வட போச்சே!

Sep 21, 2026,03:17 PM IST

- எம்.எல்.பிரபா


தோழிகள் மூவரும் தண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்றார்கள். குளத்தில் நீர் வற்றி வறண்டு போய் இருந்தது. பக்கத்து கழனியில் கொஞ்சம் பள்ளம் வெட்டப்பட்டு இருந்தது. விஜி, பானுவிடம் அங்கே பார் ஏதோ பானை மாதிரி தெரியுது. வா அங்க போலாம் என்றாள்.


அட ஆமா, தண்ணி இல்லாத இந்த  நேரத்துல பானையை  வச்சி என்ன பண்றது என்றாள் பானு.  உடனே விஜி அதுவும் பழைய பானை எடுத்தா எப்படி உடையும் எனக்கு வேணாம் என்றாள் .முதல்ல தோண்டி எடுக்கலாம் என்றாள் தேனு. 


பானைகளை எடுத்து வெளியே வைத்தனர். பக்கத்தில் இருந்த மீனுக்குட்டி அம்மா அங்க பாரு யாரோ வராங்க என்றாள். பேண்ட் சட்டை போட்ட ஒரு ஆபீஸ்சர் வந்து, இங்க என்னம்மா செய்றீங்க? இந்த பானை எல்லாம் தொடக்கூடாது. இதெல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தம். இது அகழ்வாராய்ச்சி செய்யற இடம் அப்படியே வைத்துவிட்டு நீங்க கிளம்புங்க என்றார். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


மூவரும் முணுமுணுத்தபடி வீட்டிற்கு சென்றார்கள். வீட்டிற்கு வந்தவுடன் தன் கணவரிடம் நடந்ததைச் சொன்னாள் தேனு. 'அகழ்வாராய்ச்சி'ன்னா என்னங்க ?என்று கேட்டாள். அதற்கு அவள் கணவன் இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதின் அடையாளம் என்றான். 




ஓ.... என்று கேட்டுக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள். அந்தப் பானையை பார்க்க ரொம்ப அழகா இருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது.'கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல' என்ன செய்யறது? என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் பானுவும் ,விஜியும் வேகமாக வந்து ,தேனு.. தேனு என்று அழைத்தார்கள். 


சீக்கிரமா வாயேன். நாம பானையை தோண்டி வச்சோமே, அதை டிவி காரங்க வந்து வீடியோ எடுக்குறாங்களாம். ஊர் மக்கள் எல்லோரையும் பேட்டி காண போறாங்களாம். நாமளும் போனா நம்பளையும் வீடியோ எடுப்பாங்க எல்லா 'டிவி'லயும் நியூஸ்ல போடுவாங்களாம். நாமளும் அதில் தெரிவோம் இல்ல. 


'நாங்க போய்கிட்டே இருக்கோம் நீயும் சீக்கிரமா பின்னாலே வந்துரு' என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டார்கள். வேலையெல்லாம் முடித்துவிட்டு செல்வதற்குள் டிவி சேனல் காரர்கள் எல்லாரையும் வீடியோ எடுத்து விட்டு கிளம்பி விட்டார்கள்.தேனுக்கு பெருத்த ஏமாற்றம். இன்னைக்கு நான் யார் முகத்துல முழி ச்சேன்னு தெரியல எதுவுமே எனக்கு நல்லதா அமையல! 


ஹும் ...எனக்குன்னு ஒரு நாள் வராமலா போகும் ?அப்ப பார்த்துக்கிறேன். என்று தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் தேனு.


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்