- நவீன் ஸ்ரீதர்.வி
கடந்த தொடரில் பாண்டிய பேரரசியாய் தடாதகை பட்டம் தரித்த நிகழ்வைப் பற்றிப் பார்த்தோம். பாண்டிய நாடு பெற்ற அந்த மாபெரும் பாக்கியத்தைப் பார் முழுவதும் பெறவிருந்த காலமும் வந்தது. தடாதகைக்கு பட்டம் சூட்டிய சில நாட்களுக்கு பிறகு அவளின் தந்தையான மலையத்துவச பாண்டிய மன்னர் சிவபதம் அடைந்தார். முழு அதிகாரமும் அப்போது பன்னிரண்டே வயதான தடாதகை வசம் வந்தது. இது பாண்டிய நாட்டை சார்ந்த சிற்றரசர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தாங்கள் ஒரு பெண்ணின் கீழ் செயல்படுவதா என்ற அகங்காரம் அவர்களுக்கு. என்ன செய்வது!
அண்டங்களுக்கெல்லாம் ஆதாரமானவளே அகங்காரமற்று மானிட அவதாரம் எடுத்து அதன்படி வாழ்கின்றாள் என்ற அவளின் அருள்திரத்தை உணரும் உன்னத நிலை கிட்டாமல் அகந்தை அவர்கள் கண்களை மறைத்தது. இதை நமது வாழ்வின் நடைமுறையிலும் பொறுத்தி பார்க்கலாம். எங்கும் நிறைந்த இறை ஆற்றலானது நமக்குள் நம் ஆன்மாவிலும் உறைகிறது. ஆனால் வெளிப்புற மாயைகளிலும், "தான்" என்ற அகந்தையிலும் சிக்கி ஆணவத்தில் தத்தளிக்கும் மனமானது, நம் அருகிலேயே, ஏன் நமக்குள்ளேயே ஒளிரும் ஆன்மீக பரத்துவத்தை, அந்த ஆதிபராசக்தியை, அந்த இறை ஆற்றலை உணர விடாது தடுக்கிறது.
அது போல தான் தேவரும், மூவரும், முனிவர்களும்,மறைகளும் போற்றிப் பாடித் தேடும் மலர்பதங்கள் நாம் நடக்கும் மண்ணிலேயே நம்மோடு நடக்கிறதே என்ற அன்னையின் கருணையை என்னாது, "தான்" என்ற ஆணவச் செருக்கு சிற்றரசர்கள் கண்களை அன்று மறைத்தது. மேலும் அண்டை நாடுகளிலும் பாண்டிய நாட்டை ஒரு பெண் ஆட்சி செய்கிறாளாமே என்ற பேச்சு எழ அவை அனைத்தையும் தவிடுபொடியாக்க திக்விஜயம் மேற்கொள்கிறாள் தடாதகை.

திக் என்றால் திசைகள், விஜயம் என்றால் வெற்றி, ஆக எட்டுத்திக்கும் வெற்றிவாகை சூட புறப்படுகிறாள் தடாதகை. தான் அரசியானதும், இளம் வயது முதலே தன் தோழியாய் திகழ்ந்த சுமதி பிராட்டியை தனது மந்திரி மற்றும் படை தளபதியாக நியமிக்கிறாள் தடாதகை. பொதுவாக பாண்டிய நாட்டில் ஒரு வழக்கம் இருந்துள்ளது, அது அரசவையில் தலைமை மந்திரியாக செயல்படுபவரே போர்ப்படை தளபதியாகவும் திகழ்வார், இவ்வழக்கம் மதுரை நாயக்கர்கள் ஆட்சியிலும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
இவ்வாறாக மந்திரி மற்றும் படை தளபதியாக பொறுப்பேற்பவர்களுக்கு "தளவாய்" என்னும் சிறப்பு பெயரும் உண்டு,இன்றும் மதுரையில் அப்படிப்பட்ட தளவாய்கள் வாழ்ந்த இடம் "தளவாய்புரம்"என்று அழைக்கப்படுகிறது. அப்படியாக அரசியான தடாதகைக்கு அடுத்தபடியாக மந்திரி மற்றும் சேனாதிபதி ஆகிய இரு முக்கிய பொறுப்புகளும் சுமதி பிராட்டியைச் சேருகிறது. சாதரணமாக மானிடரால் இது சாத்தியமா? அதுவும் உலகில் முதல்முறையாக?!
அன்னை தடாதகை நினைத்தால் அனைத்தும் சாத்தியமே! இங்கு நாம் ஒரு சூட்சுமத்தை உணர வேண்டும். பொதுவாக அம்பிகையை உபாசிக்கும் ஸ்ரீவித்யா என்னும் சாக்த மரபில் தலைமை தெய்வமாய் மகாராணியாய் திகழ்பவள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியான ஸ்ரீ லலிதாம்பிகையே. ராணியான ஸ்ரீ லலிதாம்பிகையின் மந்திரியாக ஸ்ரீ ராஜ ஷ்யாமளை எனப்படும் ஸ்ரீ ராஜ மாதங்கி தேவியும், போர்ப் படை தளபதியாக ஸ்ரீ வாராகி தேவியும் திகழ்கின்றனர். இப்போது இங்கே மதுரையிலே அதே ஸ்ரீ லலிதாம்பிகை அக்னியில் ஆவிர்பவித்து தடாதகையாக வந்துள்ளாள், எனில் அந்த ஆதிபராசக்தியான தடாதகையின் மந்திரியாகவும், சேனாதிபதியாகவும் திகழும் சுமதி பிராட்டியார் ஸ்ரீ ராஜ ஷ்யாமளா தேவி மற்றும் ஸ்ரீ வாராகி தேவியின் ஆற்றலை ஒருங்கே பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
திக்கெல்லாம் போர் முரசு அதிர அனைத்து நாடுகளுக்கும் போருக்கான அறைகூவல் விடுக்கப்படுகிறது. சுமதி பிராட்டியார் தலைமையில் பாண்டிய நாட்டின் யானைப்படை,குதிரைப்படை, தேர்ப் படை,காலாட்படை என அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. அத்தனை நாடுகளையும் எதிர்க்க இந்த பாண்டிய நாட்டின் படை மட்டும் போதுமா? படையே இல்லாவிட்டாலும் கூட வெற்றி கொள்ளும் திறனுடைய வீரத்தின் அதிபதியான மலைமகளே இருக்கிறாளே! எனில் இந்தப் போர் எப்படிப்பட்டது?
அதுவரையும், இனியும் உலகம் காணாத , காண முடியாத போர் அது! ஒட்டுமொத்த நாடுகளும் ஒரு பெண் அரசியை எதிர்த்து களம் காண தயாரானது. மீன் கொடியை ஏந்தி, கையில் வில்லும் அம்பும் எடுத்து போர் முழவதிர படை எடுத்தாள் தடாதகை! இதில் ஆச்சரியம் என்னவென்றால் போரானது வெகு நாட்கள் நீடிக்கவில்லை! தடாதகை போர் தொடுத்த மாத்திரத்தில் அவளின் வீரத்துக்கு முன் எந்த ஆயுதமும் ஈடு கொடுக்க முடியவில்லை. போரில் எந்த உயிர் சேதமும் இல்லாமல் அனைத்து நாடுகளும் தடாதகையிடம் சரணடைந்தன. அப்போது பூமியில் கோலோச்சிய 56 தேசங்களும் தடாதகைக்கு அடிபணிந்தன. ஏனெனில் அவள் பாதத்தில் தஞ்சமடைய அனைத்து நாடுகளின் மணிமுடியும் ஏங்கினவே! மிகக்குறுகிய காலத்தில் உலகையே வென்றாள் தடாதகை!

உலகம் முழுவதும் ஓரணியில் தடாதகை சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தது. அனைத்து நாட்டு அரசர்களின் ஆணவமும் தடாதகையின் பார்வையில் தவிடு பொடி ஆனது. என்னதான் போர் தொடுத்து வென்றாலும் அவள் அன்னையன்றோ! தான் வெற்றி கொண்ட ராஜியங்ககள் அனைத்தையும் அந்தந்த மன்னர்கள் வசமே ஒப்படைத்தாள் தடாதகை. அவர்களும் ஆணவம் அழிந்த நிலையில் தடாதகை யின் கீழ் தங்கள் ராஜ்ஜியத்தை நடத்த மனமுவந்தனர். இச்செயலே அவள் வெற்றி பெற்றாலும் அதை காட்டிலும் அவளை ஒருபடி மேன்மையானவளாய் காட்டியது. இப்படியாக ஒட்டுமொத்த உலகமும் பாண்டிய பேரரசின் கீழ் வந்தது. ஒட்டுமொத்த உலகின் தலைநகராக மதுரை மாநகர் மிளிர்ந்தது. தடாதகையின் அருட்பார்வையில் அனைத்து நாடுகளும் சிறப்புற்று திகழ்ந்தது. அகிலம் முழுவதும் மீன் கொடி பறந்தது.
இந்த நிகழ்வையும் நம்முடனும் பொருத்திப் பார்க்கலாம். நமக்குள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை நம்முடனே நம்முள்ளேயே இருக்கும் பராசக்தியான தடாதகையை அறியவிடாமல் தடுக்கிறது. எப்போது இவை அனைத்தையும் விடுத்து நாம் தடாதகையின் பாதத்தில் தஞ்சமடைந்து சரணாகதி அடைகிறோமோ அப்போது அவள் நம்மை வழிநடத்துகிறாள்! நமது தீய குணங்களை வேரறுத்து நம்மை நம்மிடமே தந்து ஆட்சி செய்கிறாள்.
பரிபூரணமாக அவள் பதத்தே சரணாகதி அடையும் போது நமக்குள்ளும் "தடாதகை சாம்ராஜ்யம்" என்னும் ஆன்ம விழிப்பு நிலையும் முக்திக்கான பாதையும் மலர்கிறது! நம் ஆன்மாவிலும் மீனாட்சி ஆட்சி ஒளிர்கிறது! அகிலாண்டேஸ்வரியான தடாதகைக்கு பூலோகத்தை மட்டும் வெற்றி கொண்டால் மட்டும் போதுமோ? அதுவரை உலகம் கண்டிராத ஒரு பொற்காலத்தை தர அடி எடுத்து வைத்தாள் தடாதகை! என்ன நடந்தது? அடுத்த தொடரில் சிந்திப்போம் சிறப்பாக..
மீனாக்ஷீம்!!!
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}