விகடன் இணையதள முடக்கத்திற்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்!

Feb 16, 2025,03:17 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி குறித்த கருத்துப் படம் தொடர்பாக முடக்கப்பட்ட விகடன் இணையதளம் தற்போது மீண்டும் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து விகடன் நிர்வாகம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. கருத்துப்படத்தால் எங்களது தளம் முடக்கப்பட்டால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று விகடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அமரெிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படும் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. இரு கட்டமாக இந்தியர்கள் இந்தியாவுக்கு அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.


இதை வைத்து விகடன் ஒரு கருத்துப் படத்தை வெளியிட்டிருந்தது. இந்த கருத்துப் படம் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், திடீரென விகடன் இணையதளம் தெரியவில்லை. அது முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முடக்கம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்




இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில், இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும்  விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்..


சீமான் கண்டனம்


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், 


பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் நிறுவனத்தின் இணையதளத்தை ஒன்றிய அரசின் சட்ட அமலாக்கத்துறை முடக்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டதைக் கண்டிக்காத ஒன்றிய அரசின் செயல்பாடு குறித்த கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடனின் இணையதளத்தையே முடக்கி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


கருத்துப்படங்களை வெளியிட்டு அரசுகளின் குற்றம், குறைகளை எடுத்துரைப்பதும், பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தக் கோருவதும், அநீதிகளை எதிர்ப்பதும்தான் ஊடகங்களின் தலையாயக் கடமை, முதன்மைப்பணி! அந்த அடிப்படையில், இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டது ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருத்த அவமானம், தலைகுனிவு என்பதைத்தான் அந்தக் கருத்துப்படம் எடுத்துரைக்கிறது. அமெரிக்க அரசின் ஆணவப்போக்கைத் தட்டிக் கேட்க வக்கற்ற ஒன்றிய அரசின் கையாலாகாத்தனத்தையே விகடன் கருத்துப்படமாக வெளியிட்டிருக்கிறது.


அது பிழையோ, குற்றமோ, சட்டவிரோதமோ இல்லை. அது விகடன் நிறுவனத்தின் கருத்துரிமை, விமர்சனப்பார்வை! அதனை செய்தற்காகவே விகடனின் இணையதளத்தை முடக்கியது சனநாயகப்படுகொலை! பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லாம் இருந்தால்தான் அந்நாடு சுதந்திர நாடு! அத்தகைய அடிப்படை உரிமைகளே இங்கு பறிக்கப்படுமென்றால், இது விடுதலைபெற்ற நாடா? இல்லை! அடிமை நாடா? எனும் கேள்வி எழுகிறது. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, எழுத்துரிமை ஆகியவற்றிற்கு எதிரான கொடும் அச்சுறுத்தல். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.


ஒரு கருத்துப்படம் வெளியிட்டதற்காக நூற்றாண்டுப் புகழ்பெற்ற விகடன் நிறுவனத்தின் இணையப்பக்கத்தையே மொத்தமாக முடக்குவார்களென்றால், இங்கு அவசரநிலை நிலவுகிறதா? இல்லை! மக்களாட்சி நீடிக்கிறதா? எதேச்சதிகாரப்போக்கின் உச்சம்! இது சனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்கக்கூடிய ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி அச்சுறுத்தல்! இந்தியக் குடிமக்களின் கை,கால்களில் விலங்கிட்ட அமெரிக்க அரசின் செயல்பாட்டைக் கண்டிக்காத பா.ஜ.க அரசின் செயல்பாடு தேசப்பக்தி! அதனை எதிர்த்துக் குரலெழுப்பிய விகடன் நிறுவனத்தின் செயல்பாடு தேசவிரோதமா? வெட்கக்கேடு! விகடனின் இணையப்பக்கத்தை முடக்கியதன் மூலம் ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசு தனது பாசிச முகத்தை மீண்டுமொரு முறை வெளிக்காட்டியிருக்கிறது.


இச்சமயத்தில், கருத்துரிமைக்கு எதிராகக் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ள விகடன் நிறுவனத்திற்கு தார்மீக ஆதரவாக நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன். இத்தோடு, முடக்கப்பட்டுள்ள விகடன் இணையதளத்தை உடனடியாக விடுவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியிருந்தார்.


விகடன் நிர்வாகம் விளக்கம்




இந்த விவகாரம் குறித்து விகடன் நிர்வாகம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.


முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.


இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.


நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.


அண்ணாமலை அளித்த புகார்




முன்னதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக சார்பில் இரு புகார்களை இந்திய பிரஸ் கவுன்சில் மற்றும் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோருக்கு அனுப்பியிருந்தார். அதில், பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் விகடன் பிரசுரித்துள்ள கார்ட்டூன் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.


மேலும் விகடன் வெளியிட்ட சமீபத்திய கார்ட்டூன்கள் சிலவற்றையும் அவர் தனது புகாருடன் சேர்த்துப் பட்டியலிட்டு அனுப்பியிருந்தார். இதன் பேரில்தான் விகடன் தளம் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


மீண்டும் தெரியும் விகடன் தளம்


இதற்கிடையே, முடக்கப்பட்ட விகடன் இணையதளம் (https://www.vikatan.com/தற்போது மீண்டும் தெரிகிறது. விகடன் தளத்தை முடக்கியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர் அமைப்புகளும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்

news

வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

news

நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!

news

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

news

Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!

news

தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

news

முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்