தாவுடா செவலை தாவு.. கட்சி விட்டு கட்சி தாவுவது.. நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

May 26, 2026,05:47 PM IST

சென்னை: இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்குத் தாவுவது நம்ம ஊர் அரசியலில் ரொம்ப ரொம்ப சகஜம். மக்களே கூட இதை இப்போதெல்லாம் பொருட்படுத்துவது இல்லை. காரணம், இங்குள்ள எந்த அரசியல்வாதியுமே (99% அப்படித்தானே!) கொள்கைக்காக அரசியல் செய்வதில்லை. சுயநலம் மட்டுமே இங்கு பிரதானமாக இருப்பதால் கட்சி தாவுவதை மக்களே கண்டு கொள்வதில்லை.


ஓபிஎஸ் கட்சி தாவியபோதே மக்கள் அதிர்ச்சியை கைவிட்டு விட்டனர். இதை விட மிகப் பெரிய தாவல் அதற்கு முன்பும் தமிழ்நாட்டு அரசியலில் நடந்ததில்லை. இனியும் நடக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது விஜய் கட்சிக்கு அதிமுகவிலிருந்து 3 பேர் கட்சி தாவி வந்திருப்பது, அதுவும், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தாவியிருப்பதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை.


தமிழக அரசியல் வரலாற்றில், திராவிட இயக்கங்களின் பிரதான சக்திகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே, மாற்றுத் தலைவர்கள் மற்றும் பிற முக்கியக் கட்சிப் பிரமுகர்களின் வரவு எப்போதுமே தேர்தல் களத்தை உலுக்கும் ஒரு முக்கிய அம்சமாக இருந்துள்ளது.


அரசியல் கொள்கை, உட்கட்சி மோதல் அல்லது அதிகாரப் பரவலாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால், தங்களின் தாய் கட்சிகளிலிருந்து விலகி திமுக அல்லது அதிமுகவில் இணைந்து, பின்னாட்களில் அங்கும் பெரும் செல்வாக்குடன் விளங்கிய முக்கியத் தலைவர்களின் பட்டியல் மிகப் பெரியது.


கடந்த திமுக அமைச்சரவையில்தான் பிற கட்சிகளிலிருந்து தாவி அமைச்சர் பதவி வகித்தவர்கள் அதிகம் பேர் இடம் பிடித்தனர். குறிப்பாக அதிமுகவிலிருந்து வந்த பலர் திமுக அமைச்சரவையில் அங்கம் வகித்தது ஸ்டாலின் காலத்தில்தான்.




வி. செந்தில் பாலாஜி (அதிமுக, அமமுக என்று வலம் வந்தவர். திமுக ஆட்சியில்  மிக மிக முக்கியமான தலைவராக திகழ்கிறார்)


பி. கே. சேகர்பாபு - (அதிமுகவில் அசைக்க முடியாத  ஒரு தளகர்த்தராக வலம் வந்தவர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. கடந்த திமுக அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தவர். மு.க.ஸ்டாலினே தோற்ற நிலையில் பி.கே.சேகர்பாபு ஜெயித்தது திமுகவினராலேயே ஜீரணிக்க முடியாத விஷயம்)


எ. வ. வேலு - (அதிமுகவில் எம்.ஜி.ஆர். அணியில் தீவிரமாக இருந்தவர். பின்னர் திமுகவில் இணைந்தார். கடந்த திமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர். திருவண்ணாமலை மாவட்டத்தின் மிக முக்கியத் தூணாக திமுகவில் உயர்ந்தவர்)


எஸ். ரகுபதி (அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். சட்ட அமைச்சராக இருந்தவர்)


டாக்டர் மைத்ரேயன் (பாஜக, அதிமுக, மீண்டும் பாஜக கடைசியாக திமுக என சரமாரியாக தாவி வந்த அரசியல் தலைவர்)


அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (அதிமுகவில் ஒரு காலத்தில் இருந்தவர். பின்னர் திமுகவில் இணைந்தவர். சக்தி வாய்ந்த அமைச்சராக பதவி வகித்தவர்)


ராஜ கண்ணப்பன் (அதிமுகவில் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர். பின்னர் திமுகவுக்கு வந்து இங்கும் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தவர்)


முத்துசாமி (எம்ஜிஆர் காலத்து அதிமுககாரர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் பின்னர் திகழ்ந்தவர். பிறகு திமுகவில் இணைந்து அமைச்சராக இருந்தவர்.)


சுப்புலட்சுமி ஜெகதீசன் - (ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்தவர். பின்னர் திமுகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். பிறகு அரசியலை விட்டு விலகி விட்டார்)


அடுத்து அதிமுகவுக்குத் தாவி வந்த (பிறகு அங்கிருந்து வேறு கட்சிகளுக்குத் தாவிய) பிற கட்சியினரைப் பார்ப்போம்..


சு. திருநாவுக்கரசர் - (ஆரம்பத்தில் திமுக பின்னர் அதிமுகவுக்குப் போனவர். பிறகு தனிக் கட்சி கண்டார். அதன் பிறகு பாஜகவுக்குப் போனார். பிறகு அதிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வருகிறார்)


சேடப்பட்டி முத்தையா (திமுகவிலிருந்து விலகி அதிமுகவுக்குப் போனவர். சபாநாயகராக இருந்தார். பிறகு திமுகவுக்கேத் திரும்பி விட்டார்)


நாஞ்சில் சம்பத் (திமுகவிலிருந்து மதிமுகவுக்குப் போனார். பிறகு அதிலிருந்து விலகி அதிமுக பக்கம் தாவினார். பிறகு அதிலிருந்து விலகி தற்போது தவெகவில் இருக்கிறார்)


பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் (ஆரம்பத்தில் திமுக பின்னர் அதிமுகவில் மிக முக்கியமான தலைவராக விளங்கியவர். திமுக அதிமுக இணைப்பு குறித்து பேச்சுக்கள் எழுந்த சமயத்தில் அதுதொடர்பாக முக்கியப் பங்கு வகித்தவர் என்ற  பெயரும் இவருக்கு உண்டு. பிறகு தேமுதிகவில் இணைந்து அந்தக் கட்சியை சிறப்பாக வழி நடத்தியவர். பிறகு அதிலிருந்து விலகினார். ஓபிஎஸ்ஸுடன் சிறிது காலம் பயணித்தார்)


தங்க தமிழ்ச்செல்வன் (அதிமுக, அமமுக என்று வலம் வந்தவர் தற்போது திமுகவில் இணைந்து எம்.பியாக இருக்கிறார்)


மாஸ் கட்சி தாவல் வரலாறு 


இப்போது 3 எம்எல்ஏக்கள் பதவி விலகி விட்டு தவெகவில் இணைந்து விட்டதை பரபரப்பாகப் பேசுவோர், மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கட்சியையே உடைத்து விட்டு அதிமுகவுக்கு வந்த தேமுதிக எம்எல்ஏக்களை மறந்து விட்டனர்.


மறைந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து தேமுதிக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. திமுக அப்போது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. ஆனால் அதிமுக தேமுதிக உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை.


தேமுதிக உறவு கசந்து போன நிலையில் அதிமுகவின் சில பல முயற்சிகளால் தேமுதிகவைச் சேர்ந்த சுந்தரராஜன் (விஜயகாந்த்தின் பால்ய நண்பர்), நடிகர் அருண் பாண்டியன் (விஜயகாந்த்தின் நண்பர்), கே.தமிழழகன், மைக்கேல் ராயப்பன், டி.சுரேஷ்குமார், சாந்தி, மாபா க.பாண்டியராஜன், மு.அருண் சுப்பிரமணியம் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களும் இப்போது அதிமுக எம்எல்ஏக்கள் செய்தது போலவே பதவியை ராஜினாமா செய்து விட்டுத்தான் இணைந்தனர்.


கட்சி தாவல் தடைச் சட்டம் வந்த பிறகுதான் இப்படியாவது நடக்கிறது. இல்லாவிட்டால் எம்எல்ஏ பதவியுடனேயே கட்சி தாவுவது முன்பு ரொம்ப அதிகமாக இருந்தது.


இப்படிப்பட்ட தாவல்களைத் தடுக்க ஒரே வழி.. அப்படித் தாவுவோர் மீண்டும் வேறு கட்சி சார்பில் போட்டியிட்டால் அவர்களை மக்கள் படு தோல்வி அடையச் செய்வதுதான். ஆனால் மக்கள் அப்படிச் செய்வதில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. காரணம், மக்கள் வேட்பாளர்களைப் பார்த்து ஓட்டுப் போடுவதில்லை. மாறாக, கட்சியையும், சின்னத்தையும் மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். இதனால்தான் தாவல்கள் தொடர் கதையாக உள்ளன.


அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. என்ற நகைச்சுவை மன்னர் கவுண்டமணியின் வசனம்தான் நினைவுக்கு வருது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்