மார்கழி மாதத்தின் ஏழாம் நாள் வழிபாட்டில் பாட வேண்டிய திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் இதோ...
திருப்பாவை பாடல் 07 :
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

திருவெம்பாவை பாடல் 07 :
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே “சிவசிவ” என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}