ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான சிபு சோரன் (81) இன்று காலமானார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.
தனது தந்தையின் மறைவுச் செய்தியை சிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அன்பிற்குரிய திஷோம் குருஜி எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்," என்று அவர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கங்காராம் மருத்துவமனை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சிபு சோரன் ஜூன் 19 அன்று அனுமதிக்கப்பட்டதாகவும், சிறுநீரகவியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஏ.கே. பல்லாவின் கண்காணிப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் பன்முக மருத்துவக் குழுவின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், ஆகஸ்ட் 4, 2025 அன்று, சிபு சோரன் தனது குடும்பத்தினர் அருகில் இருக்க, அமைதியாக காலமானார். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும், ஜார்க்கண்ட் மக்களுக்கும் இந்த துயரமான இழப்பு நேரத்தில் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலில் மறக்க முடியாதவர்
இந்திய அரசியலில் மறக்க முடியாத அரசியல் தலைவர் சிபு சோரன். 1993ம் ஆண்டு அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் ஆரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது சிபுசோரன் உள்ளிட்ட நான்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்கள் அதிரடியாக பி.வி. நரசிம்மராவ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் நரசிம்ம ராவ் அரசு தப்பியது. அது பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. நாடு முழுவதும் அப்போது சிபு சோரன் பரபரப்பாக பேசப்பட்டார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் வாழ்க்கையில், சிபு சோரன் எட்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் உருவானதற்கு காரணகர்த்தா
ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவாக முக்கிய காரணமாக அமைந்தவர் சிபு சோரன். ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தின் ராம்நகர் மாவட்டத்தில் சந்தால் பழங்குடி சமூகத்தில் பிறந்த சிபு சோரன், 1972 இல் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் ஏ.கே. ராய் மற்றும் குர்மி மஹதோ தலைவர் பினோத் பிஹாரி மஹதோ ஆகியோருடன் இணைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை நிறுவினார்.
ஜார்க்கண்ட் தனி மாநில கோரிக்கை இயக்கத்தின் முக்கிய முகமாக அவர் விளங்கினார். இதன் விளைவாக 2000 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது.
1980 இல் தும்ராவில் இருந்து முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பின்னர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கோட்டையாக மாறியது. 2019 ஆம் ஆண்டு தேர்தலில், பாஜகவின் நலின் சோரன் 45,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இக்கோட்டையில் சிபு சோரன் தோல்வியடைந்தார்.
முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் பதவிகள்
சிபு சோரன் மத்திய அமைச்சராகவும், மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகவும் பதவி வகித்தார். ஆனால் எந்த ஒரு பதவிக் காலத்தையும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. 2005 இல் முதல் முறையாக ஜார்க்கண்ட் முதல்வரானார், ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஒன்பது நாட்களிலேயே பதவி விலகினார். மேலும் இரண்டு முறை முதல்வர் பதவி வகித்தார், ஆனால் கூட்டணி அரசியலின் திருப்பங்களால் இரண்டுமே சில மாதங்களே நீடித்தன.
அவரது மத்திய அமைச்சரவை பயணமும் இதே போல் அமைந்தது. 2004 இல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களிடையே நடந்த மோதலுடன் தொடர்புடைய 1974 சிருதிஹ் வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார், ஆனால் ஜார்க்கண்ட் முதல்வராகப் பொறுப்பேற்க பதவி விலகினார்.
முதல்வராக பத்து நாட்கள் நீடித்தார். 2006 இல் மீண்டும் மத்திய நிலக்கரித்துறை அமைச்சரானார். ஒரு வருடத்திற்குள், தனது முன்னாள் செயலாளர் சஷினத் ஜா கொலை வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதால் மீண்டும் பதவி விலக நேர்ந்தது. கொலை வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட முதல் மத்திய அமைச்சர் இவர்தான். பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது.
ஜார்க்கண்டில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு அவரது கட்சி ஆதரவளித்ததால், அவரது கடைசி முதல்வர் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால், சிபு சோரன் அரசு கவிழ்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி சிபு சோரனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், சிபு சோரன் ஜி ஒரு அடித்தள மக்களுக்கான தலைவர். மக்களுக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பொது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர். பழங்குடி சமூகங்கள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் குறிப்பாக ஆர்வம் காட்டினார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், அபிமானிகளுடனும் உள்ளன. ஜார்க்கண்ட் முதல்வர் ஸ்ரீ ஹேமந்த் சோரன் ஜியிடம் பேசி இரங்கல் தெரிவித்தேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
சிபு சோரனுக்கு மனைவி ரூபி சோரன், மகன்கள் ஹேமந்த், பசந்த் மற்றும் மகள் அஞ்சலி ஆகியோர் உள்ளனர். அவரது மகன் துர்கா சோரன் 2009 இல் காலமானார். ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராகவும், சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். பசந்த் ஒரு சட்டமன்ற உறுப்பினர்.
அருணாச்சலப் பிரதேச விவகாரம்: ராகுல் காந்தி பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
தொடர் மழை... வைகை அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!
கவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்!
திமுகவின் சுரண்டல் கொள்கையால் மக்கள் வாழ்க்கை நடத்தவே வழியின்றி தடுமாறுகின்றனர்: டாக்டர் அன்புமணி!
வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
முதல்வருடன் சந்திப்பு.. ஓபிஎஸ் திடீர் அறிக்கைக்கு இது தான் காரணமா.. அடுத்து என்ன செய்வார்?
சிபு சோரன்.. மறக்க முடியாத அரசியல்வாதி.. ஜார்க்கண்ட் அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவு!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.40 உயர்வு!
TN Assembly elections 2026: அதிகமான கட்சிகள் கூட்டணிக்கு வருவது திமுக.,விற்கு சாதகமா, பாதகமா?
{{comments.comment}}