- சசிகலா விஸ்வநாதன்
சரவணன் இறந்து அவன் அந்திம காரியங்கள் எல்லாம் முடிந்தது. உறவினர் நண்பர்கள் யாவரும் நாவு நுனி வார்த்தைகளால், கௌரியை ஆறுதல் படுத்தி விட்டதாக பாவனை செய்து கொண்டார்கள். காதலித்து மணம் புரிந்தவன் ஆறே மாதங்களில் அவளை தவிக்கவிட்டுப் போய் சேர்ந்து விட்டான்.
இள வயது கைம்பெண் ஒதுங்கி இருக்க வேண்டுமாம். எத்தனை நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அலுவலகம் அனுமதிக்கும்? அப்படியே அனுமதித்தாலும்; அவளால் தனிமையில் இருக்க முடியுமா? தனிமையில் சரவணன் நினைவு, அவளை அலைக்கழிக்கும் துன்பம், உலகம் அறியாது.
வெளி உலகை மீண்டும் சந்திக்க, அவள் விழைந்தாள். மப்பும் மந்தாரமாக இருந்த வானம், ஒரு எதிர்பாரா கணத்தில், சாரல் விழ, வானவில் தோன்றியதும், கௌரி மெய் சிலிர்த்தாள். வானவில் மறைய ஆரம்பிக்க, தென்னை மரங்கள் சாமரம் வீசி கௌரியை அழைத்தது. கூதல் காற்றுடன் பெருமழை பொழிய; அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

ஒவ்வொரு மழை நாளிலும் அவளும், சரவணனும் மழையில் நனைந்து கொண்டே, இன்பமாய், காலாற நடப்பார்கள். அவன் நினைவில் கதவைத் திறந்து, படி தாண்டி வெளியேறி வந்தாள். கையில் மழை நீரை ஏந்த, அவள் மனம் தளும்பியது.
உடுத்தியிருந்த வெள்ளை சேலையை, சற்றை தூக்கி செருகி, கண் மூடி தட்டாமாலை சுற்றி சிறு பெண் போல் குதூகலித்தாள். இமையோரம் சரவணன் நினைப்பில் கண்ணீர் கசிய, அதில் கௌரி சங்கமித்தாள்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
Dilani Sridharan Poem: பேரழகு!
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
வேர் இன்றி விருட்சம் தான் உண்டோ?
சங்கமம்!
இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)
வாழ வைக்கும் வல்லாரைக்கு ஜே.. நினைவாற்றலைப் பெருக்கும் சூப்பர் கீரை!
பெருமிழலை குறும்ப நாயனார் திருவடிகள் போற்றி போற்றி!
{{comments.comment}}