அவள் யாரென்று தெரியுமா? - புத்தம் புதிய தொடர் கதை - அத்தியாயம் 1

Oct 17, 2026,03:05 PM IST

- மு. ரம்யா ஆனந்த்


மாலை நேரம்.


அந்தச் சிறிய ஊரின் கடைசித் தெருவில், காலத்தால் பழமையான ஒரு பெரிய வீட்டின் முன் ஆட்டோ வந்து நின்றது. கையில் ஒரு சிறிய பையுடன் இறங்கினாள் மீரா.


அந்த வீட்டின் பெயர்ப் பலகையில் “சிவசக்தி இல்லம்” என்று எழுதப்பட்டிருந்தது.


மீரா கதவைத் தட்டினாள்.


கதவைத் திறந்த வயதான ஜானகி, மீராவைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.


“நீ… நீ யாரும்மா?”


“என் பெயர் மீரா. இந்த வீட்டில் வாடகைக்கு அறை கிடைக்கும்னு சொன்னாங்க.”


மீராவைப் பார்த்த ஜானகியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.




“அம்மா… நீ திரும்பி வந்துட்டியா?” என்று முணுமுணுத்தாள். அந்த நேரத்தில் அங்கு வந்த மாலதி, “யாரு இந்தப் பொண்ணு?” என்று கேட்டாள்.


“வாடகைக்கு அறை கேட்டு வந்திருக்காங்க…” என்றாள் ஜானகி.


“நம்ம வீட்டில் இடம் இல்லை. வேற எங்கயாவது பார்த்துக்கச் சொல்லு!” என்று மாலதி கோபமாகக் கூறினாள்.


அப்போது அங்கு வந்த அரவிந்த், “இவங்க இங்கேயே தங்கட்டும். மேலே இருக்கிற அறையைத் திறந்து கொடுங்க” என்றான்.


மாலதியின் முகத்தில் கோபம் தெரிந்தது. மீரா மேலே உள்ள அறைக்குச் சென்றாள். அந்த அறைக்குள் நுழைந்ததும், அரவிந்த் என்ன தேவை என்றாலும் உடனே அழையுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.


மீராவிற்கு,தன் அம்மா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.


“மீரா… உன் வாழ்க்கையின் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், சிவசக்தி இல்லத்துக்குப் போ. ஆனால் அங்கே இருப்பவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே நம்பிவிடாதே!”


அந்த உண்மையைத் தேடித்தான் மீரா அங்கு வந்திருந்தாள்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, தன் அம்மாவின் புகைப்படத்தை மேசையின் மீது வைத்துவிட்டு அறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.


திரும்பிப் பார்த்தபோது புகைப்படம் காணவில்லை!


அதிர்ச்சியுடன் தேடிய மீரா, கதவின் அருகே நின்ற ஜானகியின் கையில் அந்தப் புகைப்படம் இருப்பதைக் கண்டாள்.


“இந்தப் புகைப்படம் உனக்கு எப்படிக் கிடைச்சது?” என்று பதற்றத்துடன் கேட்டாள் ஜானகி.


“இது என் அம்மாவோட புகைப்படம். அதுல இருக்கிற குழந்தை நான்தான். உங்களுக்கு என் அம்மாவைத் தெரியுமா?”


ஜானகியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.


“ஆமாம்மா… அந்தக் குழந்தை நீதான்…”


“அப்படின்னா என் அம்மாவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என் வாழ்க்கையில் என்ன நடந்தது? எங்க குடும்பத்தைப் பற்றி ஏன் யாரும் என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாங்க?”


ஜானகி பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.


அப்போது அங்கு வந்த மாலதி, “ஜானகி! அவளிடம் எதுவும் சொல்லாதே!” என்று எச்சரித்தாள்.


பிறகு மீராவைப் பார்த்து, “இந்த வீட்டில் தங்க வந்திருந்தா தங்கிட்டு போ. ஆனால் இந்தக் குடும்பத்தைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காதே!” என்றாள்.


ஆனால், மீரா உறுதியுடன் பதிலளித்தாள்.


“என் அம்மாவைப் பற்றிய உண்மையைத் தெரிஞ்சுக்கத்தான் நான் இங்கே வந்திருக்கேன். அதைத் தெரிஞ்சுக்காம நான் போக மாட்டேன்!”


மாலதி பயத்துடன் ஜானகியைத் தனியாக அழைத்துச் சென்றாள்.


“அந்தப் பெண்ணுக்கு உண்மை தெரிஞ்சா இந்தக் குடும்பமே அழிஞ்சிடும்!”


அந்த வார்த்தைகளைக் கேட்ட அரவிந்த், மீராவின் அறையைப் பார்த்தபடி முணுமுணுத்தான்.கோவமாக மீராவைப் பார்த்து, “மீரா… நீ இங்கே வந்ததே ஒரு பெரிய தப்பு!”


தொடரும்


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்