நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

Mar 11, 2026,11:37 AM IST

திருச்சி: இந்திய ரயில்வேயின் நவீன மற்றும் குறைந்த கட்டண நீண்டதூர சேவையான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் புதிய மைல்கல்லாக தமிழ்நாட்டில் இன்று புதிய சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.


தமிழகத்தின் தென் மாவட்டங்களையும் தொழில் நகரங்களையும் இணைக்கும் வகையில் இரண்டு புதிய வழித்தடங்களில் தனது பயணத்தைத் தொடங்குகிறது இந்த புதிய சேவைகள். இன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.


1. நாகர்கோவில் – சார்லபள்ளி (ஹைதராபாத்) அம்ரித் பாரத்




குமரி மாவட்ட மக்களுக்கும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்குப் பயணிக்கும் பயணிகளுக்கும் இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாகும்.


வண்டி எண்: 16357 (நாகர்கோவில் - சார்லபள்ளி) / 16358 (சார்லபள்ளி - நாகர்கோவில்)


பயண நேரம்: சுமார் 28 முதல் 30 மணிநேரம்.


முக்கிய நிறுத்தங்கள்: வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், சென்னை எழும்பூர், நெல்லூர், ஓங்கோல், குண்டூர்.


தென் தமிழகத்திலிருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் (சார்லபள்ளி முனையம்) செல்வதற்கு இது முதல் நேரடி அம்ரித் பாரத் சேவையாகும்.


2. போத்தனூர் (கோவை) – தன்பாத் அம்ரித் பாரத்


கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதி ஜவுளித் தொழிலாளர்கள் மற்றும் வடமாநிலப் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த ரயில் இயக்கப்படுகிறது.


வண்டி எண்: 16619 (போத்தனூர் - தன்பாத்) / 16620 (தன்பாத் - போத்தனூர்)


பயண நேரம்: சுமார் 43 முதல் 45 மணிநேரம்.


முக்கிய நிறுத்தங்கள்: கோயம்புத்தூர் சந்திப்பு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, ராயகடா, சம்பல்பூர், ரூர்கேலா, ராஞ்சி மற்றும் பொகாரோ ஸ்டீல் சிட்டி.


தென்னிந்தியாவின் தொழில் மையமான கோவையை, ஜார்கண்ட் மாநிலத்தின் நிலக்கரி மற்றும் கனிம வள மையங்களுடன் இந்த ரயில் நேரடியாக இணைக்கிறது.


சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொகுசாகப் பயணம் செய்யும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது: ரயிலின் முன்னும் பின்னும் இரண்டு என்ஜின்கள் இணைக்கப்பட்டுள்ளதால், வேகம் மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது.


ஸ்லீப்பர் மற்றும் பொதுப் பெட்டிகள் மட்டுமே கொண்ட இந்த ரயிலில் நவீன இருக்கைகள், மொபைல் சார்ஜிங் போர்ட்கள் (USB Type-A & C), சிசிடிவி கேமராக்கள் மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயில்களை விடக் குறைவான, சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இணையான கட்டணத்தில் நவீன வசதிகளைப் பெறலாம். 


மேலும் 2 ரயில்கள்


இதேபோல நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ராமேஸ்வரம் – மங்களூரு, நெல்லை – மங்களூரு மற்றும் மயிலாடுதுறை – காரைக்குடி ஆகிய வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகளும் தொடங்கப்படவுள்ளன. 


1. ராமேஸ்வரம் - மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் (16621/16622)


ராமேஸ்வரம் மற்றும் கர்நாடகாவின் மங்களூரு நகரங்களை இணைக்கும் வகையில் இந்தப் புதிய ரயில் இயக்கப்படும்.


வண்டி எண் 16622 (மங்களூரு - ராமேஸ்வரம்): சனிக்கிழமைகளில் இரவு 07:30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, ஞாயிறு காலை 10:50 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும்.


வண்டி எண் 16621 (ராமேஸ்வரம் - மங்களூரு): ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 03:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, திங்கள் காலை 06:55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.


முக்கிய நிறுத்தங்கள்: ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர்.


2. நெல்லை - மங்களூரு வாராந்திர ரயில் (06708)


தென் தமிழக மக்கள் மங்களூரு மற்றும் கேரளாவின் வடபகுதிகளுக்கு எளிதாகச் செல்ல இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமை மாலை 05:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09:50 மணிக்கு மங்களூரு சந்திப்பை சென்றடையும்.


வழித்தடம்: விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு சென்று, அங்கிருந்து கேரளா வழியாக மங்களூரு சென்றடைகிறது.


3. மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில்


காவிரி டெல்டா மாவட்டங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடியை இணைக்கிறது.


ஆன்மீக சுற்றுலா பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இது இயக்கப்படுகிறது.


வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்ட இந்த ரயில் சேவை தற்போது 7 நாட்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!

news

ஆசிரியர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்