மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

Oct 07, 2026,03:21 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தனது அகில இந்திய தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக நடைபெறும் இந்த அமைப்புக் கூட்டம், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   


மக்களால் உருவானவன் நான்:

கூட்டத்தில் பேசிய சிவகார்த்திகேயன், "எனக்கு பெயர், புகழ், வசதி என அனைத்தையும் கொடுத்தது தமிழ் மக்கள் தான். மக்களால் உருவாக்கப்பட்டவன் நான். எனவே, அவர்களுக்குத் திருப்பி ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த சந்திப்பு ஏதோ புதிதாக நடத்தப்படவில்லை. நாள்தோறும் நற்பணிகளை மேற்கொள்வதோடு, மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நற்பணி மன்றங்கள் மூலம் மக்களுக்கு உதவ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.   


எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் வழியில் உதவி:




தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கேப்டன் விஜயகாந்த் போன்ற திரையுலக முன்னோடிகள் ஏழை எளிய மக்களுக்கு அள்ளிக் கொடுத்தது போல் நாமும் உதவ வேண்டும். இவ்வளவும் செய்வதால் நமக்கு நிச்சயமாக நல்ல பலன் உண்டு. நான் பெரியவன் என்ற போட்டிக்காகவும், யாருக்காகவும் அல்லது யாரையும் எதிர்ப்பதற்காகவும் இதைச் செய்யவில்லை. முற்றிலும் மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் மட்டுமே செயல்படுகிறோம்" எனத் தெளிவுபடுத்தினார்.   


அஜித் பாணியில் அறிவுரை:

மேலும், நடிகர் அஜித்குமாரின் பாணியைப் பின்பற்றி ரசிகர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். "SK நிகழ்ச்சி என்றாலே கட்டுப்பாடு தான் பிரதானமாக இருக்க வேண்டும். நாள்தோறும் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற விமர்சனங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உதவி செய்வதில் வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை. முதலில் உங்களின் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள், அதற்குப் பிறகே நற்பணிகள்" எனத் தனது ரசிகர்களுக்கு அன்போடு அறிவுறுத்தினார்.   


விஜய், தனுஷ் பாணியில் தற்போது சிவகார்த்திகேயனும் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நலப் பணிகளுக்காக பயன்படுத்தி வருவது மட்டுமின்றி, இன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசிய பல விஷயங்கள், "இவரும் அரசியலுக்கு வர போகிறாரா?" என்ற கேள்வியை அனைவர் மனதில் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் மற்றும் எஸ்கே 27 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் இந்த இரு படங்களும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை முடித்த பிறகு தனது அடுத்த கட்ட திட்டம் பற்றி சிவகார்த்திகேயன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்