Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

Oct 15, 2026,03:11 PM IST

- ஆனந்தி சத்தியராஜ்


அம்மாவிடம் ஒரு குட்டி அறிவியல் பாடம்.. பாடத்தின் வடிவில் ஒரு Learning.. . சரி வாங்க, கதையா பார்க்கலாமா? 


(அது ஒரு மாலை நேரம். சமையலறையில் அனல் தாங்காமல் வேர்த்து நிற்கும் அம்மாவிடம் ஓடிவந்த கவின் (ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்) ஃப்ரிட்ஜைத் திறந்து மடமடவென்று தண்ணீர் குடித்தான்...


கவின்: அப்பாடா! தண்ணி குடிக்கிற இந்த ரெண்டு நிமிஷம் கூட சமையலறைக்குள்ள நிக்க முடியலையேம்மா... நீங்க எப்படித்தான் இந்தச் சூட்டுல தினமும் சமைக்கிறிங்களோ!


அம்மா: ஆமாப்பா வழக்கமா அக்டோபர் மாசம் லேசான குளிர் காற்று வீசத் தொடங்கும். ஆனா இந்த வருஷம் அக்டோபர் வந்தும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஏன் இப்படி அனல் பறக்குதுன்னே தெரியல!




கவின்: அம்மா, இது உங்க சமையலறை சூடு மட்டும் இல்லம்மா, நம்ம முழு பூமியுமே இப்படித்தான் கொதிக்குது! இன்னைக்கு எங்க இயற்பியல் (Geography) ஆசிரியர் வகுப்பில இதைப் பத்தித்தான் நடத்தினாங்க. இந்த அசாத்திய வெப்பத்துக்குக் காரணம் பெருங்கடலில் உருவான 'எல் நினோ' (El Nino) அமைப்புதானாம்!


அம்மா : எல் நினோவா? அது என்னடா புதுசா இருக்கு? இரு, நான் கைபேசியில் இதைப் பத்தித் தேடிப் பார்த்துட்டு வர்றேன்!


கவின்: (சிரித்துக் கொண்டே...) ஐயோ வேணாம்மா! நானே சொல்றேன் கேளுங்க...


இயல்பா பசிபிக் பெருங்கடல்ல வீசுற 'வியாபாரக் காற்று' (Trade winds) பலவீனமடைவதால், கடல் நீர் வழக்கத்தை விட சூடாகி, உலகத்தோட வளிமண்டலச் சுழற்சியையே மாற்றிடும். இதனாலதான் அறிவியலில் 'தொலைத்தொடர்பு விளைவு' ( Teleconnections ) ஏற்பட்டு,தென் அமெரிக்காவில் கனமழையும், நம்ம ஊர் மற்றும் ஆஸ்திரேலியாவில் பருவமழை இல்லாம தீவிர வறட்சியும் உண்டாகுது.


அம்மா: அது என்ன வியாபாரக் காற்று, தொலைத் தொடர்பு விளைவு.. புரியலையே?


கவின்: இருங்க சொல்றேன்.


மத்திய ரேகைப் பகுதியில் (Equator) கிழக்கிலிருந்து மேற்காக எப்போதும் ஒரே சீராக வீசும் காற்றுதான் 'வியாபாரக் காற்று'. அந்தக் காலத்துல கடல்வழியாக வியாபாரம் செய்யச் சென்ற வணிகர்கள் இந்தக் காற்று எந்தப் பக்கம் வீசுகிறதோ அதைப் பயன்படுத்திதான் தங்கள் கப்பல்களைச் செலுத்தினர். அதனால்தான் இதற்கு 'வணிகக் காற்று' அல்லது 'வியாபாரக் காற்று' என்று பெயர்.




இயல்பான காலத்தில் இந்தக் காற்று பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இருக்கும் சூடான நீரை ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா இருக்கும்  திசையை  நோக்கித் தள்ளிக்கொண்டே இருக்கும். இதனால் ஆஸ்திரேலியா பக்கம் நல்ல மழை பெய்யும். ஆனால், எல் நினோ காலத்துல இந்தக் காற்று பலவீனமடைந்து, காற்று தள்ளாததால் சூடான நீர் அப்படியே தென் அமெரிக்கா பக்கமே தங்கிவிடும்.


தொலைத் தொடர்பு விளைவு .. அப்படின்னா.. உலகின் ஒரு மூலையில் நடக்கும் ஒரு பெரிய மாற்றம், பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இன்னொரு நாட்டின் வானிலையை நேரடியாகப் பாதிக்கும் அறிவியல் நிகழ்வுதான் இது.


பசிபிக் கடலின் நடுவே எங்கோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கடற்தண்ணீர் சூடாவதால், அது அங்கே மட்டும் நிற்பதில்லை. அந்த வளிமண்டல மாற்றமானது தொலைபேசி வழியாகச் செய்தி அனுப்புவது போல உலகத்தின் மற்ற பகுதிகளுக்கும் (இந்தியா, ஆஸ்திரேலியா) பரவி நம்ம ஊர் மழையையும், தென் அமெரிக்காவின் மழையையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது.


அதனால்தான் அறிவியலில் இதை 'தொலைதூரத் தொடர்புகள்' (Teleconnections) என்று அழைக்கிறார்கள்.


அம்மா: அப்போ பயிர்கள் கருகி உணவுப் பொருள் விலை உயர்வதும், பவளப்பாறைகள் வெளுத்துப்போய் (Coral Bleaching) கடல் உயிரினங்கள் அழிவதும் இதனாலதானா?


கவின்: ஆமாம்மா! அதுமட்டுமில்ல, நாம அன்றாடம் பயன்படுத்துற இணையம் (Internet), AI மற்றும் டிஜிட்டல் தரவு மையங்கள் (Data Centers) இயங்க அதிக மின்சாரம் தேவைப்படுறதால, கார்பன் உமிழ்வு (Carbon Emissions) அதிகமாகி இந்த எல் நினோவை இன்னும் கொடூரமா மாற்றுதுன்னு அறிவியல் ஆசிரியர் சொன்னாங்க.


அம்மா: அப்போ நாம டிஜிட்டல் கழிவுகளையும் மின்சாரத்தையும் சேமிப்பதோடு, நிறைய மரங்களை நட்டுப் பராமரிப்பதுதான் ஒரே தீர்வா கவின்?




*கவின்: நிச்சயமா அம்மா! இயற்கையைப் பாடமா மட்டும் படிக்காம, நாமளும் நம்ம வாழ்வியலை மாத்திக்கணும். சரி நாம முதல்ல இந்த வாரமே வீட்டைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கத் தொடங்குவோம்....


தமிழர்கள் எல் நினோ குறித்தும் கூட அக்காலத்திலேயே சொல்லு வைத்துள்ளனர். இக்கதையின் கருத்தை உறுதிப்படுத்த தொல்காப்பியத்தில் நிலக் கோட்பாட்டில் 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்' என்ற பாடலின் மூலம்...  வளமான நிலமும் காடுகளும் தன் இயல்பை இழந்து வறண்டு போவதை அன்றே நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது ஆச்சரியமளிக்கிறது. 


அன்று இயற்கைச் சுழற்சியால் வறட்சி ஏற்பட்டது; இன்றோ மனிதனின் அதிகப்படியான கார்பன் உமிழ்வாலும் மின்சார நுகர்வாலும் 'எல் நினோ' போன்ற இயற்கைச் சீற்றங்கள் கொடூரமாக உருவெடுக்கின்றன.


ஐயன் திருவள்ளுவரின் 


"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் 

வான்இன்று அமையாது ஒழுக்கு"" என்ற குறளின் படி  நீரும் இயற்கையும் இல்லையேல் உலகம் இயங்காது. எனவே

இயற்கையின் எச்சரிக்கையைப் புரிந்து கொண்டு, ஆற்றல் வீணாவதைக் குறைத்து, மரங்களை நட்டுப் பராமரித்து, இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மீட்டெடுப்பதே நாம் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் ஆகச்சிறந்த உதவியும், நன்றிகடனும்மாகும் !

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்