International Women's day: பெண்கள் தினம் மட்டுமல்லாமல் .. அனைத்து தினங்களும் கொண்டாடுவோம்!

Mar 08, 2025,12:23 PM IST

ஏழு என்ற எண்ணிற்கு 

முழுமை என்றொரு பொருள் உண்டு

வாரத்தின் நாட்களைப் போல் 

மனித பிறப்புகளை போல் 

கடை ஏழு வள்ளல்களைப் போல் 

ஏழு ஸ்வரங்களைப் போல் 

ஏழு கடல்கள் போல்

ஏழு கண்டங்களைப் போல் 

திருக்குறளின் ஏழு சீர்களைப் போல் 

நாடிகளைப் போல் 

உடலில் ஏழு ஆதாரங்களைப் போல் 

வானவில்லின் நிறங்களை போல்

பெண் என்பவளும் 

ஏழு உற்ற நிலைகளான 

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை

அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய 

நிலைகளைப் பெற்று முழுமை அடைகிறாள்




உயிரினங்களில் ஆணை அழகாய் படைத்த இறைவன்

மனிதரில் பெண்ணை அழகாய் படைத்தான்

இயற்கை சுழற்சியின் நியதி மாறி

பரிணாம வளர்ச்சியின் மைய புள்ளியை உடைத்தான்

அன்பு கனிவு பொறுமை தியாகம் போன்ற 

புதையல் குணங்களை அவள் உள்ளம் நுழைத்து அடைத்தான்

உயிர்களை ஆக்கும் சக்தி பெண்ணுக்குத் தந்து 

பிரம்மனுக்கு விடுப்பு கொடுத்தான் 

காக்கும் சக்தி அவளுக்குத் தந்து 

திருமாலைப் பாம்பனையில் படுக்க வைத்தான் 

துயர்களை அழிக்கும் சக்தி வற்றாது அளித்து 

ஈசனுக்கும் சற்றே ஓய்வு கொடுத்தான்!

உலகை இயக்கும் சக்தியின் வித்தாய் 

பெண்ணை ஆக்கிக் களித்ததுடன்

பலப்பல வித்தகம் புரியும் பெண்ணைப் போற்றும்

உலகத்திற்கு தவறாது உயர்வு அளித்தான்

பூத்துக் குலுங்கும் மலராக மட்டுமல்ல

மரத்தை தாங்கும் வேராகவும் 

நதிகளில் ஓடும் நீராக மட்டுமல்ல 

நதிகள் சங்கமிக்கும் கடலாகவும் 

அமுதூட்டும் தாயாக மட்டுமல்ல 

அனைத்து வரங்களும் அளிக்கும் தேவதையாகவும் 

இறைவன் பெண்ணை படைத்தான் 


பிறப்பினால் பெருமை சேர்ப்பதில் சூரியனாகவும் 

பருவப் பெண்ணாய் பெருமை சேர்ப்பதில் நீர் வீழ்ச்சியாகவும் 

குடும்பத் தலைவியை புகுந்த வீட்டிற்குப் 

பெருமை சேர்ப்பதில் சூரியகாந்தியாகவும் 

பணியிடத்தில் பெருமை சேர்ப்பதில் சந்தன மரமாகவும் 

மொத்தத்தில் பெண் என்பவள் 

இயற்கை அழித்த வரமாக 

இறைவன் பெண்ணை படைத்தான் 


கரங்கள் துணையின்றி காரியங்கள் ஆற்ற முடியாது!

கதிரவன் வருகை இன்றி காரிருள் கரைய முடியாது!

பெண் என்ற காரிகையின் துணையின்றி 

பெரும்பயனை அடைய முடியாது!

ஆசைகள் கனவுகளாக, நிஜங்கள் நிழலாக 

வறுமைகள் பாரமாக எல்லாவற்றையும் 

தாங்கி நிற்கும் ஆணி வேராக 

நிமிர்ந்து நிற்பவள் பெண்!


ஆணின் வாழ்வில் பெண் ஏற்றுவாள் ஜோதி 

அனைத்திலும் வேண்டும் அவளுக்கு சம நீதி

பெண்களிடம் தேட வேண்டியது நல்ல குணம்

தேடக்கூடாதது அவளிடம் காசு பணம் 

இது அறிந்து கொள்ள வேண்டும் ஆண் மனம் 

இல்லையெனில் அவன் ஒரு பயனற்ற பிணம் 

தெய்வம் என பூஜிக்க வேண்டாம் 

தேவதை என கொண்டாட வேண்டாம் 

சக மனுஷி என அன்பு காட்டினால் போதும் 

இப்புவியில் தன் மூச்சு உள்ளவரை 

உயிரையும் கொடுப்பாள் பெண்


சமையலா சாப்ட்வேரா 

விளையாட்டா விண்வெளியா 

ஆராய்ச்சியா கலைகளின் ஆக்கமா

எதிலும் சிகரம் தொடுவாள் 

பாரதி கண்ட புதுமைப்பெண் 

வெட்டிச் சாய்ப்பினும் வீறு கொண்டெழுவாள்

கல்லறையை கருவறையாக்க!

கற்பினால் சுட்டெரிப்பாள்

கயவரின் அநீதியை 

பாலியல் கொடுமையை எதிர்த்துப் போராடும் 

பாவையும் அவளே! 

காலக்கொடுமைகளை வென்று வீழ்த்தும் 

கன்னியும் அவளே

அடுப்படியே உலகமென  வாழ்ந்தவளும் பெண்ணே

நிலாவிற்கே சென்று நெஞ்சுரம் நிறைந்தவளும் பெண்ணே 

பிரசவத்தின் போதெல்லாம் மறுபிறவி எடுக்கும் அதிசயமும் பெண்ணே 

பெற்ற வீடு புகுந்த வீடு என்று பிடுங்கி நட்டாலும்

பலன் தரும் பயிரும் பெண்ணே 

உயிர் தந்த உறவினில் மகளாய்

உயிருக்கு உயிரான மனைவியாய்

உயிருக்கு உரு கொடுத்த அன்னையாய் 

உயிருக்குள் உணர்வளித்த தோழியாய் 

ஒவ்வொரு நிலையிலும் உள்ள பெண்களை 

பெண்கள் தினம் மட்டுமல்லாமல் 

அனைத்து தினங்களும் கொண்டாடுவோம்


கவிதை: வி. ராஜேஸ்வரி

Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்