பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)

Oct 16, 2026,12:11 PM IST

- பூரணவள்ளி சேகர்


ரமேஷுக்கு இயற்கையாகவே ஓவியம் வரையும் பழக்கம் இருந்தது. தான் கண்ணில் பார்க்கும் இயற்கை நிகழ்வுகளைக் கூட மனக் கண்ணில் நிறுத்தி சிறப்பாக வரைவதில் வல்லவன் ரமேஷ்.  


நகரத்தின் பேருந்து நிலையம் இரயில் நிலையம் சந்தை போன்ற முக்கியமான இடங்களில் வரை பலகையை வைத்துக் கொண்டு  நிற்பது பழக்கம். அங்கு  ரமேஷ் பார்க்கும் நிகழ்வுகளை படமாக வரைவான் 


ரமேஷின் திறமையைப் பார்த்து வியந்து விடுமுறை நாட்களில் தன் குழந்தைகளின் படங்கள் குடும்பப் படங்களை சிலர் வரையச்  சொல்வதும் உண்டு.


திறமையை மதித்துக் கிடைக்கும் வருவாயில் தன் தாயுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்தான் ரமேஷ். ஒரு நாள் ஒரு   சாலையின்  ஓரத்தில் நின்று அங்கு பேருந்துகள் செல்வதையும் ஆட்கள் போவது வருவதையும் படமாக வரைந்து கொண்டிருந்தான்.




அங்கே ஒரு சிறுமி தன் தாயுடன் நடந்து வந்தாள். தாய் ஏதோ நினைவாகத் தன் கைப்பையை துழாவிக் கொண்டிருந்தாள். தாயின் கைப்பிடியில் இருந்து விடுபட்ட குழந்தை சாலையின் குறுக்கே ஓட ஆரம்பித்தது.


இதைப் பார்த்த ரமேஷ் குழந்தையைக் காப்பாற்ற வேண்டி பின்னாலேயே ஓடினான்.  வரிசையாக வந்த வண்டிகள் ஒலியெழுப்பிக்கொண்டே வந்தன. 


வாகன ஒலி எதையும் காதில் வாங்காமல் குழந்தையைக் கையில் பிடித்தவுடன் ஒரு நிமிடம் நிதானித்த போதுதான் வாகனங்களைக் கவனித்தான் ரமேஷ்.


வாகன ஓட்டிகள் திட்டினாலும் மற்றோர் பாராட்டினர். வாகன ஓட்டிகளுக்கு ரமேஷ் காதுகேட்க முடியாத பேசும் திறனற்றவன் என்று தெரியாதல்லவா?


பேசா ஓவியம் ஓடும் ஓவியத்தைக் காப்பாற்றிய மகிழ்வில்!


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்