Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு

Aug 24, 2026,10:52 AM IST

-முனைவர் தி.தங்கலட்சுமி


அது ஒரு பெருநகரின் புறநகர்ப் பகுதி. புதிதாக வளர்ந்து வரும் காங்கிரீட் காட்டின் நடுவில் அமைந்துள்ள பொதுப் பூங்கா. மக்களின் நடைப்பயிற்சிக்கும் சிறுவர்களின் மாலை நேரக் குதூகலிப்பிற்குமான பப்ளிக் பார்க். வேலிகள் மதில்கள் எல்லாம் இன்னும் கட்டப்படாத திறந்தவெளிப் பூங்கா. 


அங்குள்ள வேப்பமரத்தின் நிழலில் மதியம் கடந்த மாலை நேர மக்களின் பரபரப்புகள் எழும் முன்பான மதிய இடைவேளையின் இடைப்பட்ட நேரம். 


அந்த ஏரியாவின் 'தாதா' என பெயர் பெற்ற தெருநாய், ஆனந்தமாக முன்னங்கால்களை மடக்கித் தலை தூக்கியவண்ணம் படுத்துக் கிடந்தது. அவ்வழியே கடந்து செல்லும் பிற தோழர்களோடு வார்த்தையாடி வம்பளப்பது அதற்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. 


இந்த 'தாதா' மனிதர்களுக்குத் தான் கிலி ஏற்படுத்தும் 'தாதா'. மற்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மிகவும் பிரியமான தோழன்.  அவரவர் கஷ்ட நஷ்டங்களை இதனிடம் சொல்லி, ஆறுதலும்  யோசனைகளும் பெற்றுச் செல்வர் சக உயிரித் தோழர்கள். 


பெரும்பாலும் இந்த நண்பகல் கடந்த உச்சிப்போதுதான் இவர்களின் சங்கம் கூடி ஆலோசனைகள் மேற்கொள்ளும் நேரம். அப்போதுதான் மனிதர்களின் நடமாட்டமும் மிகமிக குறைவாக இருக்கும் நேரம்.  மனிதத் தொந்தரவுகள் இல்லாமல் 'தாதா' ஓய்வாக இருக்கும் நேரம்.  


கடந்த வாரத்தில் ஒருநாள்.... 


"அடடே! மைனாப் பையா! எப்புடி இருக்க..?  உன்னை இந்தப் பக்கம் பாத்தே ரொம்ப நாளாயிடுச்சு!" 


"எங்க நீ மட்டும் வந்திருக்க... ? நீயும் உன் மனைவியும் எப்பயும் இணைபிரியாம சேர்ந்து ஜோடியாத்தான எங்க போனாலும் போவீங்க... வருவீங்க..."  என்று உற்சாகமாக வரவேற்றது.


ஆனால் மைனாப் பையனோ... ஒரே சோகமாக இருந்தான். வெகுவாக முயன்று முறுவலிக்கப் பார்த்தான். முடியாது போகவே... மீண்டும் சோகமாகவே முகத்தை வைத்துக் கொண்டான். 


நம்ம 'தாதா'விற்கு இந்த மர்மம் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்தது. அதன் உற்சாகமும் சட்டென வடிந்து முகத்தில் ஒரு சோகம் வந்து அப்பியது. 


"என்ன நண்பா! உன் ஜோடிக்கு என்னாச்சு!" என்று வருத்தமாகக் கேட்டது. 




நாய் இப்படிப் பரிவோடு கேட்டதோ இல்லையோ... மைனாப் பையன், "ஓ....." என்று அழுது கதறித் துடித்துவிட்டான். 


தேம்பித் தேம்பி அழுதபடியே சொன்னான், "போன வாரம்.... செத்துப் போயிட்டா... என் ஆருயிர் மைனா கண்ணு...." 


நாய்க்கு ஒரே அதிர்ச்சி... "எப்படி? என்னாச்சு? எதுனால...?" என்று படபடத்தது.


"இந்தப் பாவி மனுஷப் பயலுகளால... வந்தவினைதான்... என் மைனாக் கண்ணு....  எவனோ மென்னுட்டுத் துப்பிப் போட்ட சுவிங்கத்த இவ... அலகால கொத்தி  முழுங்கிட்டா.... அது அவ வாயத் தொறக்க முடியாம.... பண்ணிடுச்சு.." 


'தாதா' கண்ணில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வடிந்தது. மௌனமாக மைனாக் கண்ணுக்காக அஞ்சலி செலுத்தியது. 


துக்கம் தாளாத மைனாப் பையன் அமைதியாக அங்கிருந்து பறந்துவிட்டான். 


கொஞ்சநேரம் கழித்து, 'என்னடா... இது இன்னைக்கு சபை கூடுற நேரத்திற்கும் மேலயே ஆயிடுச்சு! மத்த ஒருத்தரையும் இன்னும் கண்ணுலயே காணோம்.'   


'வந்த ஒருத்தனும் சோகத்தைக் கொட்டிட்டுப் பறந்திட்டான்' என்று யோசித்தபடியே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்த  'தாதா'வின் கண்ணில்  அந்தக் கன்றுக்குட்டி பட்டது. 


உடனே துள்ளி எழுந்து ஓடியது. விரைந்து சென்று கன்றுக்குட்டி வாயிலிருந்த பிளாஸ்டிக் பையைப் பிடித்து வெளியே இழுத்துத் தூரத் தூக்கிப்போட்டது. 


"உனக்கெல்லாம் கொஞ்சமாச்சும்  அறிவிருக்கா..? உங்க அம்மாள எங்க...? அவளச் சொல்லணும்... உன்ன இங்கத் தனியா மேயவிட்டுட்டு எங்க போனா...?" 


'தாதா'வின் பெருங்குரைப்புச் சத்தத்தைக் கேட்டுப் பதறியடித்து ஓடிவந்தது கோமாதா.


"வாடியம்மா... வா... உன்னத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.  ஓம்புள்ளைதான இவன்... அவனுக்கு எதத்திங்கணும் திங்கக் கூடாதுன்னு எல்லாம் சொல்லிக் குடுத்து வளர்க்க மாட்டியா நீ?"


பதறிய பசுவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் கன்றை நாவால் நக்கி வருடிக் கொடுத்து நடுங்கிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை ஆசுவாசப்படுத்தியது. 


'தாதா'விற்கு வந்த கடுப்பில் 'உன்னயெல்லாம் திருத்தவே முடியாது. கண்டிக்க வேண்டிய நேரத்திலயும் கொஞ்சிக்கிட்டு இரு.' என்று மனம் வெறுத்து அவ்விடம்விட்டு நகர்ந்து பழையபடி வேப்பமரத்தடிக்கு வந்து படுத்தது. 


வழக்கமாக இந்த நேரத்திற்கு வரும் சிட்டுக்குருவிகளின் கூட்டம் அப்போதுதான் சந்தோஷமாக 'கீச்சு மூச்சு' என்று ஒலியெழுப்பிக் கொண்டே வந்து சேர்ந்தன.


சட்டென நம் 'தாதா'வின் மனதிலும் சந்தோஷம் வந்து ஒட்டிக்கொண்டது. "என்ன சகோதரிகள் எல்லோருக்கும் இன்றைக்கு நல்ல விருந்து கிடைச்சதுபோலயே... ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்குறீங்களே??!" என்று பாதி கேலியாகவும்  விளையாட்டாகவும் கேட்டது. 


ஏழு குருவிக் கூட்டத்தின் சகோதரிகளும்  ஏககாலத்தில் கோரஸாக சிரித்துக் கொண்டே, இன்று அவற்றிற்குக் கிடைத்த உணவைப் பற்றிச் சொல்ல முண்டியடித்தன. 


'தாதா' பார்த்தது. "அடடே...! வாயாடிப் பொண்ணுங்களா.... கொஞ்சம் அமைதியாத்தான் இருங்களேன். யாராவது ஒருத்தர் சொல்லுங்க... இப்படி எல்லாரும் ஒரே நேரத்தில பேசுனா... எனக்கு என்னதான் புரியும்" என்று அதட்டுப்போட்டு அவற்றை அமைதியாக்கியது. 


அதே நேரத்தில் வேப்பமரக் கிளைக்கு ஒரு காகம் பறந்து வந்தது. "வரவேணும்... வரவேணும்... வி.ஐ.பி. காகமே... வரவேணும்..." என்று 'தாதா' காகத்தை நையாண்டியாக வரவேற்றது. 


காகத்திற்கு இந்த 'தாதா'வின் நக்கல் ஒன்றும் புதிதல்ல. அதனால் அது மிகவும் இயல்பாக வந்து தாழ்வான கிளையொன்றில் அமர்ந்தது. 


காகமே பேச்சைத் துவங்கியது...  "என்ன 'தாதா' இன்னைக்கு ஒனக்கு வம்பளக்க இந்தச் சின்னக் குட்டிகள்தான் கெடச்சதா??" என்று பதிலுக்கு தானும் நாயைக் கொஞ்சம் வம்பிழுத்த திருப்தியில் புன்னகைத்தது. 


சற்று பொறுமையிழந்த சிட்டுக்குருவிக் கூட்டத்தில் இருந்த ஒரு குருவி மிகுந்த உற்சாகத்துடன், "தாதா' இன்னைக்கு எங்களுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டான புது ஸ்நாக்ஸ் சாப்பிடக் கெடச்சதே!" என்றது. 


காகம் மிகுந்த கர்வத்துடன் 'அது என்ன நான் சாப்பிடாத புது ஸ்நாக்ஸ், இதுகள்சாப்பிட்டிருக்கப் போறதுகள்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டது. 


'தாதா' சிட்டுக் குருவிகள் ஒவ்வொன்றையாகப் பார்த்து, "ம்ம்... சொல்லுங்க, சொல்லுங்க உங்களோட சந்தோஷத்த இப்படித்தான் எல்லார்க்கிட்டயும்  பகிர்ந்துக்கணும். அப்பத்தான் அது பலமடங்காப் பெருகும்." என்று  பேசுவதற்கு உற்சாகப்படுத்தியது. 


உடனே காகம் சொன்னது, "ஹும்... நீங்கள்லாம் இன்னும் எந்தக் காலத்துல இருக்கீங்க... சந்தோஷத்த பகிர்ந்துக்கிட்டு அதுனால பல மடங்கா சந்தோஷம் பெருகுதா..? அதெல்லாம் சுத்தப் பொய். இந்த 'தாதா' சொல்றத அப்பிடியே நம்பாதீங்க குட்டிங்களா..!" என்றது.


"ஒருகாலத்தில எங்க இனம்முன்னு சொன்னாலே, ஒத்துமைக்கு நாங்கதான்னு இந்த மனுசங்க எல்லாம் உதாரணம் சொல்லுவாங்க. ஆனா, இப்போ.... நாங்களே ஒரு இடத்துல இரை கிடச்சா.. சத்தமில்லாம தன் வயிற்றுத் தேவைக்குச் சாப்ட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கோம்" என்றதோடு விருட்டென சிறகசைத்துப் பறந்தது. 


"அட.. சிட்டுங்களா! அது கெடக்குது தற்பெருமை அதுக்குத் தலைக்கேறிக் கெடக்கு. இந்த மனுசங்க எல்லாம் அதத்தான கூப்பிட்டுக் கூப்பிட்டு சோறு படைக்குறாங்க. அந்தத் திமிருல அது அப்படிப் பேசிட்டுப் போகுது. நீங்க சொல்லுங்க... அப்படி என்ன புது ஸ்நாக்ஸ் இன்னைக்குச் சாப்பிட்டீங்க???"


"நல்லா மொறுமொறுன்னு இருந்துச்சு!"


"சின்னச் சின்ன பந்து மாறி இருந்துச்சு!"


"மஞ்சக் கலருல இருந்துச்சு!"


"கொஞ்சம் காரமா இருந்துச்சு!"


ஆளாளுக்கு ஒவ்வொன்றாக ஒரே பண்டம் பற்றி விவரித்தன. 


"இதற்கு முன்பு நாங்கள் காராச்சேவு, மிக்ஸர் எல்லாம் சாப்பிட்டு இருக்கோம். இது இன்றுதான் சாப்பிட்டோம்" என்று சொன்னது ஒன்று. 


"அட! ஆமால்ல... இன்னைக்கு நாம சாப்பிட்ட ஸ்நாக்ஸ, நான் முன்னாடியே எங்கயோ சாப்பிட்டு இருக்கோமே என்று இவ்வளவு நேரம் யோசிச்சிக்கிட்டே இருந்தேன். இப்போ நீ சொல்லவும் ஞாபகம் வருது. மிக்ஸர்ல இதுவும் கலந்து இருக்கும்!" என்றது மற்றொன்று. 


'தாதா' அவைகளின் பேச்சுக்களை மிகுந்த கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு வார்த்தையும் பேசாமல் கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தது. 


அதற்குள் மாலை நேரம் நெருங்கிவிட்டதால், பள்ளி முடிந்து அலுவலகம் முடிந்து என்று மனிதர்களின் நடமாட்டமும் வண்டி வாகனங்களின் ஓட்டங்களும் அதிகரிக்கத் துவங்கின. 


பறவைகள் எல்லாம் கலைந்து பறந்து தங்கள் கூடு அடையச் சென்றன. 'தாதா'வும் தன் டுயூட்டியைப் பார்க்க எழுந்து ஓடிவிட்டது. 


இன்று...


'தாதா'வின் வழக்கமான வேப்பமரத்தடி சபை கூட்டத்திற்கு சரியான நேரத்திற்கு வி.ஐ.பி. காகம், மைனாப் பையன், ஏழு சகோதரிக் குருவிகள், கோமாதா அதன் கன்றுக்குட்டி என அந்த ஏரியாத் தோழர்கள் அனைவரும் வந்து விட்டனர். 


மேலும் இன்றைய கூட்டம் வெகு வெகு சிறப்பான ஒன்றாக அமைய இங்கு வந்துள்ள அனைத்து உயிரிகளின் உறவு - சுற்றம், நட்பு வட்டம் என்று பெரிய மாநாடு போலவே அந்த பப்ளிக் பார்க்.... நாய்கள், மாடுகள், பறவைகளால் நிறைந்து இருந்தது. 


இதையெல்லாம் கவனிக்க மனிதர்களுக்கு ஏது நேரம்??? எனவே 'தாதா'வின் சபை இன்று நிறைய தலைகளால் களைகட்டி இருந்தது. 


'தாதா' நாய்க்கு பரம திருப்தி. தனது அழைப்பிற்கு இணங்கி இத்தனை தோழமைகள் வருகை புரிந்துள்ளனர் என்பதற்கு முதலில் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பேசத் துவங்கியது. 


"நாமெல்லாம் எதற்காக இங்கு குழுமியிருக்கிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் என்று நம்புகிறேன். இந்த மனிதர்களின் கலாச்சார மாற்றம் மற்றும் மரபு மீறிய அறிவியல் சோதனைகளாலும் கண்டுபிடிப்புகளாலும் நம்மில் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. 


சிட்டுக்குருவிகள் எல்லாம் அவர்களுக்கு உரிய இரையாக தானியங்களைத் தேடி உண்ணாது, மனிதர்கள் தரும் பலகாரத் தின்பண்டங்களை விரும்பி உண்பதில் மகிழ்கிறார்கள். 


என்னைப் போன்ற சக நாய்த் தோழமைகள் எல்லாம் பால் சோறு உண்பதைவிட விதவிதமான பிஸ்கட்கள், மனிதர்கள் உண்ட அசைவ உணவின் மிச்சமீதியான எலும்புகளை விரும்பி உண்கிறார்கள். 


வி.ஐ.பி. காகம் போன்ற இனத்தினை வருந்தி வருந்தி அழைத்து மக்கள் உணவு  படைத்தாலும் அவையும் அவற்றிற்கு ஆரோக்கியம் தரும் உணவுகளா? என்றால்...,  இல்லை என்பதே விடை. 


மாடு கன்றுகளை ஒரு காலத்தில் மனிதர்கள் செல்வமாகப் போற்றி மதித்து  வளர்த்தார்கள். முறையாகப் பராமரித்தார்கள். இப்போதோ.... மனிதர்கள்  தங்கள் தங்களின் பராமரிப்பிற்கே போதுமான வளம் இல்லாமல் திண்டாடுகிறார்கள். அதனால் மாடுகன்றுகளைத் தெருவில் திரியவிட்டு, பொழுதடைய தொழுவத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். 


அவை பகலெல்லாம் எங்கு மேய்ந்தன? என்ன மேய்ந்தன? என்பது பற்றியெல்லாம்  இந்த மனிதர்களுக்கு அக்கறையில்லை. மாலையில் மடியில் சுரக்கும் பாலைக் கறப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். 


பண்ணை வைத்து வளர்ப்பவர்களாவது மாடுகளைச் சரியாக பராமரிக்கிறார்களா? என்றால்... அவர்களும் தங்களின் லாபநோக்கத்திற்காக செயற்கையான தீவனங்களும் சினைபிடிக்க ஊசி மருந்துகளும் என்று அங்கும் தங்களின் சுயநலத்தையே  முதன்மையாகக் கொண்டு நடந்து கொள்கிறார்கள்.  


மிக நீண்ட உரையாக எனது தொடக்கவுரை அமைந்துவிட்டது. இத்தனை நேரம் அமைதி காத்த அனைவருக்கும் நன்றி. இனி ஒவ்வொரு இனத்தாரின் சார்பிலும்  ஒரு பிரதிநிதி வந்து தங்களின் கருத்துகளைக் கூறலாம்" என்று 'தாதா' நாய் 

தனது பேச்சை நிறைவு செய்துகொண்டு இடம் அமர்ந்தது. 


சிட்டுக்குருவிகள், மைனா போன்ற அனைத்துப் பறவைகளின் சார்பாக மைனாப் பையன் பேசத் தொடங்கினான். "குழுமியிருக்கும் தோழமைகளுக்கு வணக்கம். இந்த மனிதர்களின் அலட்சியத்தால் நான் என் ஆருயிர் துணையை இழந்துள்ளேன்" என்று கூறி கண்கலங்கியது. பின் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தது.


"'தாதா' நாயார் பேசும்போது கூறினார்... பறவைகள் எல்லாம் தானியங்களைத் தேடி இரையாக உண்ணாது, மனிதர்கள் தரும் பலகாரப் பண்டங்களை உண்டு மகிழ்கிறோம் என்று... மனிதர்கள் தானிய விளைச்சல் பெருக வேண்டும் என்று செயற்கை உரங்களையும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துகிறார்கள். 

மேலும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னர் பூச்சிகள் அரித்துவிடக் கூடாது என்றும் காலாவதித் தேதியை நீட்டிக்கவும் என்று விசேஷமான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்துதானே விற்பனையகத்திற்கு வந்து சேருகிறது. 


மக்கள் அதனை வாங்கிக் கழுவிக் காய வைத்து அரவை மிஷினில் அரைத்து மாவாக்கி பயன்படுத்துகிறார்கள். அப்படிக் காயப் போட்டிருக்கும் போது அந்த தானியத்தின் அருகில் கூட எங்களால் செல்ல முடிவது இல்லை. அத்தனை வீரியமான மருந்துகளை பயன்படுத்தி உள்ளனர். 


'விஷம் கலந்த தானியம் என்று தெரிந்தே நாங்கள் எப்படி அதனை இரையாக எடுத்துக் கொள்ள முடியும்?  மக்கள்தான் தாங்கள் மிகுந்த அறிவாளி என்று பெயர்பண்ணிக்கொண்டு அறியாமையில் உழல்கிறார்கள் என்றால், நாங்களும் அப்படி இருக்க முடியுமா?" என்று பறவைகள் சார்பாக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது மைனா. 


சட்டென மறுமொழியாகக் கூட்டத்தில் இருந்து ஒரு குரல், "மனிதர்கள் தரும் சமைத்த உணவும் பலகாரத் தின்பண்டங்களில் மட்டும் விஷம் இல்லை என்றா சொல்கிறாய்?" என்றது. 


"இல்லாமல் எப்படிப் போகும்.... ஆனாலும் நேரடியாக விஷம் அருந்துவதற்கும் ஸ்லோ பாய்சன் போன்ற ஒன்றை எடுத்துக் கொள்வதற்கும் உள்ள வித்தியாசம்தான் இதில் அடங்கியுள்ளது" என்றது வி.ஐ.பி.காகம். அடுத்ததாக கோமாதா எழுந்து வந்து பேசியது. முதலில் 'தாதா'விற்கு நன்றி கூறி,  கூடவே மன்னிப்பும் கேட்டது. 


"போன வாரம் என்னோட கன்னுக்குட்டிய சரியான நேரத்தில, அது தின்னு விழுங்க இருந்த பிளாஸ்டிக் பைய அதோடு வாயில இருந்து இழுத்துத் தூரப் போட்ட செயலுக்கு நான் அன்றைக்கே நன்றி சொல்லி இருக்கணும். அப்போ.. எனக்கு இருந்த பதற்றத்தில முறையா நன்றி சொல்ல முடியல. இப்போ... எல்லார் முன்னாடியும் 'தாதா'க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."


"எங்களோட நிலைமை முன்ன எல்லாம் ரொம்ப சிறப்பா இருந்ததுனு 'தாதா' பேசும்போது சொல்லுச்சு. எங்க முன்னோர்கள் காலத்துல எங்களோட சேர்ந்து கழுதைன்னு ஒரு இனம் இருந்ததுனு... எங்க பாட்டி கதை கதையாச் சொல்லும். இப்போ... அப்படி ஒரு இனம் இருக்கான்னே தெரியலையே!" என்று தனது நெருங்கிய தோழமை இனத்திற்கு நேர்ந்த நிலையை எண்ணி வருந்தியது. 




கோமாதாவைத் தொடர்ந்து வி.ஐ.பி. காகம் தன்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க வந்தது. 


"எல்லாரும் என்னைத் தற்பெருமையும் தலைக்கணமும் கொண்டவளா பார்க்குறீங்கன்னு தெரியும். உண்மை என்னன்னா, நான் உங்க எல்லோரையும் விட அதிகமான இடங்களுக்குப் பறந்து பயணப்படுறேன். நிறைய மனிதர்களையும் அவங்களோட வாழ்க்கை முறையையும் நேரடியா பார்த்து நிறைய அனுபவங்கள சேர்த்து வைச்சுருக்கிறேன். அதனால உங்களுக்கெல்லாம் நான் திமிருபிடிச்ச காகமாத் தெரியுறேன்" என்று சொல்லிக் கொண்டே ஓரக்கண்ணால் 'தாதா' நாயைப் பார்த்தது. 


'தாதா' நாய் அதை கவனிக்காதது போல பாவனை செய்து கொண்டு வேறு பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தது. 


"இந்த மனிதர்கள் ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் இப்படில்லாம் கண்டது கழியதுகளைச் சாப்பிடுறாங்க. அவர்களோட பாரம்பரிய உணவுமுறைய அவங்களே மறந்துட்டு, வியாதிகள் எல்லாம் பெருக ஆரம்பிச்சதுக்கு அப்புறமா இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் திருந்தி பாரம்பரிய அரிசி, தானியம், சிறுதானியம் என்று மாறிக் கொண்டு வருகிறார்கள். 


ஆனால் அதுக்கு முன்னாடியே அவங்க கெட்டதோட மட்டும் இல்லாம.... நம்மப் போலவுள்ள சின்னச்சின்ன உயிரினங்களோட இயற்கையான  தகவமைப்பையும் ஒட்டுமொத்தமா மாத்திட்டாங்க. நமக்கும் அவங்க சாப்புடுற ஜங்க் ஃபுட் கலாச்சாரத்த பழக்கிட்டாங்க.  பிஸ்கட், காராச்சேவு, மிக்ஸர், சீவல்.... இதுமாதிரி எண்ணெய் பலகாரங்கள்,  அதுலயும் தரமில்லாத கலப்பட எண்ணெயில தயாரிச்ச பலகாரங்கள்னு என்னென்ன ஆகாத போகாத உணவெல்லாம் உண்டோ அதையெல்லாம் நமக்கும் சாப்பிடப் பழக்கிட்டாங்க. 


இதில வேற நம்மப்போன்ற ஜீவன்களக் காப்பாத்துறோம்னு  ஆளாளுக்குக் கிளம்பிட்டாங்க. பறவைக்குச் சாப்பாடு வைக்கிறேன்; குடிக்க தண்ணீ வைக்குறேன்னு பண்றாங்க. இன்னும் சிலர் எல்லாம் எங்க ஆஸ்தான சோதிடர் சொன்ன, பரிகாரத்தின்படி  இதப்படைச்சேன்; அதப்படைச்சேன்னு பறவையினத்தைப் போட்டுப் படாதபாடு படுத்தி வைக்கிறாங்க." 


"'தாதா' இப்போ புரியுதா.... நாங்க வெறுமன இந்த வி.ஐ.பி.பறவையா இல்லன்னு..." என்று 'தாதா' நாயிடம் நேரடியாகவே முறையிட்டது. 


நம்ம 'தாதா' நாய்க்கு இப்போ ரொம்பவே தர்ம சங்கடமா போயிடுச்சு. மௌனமா காகத்தைப் பார்த்து, 'நீ சொல்ற எல்லாமே உண்மைதான். நானும் ஒத்துக்குறேன்'னுற மாதிரி, தலைய மேலயும் கீழயுமா ஆட்டுச்சு. 


காகத்திற்கு இதுவே போதுமானதாக இருந்தது. 


சிட்டுக்குருவிங்க எல்லாம் இப்போ...  கோரஸ்ஸ, "இப்போ.... நாங்க என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்லுறீங்களா?" என்று பரிதாபமாகக் கேட்டன. 


அவற்றின் குரலிலேயே ஒருவித பயத்தின் மிரட்சி தொனித்தது. 


காகம் அவைகளுக்குத் தைரியம் தருவது போல மீண்டும் பேசியது. "அட சின்னக் குருவிங்களா...! உங்களை பயமுறுத்துவதற்காக இந்த மாநாடு நடத்தல. உலகத்தின் போக்கையும் மனிதர்களோட மாறிப்போன இயல்புகளையும் எடுத்துச் சொன்னது...  நீங்க எல்லாம் விழிப்புணர்வோட வாழணும்கிறதுக்காகத்தான். 


"என்ன 'தாதா' சும்மா.. பார்த்துக்கிட்டே இருக்கிறயே? வா... வா.... வந்து உன்னோட உறுதியான கருத்த இறுதியா சொல்லி மாநாட்ட நிறைவு செய்ய வாப்பா... நேரமாகுதுல்ல..." என்று நட்போடு அழைத்தது காகம்.


'தாதா'வும் புதிய தெம்போடு உற்சாகமாகத் துள்ளிக் குதித்துக் கொண்டு எழுந்து வந்தது. சபையோரைப் பார்த்து, " நம்மைப்போன்ற ஜீவன்களுக்கு இப்போ... மிக மிகத் தேவையான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தனும் அப்படிங்குற 

ஒரு உயரிய நோக்கத்தோடதான் இந்த மாநாட்டைக் கூட்டியது. நான் நினைத்ததைவிட மிகச் சிறப்பா எல்லாரும் வந்து கலந்துகிட்டு சிறப்பிச்சு இருக்கீங்க."


"நாமளாவது இன்னும் கொஞ்சம் வருடங்கள் இயற்கையோட இணைந்த வாழ்க்கைய வாழலாம். இந்த மனிதர்கள்தான் அடியோட இயற்கைய விட்டுவிலகிப் போயிட்டாங்க."


"முடிஞ்ச வரைக்கும் மனிதர்களை விட்டு விலகி இருங்க. மனிதர்களைச் சார்ந்து வாழும் நிலையை மாத்துங்க.  உங்க இரைய நீங்களே முயன்று தேடி உண்ணுங்க. மனுஷங்க எதைக் கொடுத்தாலும் உண்ணும் கெட்ட பழக்கத்த முதல்ல விடுங்க..." என்று 'தாதா' ஒரு பெரிய பட்டியலோட தன்னோட உரையை நிறைவு செய்தது.


திடீருன்னு ஞாபகம் வந்ததுபோல மீண்டும் ஓடி வந்து, "ஒரு நிமிஷம்... இந்த மாநாட்டோட வெற்றிங்குறது... இங்கிருந்து 

நீங்க கலைஞ்சு போற நிமிஷத்துல இருந்து உங்க கைகள்லதான் இருக்கு... இல்ல.. இல்ல.. உங்க வாயிலதான் இருக்கு... " என்று 'தாதா' சொன்னதும் கூடியிருந்த எல்லா ஜீவன்களும் தன்னை மறந்து சிரித்தபடியே கலைந்து பறந்தும் ஓடியும் மறைந்தன. 


'தாதா' நாய்க்கு, போன வாரம் இருந்த மனக்கவலை நீங்கி, மன நிறைவாக உணர்ந்தது. 


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்