில் நீடித்தார். அதன் பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக 2 பிரிவுகளாக பிரிந்து மோதியது. அதில் ஜெயலலிதா தலைமையிலான கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்தது. ஜானகி அம்மையார் தலைமையிலான அணி படு தோல்வியைச் சந்தித்தது. யாருமே வெற்றி பெறவில்லை. இதையடுத்து கட்சியை ஜெயலலிதா வசம் ஒப்படைத்து விட்டு அரசியலை விட்டு விலகி விட்டார் ஜானகி அம்மையார்.


இந்த நிலையில் ஜானகி அம்மையாரின் நூற்றாண்டையொட்டி அதிமுக சார்பில் இன்று விழா எடுக்கப்பட்டது. கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:


எம்ஜிஆரை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டவர் ஜானகி அம்மாள்




எம்ஜிஆர் அவர்களும், ஜானகி அம்மையாரும் இணைந்து நடித்த முதல் படம் மருதநாட்டு இளவரசி. அந்தப் படத்தில் நடித்தபோது ஜானகி அம்மையார் அப்போது மிகப் பெரிய ஸ்டாராக இருந்தார். எம்ஜிஆர். சாதாரண நடிகராக இருந்தார். ஆனால் எம்ஜிஆர் மாபெரும் மனிதர், அவர் வரலாறு படைப்பார் என்பதை அப்போதே கணித்தவர் ஜானகி அம்மையார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். தனது திரையுல வாழ்க்கையை தியாகம் செய்தார். அன்று முதல் கடைசி வரை எம்ஜிஆரை பாதுகாப்பாக, சந்தோஷமாக பார்த்துக் கொண்டவர் ஜானகி அம்மையார்.


எம்ஜிஆர் அவர்கள் வசித்த ராமாவரம் தோட்டம் குறித்து எல்லோருக்கும் தெரியும். அங்கு எப்போதும் சாப்பாடு உண்டு. ஒரு நாளைக்கு 200, 300 பேர் சாப்பிடுவார்கள்.  சாதாரண சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் கிடையாது. கல்யாணச் சாப்பாடு போலத்தான், அசைவ சாப்பாடுதான் தருவார்கள். இதெல்லாம் ஜானகி அம்மையார் மேற்பார்வையில்தான் நடக்கும். எம்ஜிஆர் அவர்களே இதைச் சொல்லியுள்ளார். அந்த அளவுக்கு எம்ஜிஆருக்கு சப்போர்ட்டிவாக இருந்தவர். 


இப்போது அதிமுக தலைமைக் கழகம் இருக்கும் இடம் ஜானகி அம்மையார் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த சொத்து. அந்த சொத்தை, எம்ஜிஆர் கேட்டார் என்பதற்காக மறு பேச்சு பேசாமல் கொடுத்தார். அவர் உண்டு அவரது வேலை உண்டு, எம்ஜிஆரைப் பார்த்துக் கொள்வது மட்டுமே தனது பணி என்று இருந்தவர் ஜானகி அம்மையார். அவரை 3 முறை சந்தித்துள்ளேன்.


என் மீது அக்கறை கொண்ட ஜானகி அம்மாள்




முதல் முறை ராகவேந்திரா படம் வந்தபோது சந்தித்தேன். படத்துக்கு வரி விலக்கு கேட்கலாம், முதல்வராக இருந்த எம்ஜிஆரை நீயே போய்ப் பார் என்று கே பி சார் கூறியதால் நான் எம்ஜிஆரைச் சந்தித்தேன். இதையடுத்து நடிகர் சங்க தியேட்டருக்கு ஜானகி அம்மையாருடன் வந்து படம் பார்த்தார் எம்ஜிஆர். படத்தைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டினார். இவ்வளவு சாந்தமாக நடித்துள்ளாரே ரஜினி என்றும் அவர் பாராட்டினார். அதன் பின்னர் வள்ளுவர் கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒருமுறை ஜானகி அம்மையாரை சந்தித்தேன். 3வது முறையாக நான் அவரை சந்தித்தபோது அவர் அரசியலை விட்டு விலகியிருந்தார். அப்போது அவரே தனது கையால் காபி போட்டுக் கொடுத்தார்.


ஜானகி அம்மையார் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்துதான். சூழ்நிலைக் கைதியாக அவர் இருந்தார். சிஎம் ஆனார். தேர்தல் வந்தபோது 2 அணியாக அதிமுக போட்டியிட்டது. அதிமுகவின் பிரம்மாஸ்திரமான இரட்டை இலை முடக்கப்பட்டது. அதன் பின்னர் ஜானகி அம்மைாயர் முடிவெடுத்தார். ஒரு முடிவு எடுக்கும்போது அது நமக்கு சந்தோஷம் தருகிறதா அல்லது மற்றவர்களுக்கு சந்தோஷம் தருகிறதா என்று பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு சந்தோஷம் தரும் என்றால் அதை எடுக்க வேண்டும் என்பார்கள். ஜானகி அம்மையாரும் அப்படித்தான் செய்தார். ஒரு நாள் தனியாக அமர்ந்து தானே யோசித்து முடிவெடுத்தார். ஜெயலலிதாவை அழைத்து, பாரும்மா .. எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது. நீ செய்தால்தான் சரியாக இருக்கும், கரெக்டாக இருக்கும். உனக்குத்தான் தைரியம் இருக்கு, பக்குவம் இருக்கு. கட்சியை உயர்த்திக் கொண்டு செல்ல உன்னால்தான் முடியும் என்று கூறி கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து விட்டு விலகி விட்டார்.


இப்படிப்பட்ட தலைவருக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாட எடுத்த முடிவுக்காக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த். இந்த வீடியோ உரை ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவில் ஒளிபரப்பப்பட்டது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Heavy Rain Alert: சென்னை மக்களே கவனம்.. 23, 23 தேதிகளில் சூப்பர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தகவல்!

news

தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!

news

Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?

news

தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்