ஜி பே பண்ணப் போறீங்களா.. முதல்ல 1 ரூபாய் அனுப்புங்க.. தேவகோட்டை இன்ஸ்பெக்டரின் அட்வைஸ்!

Mar 18, 2025,04:56 PM IST

சிவகங்கை: சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு வழிகளில் பணத்தைத் திருடும் சைபர் கிரைம் குற்றவாளிகளிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தேவகோட்டை பள்ளி மாணவர்களிடையே பேசினார்.


நாட்டில் தற்போது ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் எனப்படும் google-பே, போன் பே என்ற  பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் பயன்பாடு அதிகரிப்பது மட்டுமல்லாமல் சாதாரண தள்ளுவண்டி கடை முதல் பெரிய மால் வரை ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் மூலமாக தான் பணத்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர். இந்த முறையை தான் பின்பற்றியும் வருகின்றனர். ஒரு வகையில் கையில் பணம் இருந்தால் கூட பாதுகாப்பாக இருக்காது, அக்கவுண்டில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும். இதனால்  எப்போது தேவைப்படுகிறதோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷனை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 




இருப்பினும் எந்த அளவிற்கு ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் பாதுகாப்பாக இருக்கும் என்பது உறுதி இல்லை. ஏனெனில் சோசியல் மீடியாக்களில் வரும் தவறான செய்திகள் மூலம் நம்முடைய பணம் பல்வேறு வகைகளில் கையகப்படுத்தவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் மக்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு இதனை எப்படி பயன்படுத்தினால்  பாதுகாப்பாக பயன் பெற முடியும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். இன்றைய  சமுதாயத்தில் சைபர் கிரைம் குற்றங்களால் ஏமாறும் நபர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 


இந்த நிலையில்  இதனை தடுக்க சோசியல் மீடியாக்கள் மூலம் பணத்தை ஏமாறாமல் எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்ற வழிமுறையை தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன்.  இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் ஏராளமான பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும்,கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேவகோட்டை நகரப் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கலா முன்னிலையில், நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மாணவர்களிடையே பேசுகையில்,  சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தக்கூடாது. பெண்களும், ஆண்களும் தங்களின்  புகைப்படங்களை பதிவிட கூடாது. தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது. சாதாரண செல்போன்களில் குறுஞ்செய்திகள் மூலம் ஓடிபி அனுப்பி கால் செய்து எண்  கேட்டு அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பார்கள் .




ஆண்ட்ராய்டு போன்களில் சமூக வலைதளங்களின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி நம்மை அவர்களின் வலையில் விழவைப்பது வாடிக்கையாகி உள்ளது. வங்கியிலிருந்து பேசுகிறோம் என தனிப்பட்ட விவரங்களை கேட்டால் பகிரக் கூடாது.  வங்கிக்கு நேரில் சென்று உண்மையை தெரிந்து செயல்பட வேண்டும்.


சமூக வலைதளங்களில் பிரைவசி என்ற ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட விவரங்களை அனைவரிடமும் பகிரக் கூடாது. ஆன்லைனில் வரக்கூடிய லிங்கு, குறுஞ்செய்திகளை, அழைப்புகளை அட்டென்ட் செய்ய கூடாது. இமெயில் போன்றவற்றுக்கு வைக்கக்கூடிய பாஸ்வேர்டை கடுமையான அதிக எழுத்துக்களால் யாருக்கும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வைக்க வேண்டும்.


ஷாப்பிங் ஆப்ஸ் மூலம் வாங்கும் பொருள்களுக்கு நேரடி பணம் செலுத்த வேண்டும். முடிந்தவரை ஆன்லைன் பேமெண்ட் ஷாப்பிங்கை தவிர்க்க வேண்டும்.  சொந்த உழைப்பின்றி வரும் பணத்தை பயன்படுத்தக் கூடாது. அது ஆபத்தில் முடியும். சைபர் குற்றம் நடந்தால் 1930 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


ஓடிபி, 16 இலக்க எண்கள், தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் கூறக்கூடாது. ஆன்லைன் அரஸ்ட், மார்பிங் போன்ற செயல்களுக்கு பயப்படாமல் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும், காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். நைஜீரியா, கம்போடியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவில் பீகாரில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் இதுபோன்ற சைபர் கிரைமில் அதிகம் ஈடுபடுகிறார்கள். 




குழந்தைகள் அனைவரும் பெற்றோரின் கஷ்டத்தையும் கல்வியின் அவசியத்தையும் உணர்ந்து படிக்க வேண்டும்.  சைபர் கிரைம் குற்றங்கள் நடப்பதற்கு மக்களாகிய நாம்தான் காரணம். நம்முடைய போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடாமல் இருந்தால் நிறைய குற்றங்கள் தடுக்கப்படும்.


பெண் பிள்ளைகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ப்ரொபைலில் வைக்கக் கூடாது. மாணவர்கள் 12ம் வகுப்பு படிக்கும் வரை செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். காலேஜ் படிக்கும்போது செல்போன் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


மாணவர்கள் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் போது தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனே கண்டிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் மீது எப்போதும் கவனம் செலுத்தி அவர்களின் தவறை திருத்த முயற்சி செய்யாவிட்டால் அவர்கள் தற்கொலைக்கு சென்றுவிடுவார்கள்.


ஜிபேயில் பணம் செலுத்தும்போது எப்பொழுதும் ஒரு ரூபாய் அனுப்பி கன்ஃபார்ம் செய்து கொண்டு அடுத்த தொகையை அனுப்ப வேண்டும். எவ்வளவு பெரிய தொகையையும்  உடனே அனுப்பக்கூடாது. ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். அப்படியே நமக்கு அருகே கிடைக்காத பொருட்களை ஷாப்பிங் செய்தாலும் கேஷ் ஆன் டெலிவரி செய்ய வேண்டும்.


மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே ஐஏஎஸ்,, ஐபிஎஸ் எம்பிபிஎஸ், டீச்சர் போன்ற ஏதேனும் ஒரு குறிக்கோளை மனதில் வைத்துக்கொண்டு அந்த குறிக்கோளை நோக்கியே கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.  பிறந்தநாள் விழாவினை ஸ்டேட்டஸில் போடுவது பேஷனாக உள்ளது. அதை தவிர்க்க வேண்டும்.




வேலை வாங்கி தருகிறோம் என்று கூறி பணம் கட்டச் சொல்வார்கள். நாம் பணம் கட்டியவுடன் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவார்கள். கல்வி உதவி தொகை உங்கள் பிள்ளைகளுக்கு வந்துள்ளது. எங்களிடம் ஓடிபி நம்பர் சொல்லுங்கள் என்று கேட்டால் சொல்லக்கூடாது. தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் வந்து நேரில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் இளந்து விடக்கூடாது என்று பேசினார்.


இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நகர காவல் ஆய்வாளர்களிடம் கேள்விகள் கேட்டனர். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பாக கேள்வி கேட்ட மாணவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. விழா நிறைவாக ஆசிரியர் முத்துமீனாள் நன்றி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்