திருமணம்.. ஒரு நிமிடக் கதை (26)

Oct 03, 2026,02:52 PM IST

- பூரணவள்ளி சேகர்


சரவணன் மீனாட்சி  இருவரும் தம் இரு குழந்தைகளுடன் சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.


தன் குழந்தையுடன் எப்போதும் நண்பர்கள் போன்றே நடந்து வந்தனர். பிள்ளைகள் இருவரும் எல்லா விஷயங்களையும்  பெற்றோரிடம் பகிர்வது வழக்கமாக இருந்தது.


இதற்கிடையில் மகன் சந்தோஷ் தன் அம்மாவிடம் தனக்குத் திருமணம் செய்து வைக்கும் படி கூறினான்.


சந்தோஷிடம் இதை எதிர் பார்க்காத மீனாட்சி தங்கை காவியா படிப்பை முடித்து திருமணம் முடிந்த பிறகு தான் உனக்குத் திருமணம் செய்ய முடியும் என்று சிரித்துக்கொண்டே கூறினாள்.




அப்பாவிற்கு நீ உதவுவது போல எனக்கு உதவி செய்ய திருமணம் உடனே செய்யாவிட்டால் நான் உங்களிடம் பேச மாட்டேன் என்று கூறிய சந்தோஷிடம் போடாஎன்று கடிந்து கொண்டாள் மீனாட்சி.


மனசு நிறைந்த  கோபத்துடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றான் சந்தோஷ். எப்போதும் மகிழ்வாக இருக்கும் சந்தோஷ் ஏன் இப்படி இருக்கிறாய் என்று ஆசிரியர் பாலன் விசாரித்தார். சந்தோஷ் கூறிய காரணத்தைக் கேட்ட எல்லா ஆசிரியர்களும் குபீரெனச் சிரித்தனர்.


நீ இப்போதுதான் மூன்றாம் வகுப்பு படிக்கிறாய் திருமணம் செய்ய காலம் இருக்கிறது. நீ நன்கு படித்து நல்ல வேலைக்குச் சென்ற பின் உனக்குத் திருமணம் செய்வார்கள். நானும் உன் திருமணத்திற்கு வருவேன் என்று 

சந்தோஷின் வகுப்பு ஆசிரியை கமலா அவனின் தலை கோதியபடி எடுத்துக் கூறினாள்.


சந்தோஷின் கோபம் மறந்தது.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்