- ஜோசப் சாம்ராஜ்
தேவன் குறிச்சி மலை அற்புதமான இடம். மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி அருகில் உள்ளது. பாண்டிய மன்னன் கட்டிய கோவில் உள்ளது. ஒரு நீண்ட சுரங்கப்பாதை உள்ளதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். விடுமுறை நாட்களில் டிரெக்கிங் செல்வது உண்டு.
மலை அடிவாரத்தில் இயற்கை சுனை உள்ளது. எல்லா நேரங்களிலும் தண்ணீர் கிடைக்கும். சுவையான தேங்காய் தண்ணீர். மலையை சுற்றிலும் குடை போன்ற நிழல் தரும் புளியஞ்சோலை இருக்கிறது. மலையின் உயரத்தில் இருந்து இது தான் என் வீடு என்று சுட்டிகாட்டிக்கொள்வதுண்டு.
ஊரின் மிகப் பெரிய அடையாளம் காந்தி நிகேதன் ஆசிரமம் தான். மகாத்மா காந்தி அஸ்தி உள்ளே வைத்து காந்தி சிலை கட்டப்பட்டது. நாங்கள் கதர் ஆடை வெள்ளை வேஷ்டி தான் அணிவோம். ஆசிரியர்களை ஐயா அக்கா என்று தான் அழைப்பார்கள். ஒழுக்கம் மட்டும் தான் பள்ளியின் அடையாளம். வெள்ளி தோறும் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை நெஞ்சை அள்ளும். ஆசிரமத்தின் உள்ளே சிறுதொழில் பயிற்சி மற்றும் மண்பாண்டம் செய்யும் இடம் சோப் செய்யும் இடமும் உண்டு. நான் 1980ல் பத்தாம் வகுப்பு படித்தேன். அப்போது பணி செய்த ஆசிரியர்களை அழைத்து சங்கமநிகழ்வு நடத்தினோம். அது எங்கள் வாழ்வின் பொக்கிஷம்.

மேலும் மாணவர்கள் தங்கி படிக்க ஜான் ஹாஸ்டல் உண்டு. விடுமுறை வேதாகபள்ளி நடத்திய காலங்கள் மறக்க இயலாது. ஆண்டு தோறும் நடைபெறும் ஏழு ஊர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். மேனியெங்கும் கரியை பூசிக்கொண்டு மிரட்டும் ஆட்களும் கிழவன் கிழவி வேஷம் போட்டு ஆடும் ஆட்டமும் மறக்க இயலாது.
மருத்துவர் முத்துகிருஷ்ணன், மருத்துவர் ஜெயராம் இவர்கள் மருத்துவ சிகிச்சை மக்களை சுகமாக காப்பாற்றினார்கள். வருடந்தோறும் நல்ல மழையும் செழிப்பான ஊராக திகழ்ந்தது தே. கல்லுப்பட்டி.
சங்கமநிகழ்வு ஒரு மண்டபத்தில் வைத்து நடத்தினோம். நூறு மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நாங்கள் ஆச்சரியமாக ஆனந்தமாக கலந்துரையாடல் செய்து கொண்டோம். ஆனந்த கண்ணீரில் கூத்தாடினோம். எத்தனை யோ நண்பர்கள் இழந்து விட்டோம்.நான் படித்த காலத்தில் பயன்படுத்திய ஜாமின்ட்ரிபாக்ஸ் நூல் நூற்ற தக்கிளி ஆகியவற்றை காட்டி அப்லாஸ் வாங்கினேன்.
பரிசு பொருட்களை பகிர்ந்து கொண்டோம். பசுமை நிறைந்த நினைவுகளை பாடல் பாடி நடனம் ஆடினோம். எங்கள் குழந்தைகளும் சேர்த்து ஆடி மகிழும் தருணம் அது. எந்த ஊரில் எந்த நாட்டில் பார்ப்போம் என்று நினைத்து கூட பார்க்க வில்லை. பண்டாரங்குளத்திலே குளித்ததும் பீப்பிசெய்து ஊதியதும்... பாடல் படித்தேன். முன்னால் ஆசிரியர்கள் ஊமையாக இருந்த ஜோ வா இப்படி என்று பாராட்டினார்கள். வாழ்வின் பொக்கிஷம் இது. இதை மாடு போல அசை போட்டுக் கொண்டு வாழ்ந்தால் நாமும் நூறாண்டு காலம் வாழலாம்.
சிறுவயதில் கண்ணன் சைக்கிள் கடையில் ஒரு மணி நேரத்திற்கு வாடகை ஒரு ரூபாய் கட்டி விட்டு குரங்கு பெடல் போட்டு மிதிவண்டி ஓட்டுவது தான் பொழுது போக்கு. ஊரின் நடுவே சதுரகிணறு குளியல், தொட்டு விளையாட்டும் விடுமுறை தோறும் உண்டு. ஜெயலட்சுமி பிரியாணி ஹோட்டல் ராமா லஞ் ஹோம் தயிர் வடை, பழரசம் மணக்க மணக்க முனியாண்டி விலாஸ் புரோட்டா சால்னா, பேனா பென்சில் வாங்க நாகூர் கனி ஷாப், சேவு சீவல் வாங்க நண்பர் குமாரு கடை, காய்கறிகள் வாங்க சுப்பு கடை, தேங்காய் வாங்க திருப்பதி கடை, ஜவுளி வாங்க சுப்பையன் செட்டியார் கடை எல்லாம் சிறுபிராயத்து நினைவலைகள்.
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)
விஷ்ணு சஹஸ்ரநாமம்.. அம்புப் படுக்கையிலிருந்து.. பீஷ்மர் கற்பித்த ஸ்தோத்திரம்!
இள மீனாள்!
Golden memories: உம்முன்னு இருந்த.. ஜோ வா இப்படி??
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
கோப்பையும் மயிலும்
The World I Carry Within
வட போச்சே!
Monday Motivation: தாலாட்டும் சில ஞாபகங்கள்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
{{comments.comment}}