மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்

Feb 13, 2026,01:06 PM IST

சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 


இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் தெரிவித்துள்ளன.


மகளிர் உரிமைத் தொகை தற்போது ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் இந்த தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையையும் மற்றும் கூடுதலாக கோடை கால தேவைக்காக ரூ. 2000 என மொத்தம் ரூ. 5000 பணம் இன்று மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.




திமுக அரசின் இந்த அதிரடி அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. சமீபத்தில் தான் மகளிர் உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ரூ. 2000 ஆக உயர்த்தப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் இது குறித்து கூறுகையில், "இது அப்பட்டமான வாக்கு அரசியலே தவிர, மக்கள் சேவை அல்ல" என்று தெரிவித்துள்ளார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மேலும் ஒரு படி சென்று, "அதிமுக அறிவித்துள்ள 'குலவிளக்கு' திட்டத்திற்கு மக்களிடையே பெருகி வரும் ஆதரவைக் கண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அந்தப் பயத்தின் வெளிப்பாடாகவே அவசர அவசரமாக ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது" என்று சாடியுள்ளார்.


டாக்டர் தமிழிசை தாக்கு




பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி திமுக.,விற்கு கேள்வி எழுப்பி உள்ள அவர், தமிழ்நாடு முதல்வர், எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும்... ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை... இது தர்மத்திற்கு எதிரானது.. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்கு ஆக மட்டுமே செய்கிறார்கள். ஏனென்றால்.. சென்ற முறை பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் இல்லை... இப்பொழுது கொடுத்தால் மக்கள் மறந்து விடுவார்கள். அதனால் தேர்தல் ஆண்டு கொடுக்கலாம் என்று சொன்னவர்கள் தான் திமுக.


இவர்கள் அதைத்தான் இப்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்... அதுமட்டுமல்ல இன்று ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் இந்த திட்டம் அறிவித்த பின்பு இரண்டு ஆண்டுகள் கொடுக்காமல் இருந்துவிட்டு பின்பு கொடுத்தார்கள்? இன்று தேர்தலுக்காக ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் ஆரம்பிப்பதற்கு முன்னால் உள்ள தொகையை சேர்த்து மக்களுக்கு கொடுக்கவில்லை?... அதுவே மக்களை ஏமாற்றுவது தானே... அதுமட்டுமல்ல டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உரிமைத் தொகையை உயர்த்திக் கொடுப்பதில் என்ன பலன்?.. 


ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்... குடிக்கும் பழக்கம் உள்ள நபரால் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் 6 ஆயிரம் ரூபாய்.. டாஸ்மாக்கிற்காக செலவழிக்கிறது என்கிறது... டாஸ்மாக் மூலமாக 45,000 கோடியை இந்த அரசாங்கம் சம்பாதிக்கிறது.. ஆக குடும்பங்களை குலைத்துவிட்டு குடும்பப் பெண்களுக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறது இந்த அரசு.. 


எல்லோரும் பீகாரை உதாரணம் காண்பிக்கிறார்கள்.. ஆனால் பீகாரில் பெண்களுக்கு கொடுக்கும் பணம் அந்த குடும்பத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும். ஏனென்றால் அங்கே பூரண மதுவிலக்கு இருக்கிறது. இங்கு அப்படி இல்லை... அதுமட்டுமல்ல பெண்கள் எல்லோரும் தொழில் முனைவோராக வேண்டும் முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான் மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, முத்ரா திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர் பலனடைந்து இருக்கிறார்கள்... அதுமட்டுமல்ல சாலையோர வியாபாரிகளில் குறிப்பாக பெண்களுக்கு உடனே அவர்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவி கடன் உடனே கொடுக்கப்படுகிறது...


ஆக இந்த திமுக அரசு  பெண்களுக்கான தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல் தொல்லை நோக்கு திட்டத்தை தான் வைத்துக் கொண்டிருக்கிறது.... தமிழக மக்களும் மகளிரும் தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் அறிவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.... இதற்கு அடுத்தால் வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களுக்கு இதைவிட சுய சார்பானவர்களாக அவர்களை மாற்றுவதற்கும் சுய கௌரவம் உள்ளவர்களாக அவர்களை மாற்றுவதற்கும்.. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது மட்டுமல்ல ஏற்கனவே அண்ணன் எடப்பாடி யார் அவர்கள் ஏற்கனவே உரிமை தொகை 2000 ஆக உயர்த்தப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்..என்பதை என்  சகோதரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்....


அதுமட்டுமல்ல மரியாதைக்குரிய பாரத பிரதமர் கொண்டு வந்து டிஜிட்டல் இந்தியா மூலமாகத்தான் இவர்கள் நினைத்தாலும் விடியா அரசு விடிவதற்குள் உடனே பெண்களுக்கு போட முடிகிறது என்பதற்கும் பிரதமரை இவர்கள் பாராட்டியாக வேண்டும்... முதல்வர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார் பாராளுமன்ற தேர்தல் அப்பொழுது கூட இந்த திட்டம் முடக்கப்படவில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.. என்று கூறியுள்ளார்.


ஜோதிமணி வரவேற்பு




மறுபக்கம் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி முதல்வரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்  மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறேன். ரூபாய்  5000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும்,எதிர்காலத்தில்  மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள். 


பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும்,கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும்,நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில வெளிப்படுத்த விரும்புகிறேன். 


மகளிர் உரிமைத் தொகை அடுத்த இரண்டு மாதங்களுக்கு நமது சகோதரிகள்  கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பாஜக அதிமுக கூட்டணியின் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின்  அவர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்