வகுப்பறை என்னும் ஆசான்!

Dec 24, 2025,01:42 PM IST

- ந. தீபலட்சுமி


பல சூழல்களில் இருந்து வரும் மாணவர்களுக்குப் பாடம் கற்றுத் தருவது என்பது ஒரு சுகமான சுமையே. குழந்தைகளின் மனநிலையை உணர்ந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களின் குடும்பம், சுற்றுச்சூழல், கற்றலில் ஆர்வம், ஈடுபாடு, செயல்திறன், புரிந்துகொள்ளும் தன்மை, கற்றல் செயல்பாடுகள் ஆகியவை அவர்களை ஆளும் மிகப்பெரிய காரணிகளாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து அவர்களுக்குக் கற்றல் கற்பித்தலில் ஈடுபாடு ஏற்படும் வகையில் பாடம் கற்றுத் தருவது உண்மையில் ஒரு ஆசிரியருக்குச் சவாலாகவே அமைந்திருக்கிறது.


பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்குப் பாடம் கற்றுத் தரும் ஒரு இடம் மட்டுமல்ல. சில நேரங்களில் அது ஆசிரியர்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தரும் ஓர் அனுபவக் கூடமாக விளங்குகிறது. வகுப்பறைகள் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த மேடையாக அமைந்திருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான ஓர் இணைப்பு, அன்பு மற்றும் பிணைப்புப் பாலத்தை ஏற்படுத்தும் ஒரு மிகச்சிறந்த இடம்தான் வகுப்பறை. "அனுபவங்களே ஆசான்" அல்லவா?


அதுபோன்று வகுப்பறையில் நான் பெற்ற ஓர் அனுபவம் என்னை இப்பொழுதும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. பொதுவாகவே நான் பாடம் தொடங்குவதற்கு முன்னால் மாணவர்களிடையே கலந்துரையாடுவேன். இக்கலந்துரையாடல்கள் மாணவர்கள் அன்றைய வகுப்பில் படிக்கப் போகும் பாடத்தின் முன்னோடியாக அமைந்திருக்கும். கேள்விகள் கேட்பது மட்டுமே ஒரு ஆசிரியரின் வேலை அல்ல; மாணவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டுவதும் ஒரு மிகச்சிறந்த ஆசிரியரின் வேலையாகும். மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தைரியமாகச் சொல்ல ஒவ்வொரு ஆசிரியரும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உறவு மேம்படும்.




ஒன்பதாம் வகுப்பில் ஏற்பட்ட அந்த அனுபவம் இப்பொழுதும் என்னால் மறக்க முடியவில்லை. அன்றைய தினம் நான் ஆங்கில பாடத்தில் துணைப்பாடமான "THE ENVIOUS NEIGHBOUR" என்ற கதையினைச் சொல்வதற்கு முன்னால், 'ஈகை' என்றால் என்ன, அதை மாணவர்கள் எவ்வாறு உணர்கின்றனர், அவர்கள் ஏதேனும் இது போன்ற ஈகைச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பனவற்றைப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன்.


"வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் 

குறியெதிர்ப்பை நீரது உடைத்து"


என்ற குறளைக் கூறி, அதற்கான விளக்கத்தையும் கூறினேன். "பொருள் இல்லாத ஏழைகளுக்கு உதவி செய்வதே உண்மையான ஈகை ஆகும். அதைத் தவிர மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகள் யாவும் ஏதேனும் ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுபவையே" என விளக்கம் அளித்தேன். மேலும் வாழ்க்கையில் உன்னுடைய நிலை உயரும் பொழுது செல்வம் சேரும், அவ்வாறு சேரும் செல்வத்தைப் பொருள் இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறினேன்.


அவர்களுக்குப் புரியும் வகையில், "உன்னுடைய கை எப்பொழுதும் கொடுப்பது போன்று உயர்ந்தே இருக்க வேண்டும்; மற்றவரிடம் ஒருபொழுதும் கையேந்தி வாங்கும் நிலையில் இருக்கக் கூடாது. அனைவரும் கொடுக்கும் வகையிலேயே உயர்ந்து இருக்க வேண்டும்" எனத் தெளிவுபடுத்தினேன். அதைக் கேட்ட ஒரு மாணவன், "எல்லோருடைய கையும் உயர்ந்தே இருந்தால், யாருடைய கை தாழ்ந்திருக்கும் மிஸ்?" எனக் கேட்டான்.


ஒரு நிமிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். நான் கூறிய ஒரு சிறிய உதாரணம் அவனுடைய மனதில் என்ன வகையான கேள்வியை எழுப்பியுள்ளது என்பதை நினைத்துப் பெருமைப்படுவதா? அல்லது அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் திகைத்து நின்ற என்னுடைய நிலையை அறிந்து கவலை கொள்வதா? எனத் தெரியாமல் சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டேன்.


வகுப்பறையில் நாம் சந்திக்கும் மாணவர்கள் பல்வேறுபட்ட தன்மையுடையவர்கள். சிலர் ஆர்வக்கோளாறு மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் ஆசிரியர்களை ஏதேனும் ஒரு கேள்வி கேட்டு அவர்களைப் பதில் கூற முடியாமல் திணறச் செய்யும் குறும்புக்காரர்களாக இருப்பார்கள். சிலர் ஆசிரியருக்கும் தமக்கும் அல்லது நடத்தும் பாடத்திற்கும் எந்த வகையிலும் சம்பந்தமே இல்லை என்பது போன்று இருப்பார்கள். இன்னும் சிலரின் உடல் வகுப்பறையில் இருந்தாலும், மனதளவில் அவர்கள் வேறு எங்கோ சென்றிருப்பார்கள். இதில் கேள்வி கேட்ட மாணவன் எந்த நிலையில் இருப்பான் என்பதை என்னால் ஓரளவு கணிக்க முடிந்தது. கேள்வி கேட்டுவிட்டு அவன் சிரித்த சிரிப்பு...


அவன் எந்த நிலையில் கேட்டிருந்தாலும், அவன் கேட்ட கேள்வி என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. என்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "கொடுக்கும் கை எப்பொழுதும் உயர்ந்த கையாகவே இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆசையாக இருக்கும். முதலில் உன்னுடைய கையை மேல்நோக்கி இருக்கும் வகையில் நீ வாழ்க்கையில் உயர்ந்து காட்டு; பின்பு மற்றவர்கள் உன்னைப் பார்த்து அவர்களின் கையும் உயர்ந்து மேலோங்கும் நிலைக்கு வருவர்" எனக் கூறி அவனைப் பார்த்து நான் சிரித்த சிரிப்பில்... வகுப்பறையே கைதட்டி ஆர்ப்பரித்தது.


பின்பு செல்வம், ஈகை, பொறாமை என்ற அனைத்தும் இக்கதையில் எவ்வாறு பயணித்து வருகிறது என்பதை விளக்கிக் கூறினேன். மாணவர்கள் ஆக்கப்பூர்வமான கேள்விகளைக் கேட்டு அதற்கான விளக்கத்தைப் பெற வேண்டும். அதேபோன்று ஆசிரியர்களும் மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் அறிவுக்கூர்மையைத் திறக்கும் திறவுகோலாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்துவிட்டால் ஆசிரியர் - மாணவர் உறவில் விரிசல் என்பது எப்படி வரும்?


நீங்கள் கொடுத்த பெயரிலும் முகவரியிலும் இருந்த எழுத்துப்பிழைகளைச் சரிசெய்து சரியாகக் கீழே கொடுத்துள்ளேன்:


(ந. தீபலட்சுமி பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!

news

சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!

news

மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!

news

நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted

news

வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்

news

அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்

news

ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!

news

பிரம்மாண்ட ப்ளூபேர்டை லாவகமாக கொண்டு சென்ற பாகுபலி!

அதிகம் பார்க்கும் செய்திகள்