பெயரளவிலான பெயர்கள்!

Jun 08, 2026,01:51 PM IST

- முனைவர் தி.தங்கலட்சுமி


தாயின் கருவறைவிட்டு வெளிப்பட்ட விநாடிதொட்டு

புத்துயிருக்கு எத்தனை எத்தனை செல்லப் பெயர்கள்...!


பத்துமாதம் அன்னையவள் உள்ளிருக்கும்மட்டும்

வாஞ்சையோடு எத்தனை பெயர்த் தெரிவுகள்

கணவனோடும் மாமன் மாமியோடும் சண்டையிட்டு

அன்னையிட்டாள் அவள் விருப்பத் தெரிவான ஒரு பெயரை!


இட்டபெயரை அவளே அழைத்ததில்லை முழுதாய்...

சுருக்கிக் குறுக்கிச் செல்லப்பெயரும் சின்னப்பெயரும்

வளர வளர குறும்புகளின் கோலோச்சலால்

வசைமொழியே அடைமொழியாய் அமைந்த பெயர்கள்!


தந்தை மீதான கோபத் தருணங்களின் பிரதிபலிப்பான

கோபாவேசங்களின் வழி செவிகூசும் ஏதேதோ பெயர்கள்

ஆனாலும் இட்டபெயர் முழுதாய்ச் சொன்னாளில்லை..!




பள்ளியின் வருகைப் பதிவேட்டில் தொடங்கி...

வரிசைக்கிரமம் தப்பாமல் சாதிச் சான்றுகள்,

சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள், ஆதாரங்கள்,

அலுவலகப் பதிவுகள், எனத் தொடரும் இட்டபெயர்


பெரும்பாலும் ஆண்பிள்ளையாய் இருப்பின்

பட்டப்பெயர்கள் அதிகமாயும்...

பெண்பிள்ளையாய் இருப்பின்

செல்லப்பெயர்கள் அதிகமாயும்...


பெண்ணுக்குத் தனிச்சலுகை அதிகமென சமூக கற்பிதம்...

திருமணம் முடிந்த கையோடு பெயர் மாற்றம் நிகழும் தன்னாலே!

தலைப்பெழுத்தும் தலையெழுத்தும் சேர்ந்தே மாறும்!


பெண்ணவளின் பெயரின் முன்னாலோ மிஸ்ஸஸ்

பின்னோடு கொண்டவனின் பெயர்!


பல புதிய அறிமுகங்களின் விளிப்புச் சொல்லே

மிஸ்ஸஸ் உடன் கணவன் பெயர் மாத்திரமே!


அவளும் தன்னை அறிமுகக்கும் போது

திருமதியோடு தன்பெயருடன் கொண்டவன்பெயர்

சேர்த்தே உரைப்பாள் பெருமிதச் செருக்கோடு!


எங்கேனுமோர் ஆண் இவ்வாறு பகர்வானா???


தன் பெயரை மொழியும்போது...

திருவுடன் தொடங்கி தன்பெயருடன் மனையாளின்பெயர்

இணைத்துச் செப்பிடுவானா???


ராதாகிருஷ்ணன், சீதாராமன், ஜானகிராமன்,

உமாமகேஸ்வரன், உமாபதி, காந்திமதிநாதன்,

லக்ஷ்மிகாந்தன், தாமரைமணாளன், வள்ளிநாயகன்....


அந்தவகையில் இறைவர்கள் அனைவரும்

முன்மாதிரி முன்னோடிகளே எனலாம்!


கால ஓட்டத்தில் பெயர்களில் தொடர் மாற்றங்கள்

உறவுமுறைப் பெயரான ஒட்டுதல்கள்

ஒட்டுதல் விட்டுப்போன நிலையில்

உறவில் விரிசல் நேர்ந்திட்ட பின்,

உறவற்ற உறுமல்களும் பெயராவதுமுண்டு!


பருவ மாற்றங்களில் சின்னஞ்சிறுசுகள்கூட

பெருசு, கிழவன் கிழவி -

கொஞ்சிக் கொஞ்சி பெயரிட்டவள் இப்போது

தாய்க்கிழவியென அவள்பெயரே மாறிப்போவாள்!


பண்புகளால் கட்டிக்காக்கப்பட்ட பழைமைப் பண்பாடுகள்

பஞ்சாய்ப் பறந்துபோனதும் ஏனோ!?

மதிப்பும் மரியாதையும் நிறைந்த சமூகம்

மறைந்து மாயமானதும் ஏனோ?!


வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்ற

பெருந்தலைவர்கள்கூட இன்றைய அநாகரிக

கருத்துச் சுதந்திரத்தால் பெயர் கெடுக்கப்படும் அவலம்...

அத்தலைவருக்குச் சிறுமையல்ல;

நச்சுமொழி பேசும் இணையவாசிக்கே சிறுமை!


சிறுமதிபடைத்தோரே போலிப் பெயரில்

இணையவெளியில் உலவித் திரிவர்!


பெயரளவில் பெயர் படைத்த பல்லோரும்

பெருமையற்ற சில்லோரும் என எல்லோரும்

ஓர்நாள் சர்வ நிச்சயமாய்....


இட்டபெயரும் பட்டப்பெயரும்

சூடிக்கொண்ட பெயரும் சூட்டிக்கொண்ட பெயரும்

பதவிகளால் பட்டங்களால் ஏற்பட்ட பெருமித ஆணவத்தால்

நிலைநாட்டிக்கொண்ட பெயருமென


அத்தனை அத்தனையும் மாறி நிலைப்பதென்னவோ...

நிலையற்றுப்போன பின்பான...

இறுதி நொடி கடந்த நிலையில்....

பெயரற்ற ஒன்றாய் அஃறிணைப் பொருளாய்...!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்