Short Story: தங்கக்கட்டி நடைபாதை

Oct 08, 2026,01:15 PM IST

- ராஜஸ்ரீ


ஒரு தங்க நகை வியாபாரி கடவுளிடம் நான் இறந்து மேலுலகம் போகும் பொழுது எனது தங்க கட்டிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அதற்கு கடவுள் அவ்வாறெல்லாம் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்றார்.


அதைக்கேட்ட வியாபாரி   உங்கள் பக்தனுக்காக இதை செய்யக் கூடாதா? என்று கெஞ்சினான். இவன் கெஞ்சியதும் கடவுள் சற்று மனமிறங்கி சரி, உனக்காக சற்று விதிமுறையை தளர்த்திக் கொள்கிறேன் என்றார்.


வியாபாரி மரணப்படுகையில் வீழ்ந்தான்.  தன் அருகிலேயே  தங்கக் கட்டி மூட்டையை  வைத்துக் கொண்டான்.  நிறைய உறவினர்கள் வந்தனர். இவன் மீதுள்ள பாசத்தால் அல்ல; தங்கக் கட்டிகளை  எப்படி எடுத்துச் செல்லப் போகிறான்? என்பதை  பார்ப்பதற்காக.


அவன் இறந்தான். உடனே தங்கக் கட்டி மூட்டையும் மறைந்து விட்டது. மேலுலகத்திற்கு மூட்டையுடன் சென்றான். வாயிலில் இருந்த காவலாளிகள் அவனிடம் இதையெல்லாம் இங்கு கொண்டு வரக் கூடாது என்று அவனை தடுத்து விட்டனர்.


வியாபாரி அவர்களிடம் நான் இதைக் கொண்டு வர கடவுளிடம் அனுமதி வாங்கியுள்ளேன் என்றான். அதைக் கேட்ட அவர்கள் அப்படி என்ன சிறப்பு வாய்ந்த பொருள்? மூட்டையை  திறந்து காட்டு என்றனர். 




அவனும் திறந்து காட்டினான். தங்கக் கட்டிகளைப் பார்த்த காவலாளிகள் விழுந்து விழுந்து சிரித்தனர். பிறகு  போயும் போயும் இதையா கொண்டு வந்தாய்? என்று கேட்டனர்.


உடனே வியாபாரி சற்று கோபத்துடன் இதோட மதிப்பு எவ்வளவு  தெரியுமா? இப்ப தங்கம் இருக்கும் விலைக்கு ஒரு கோடி ரூபாய் பெறும் என்றான்.


அதற்குக் காவலாளிகள்  அட, பயித்தியக்காரா, கீழே பார். இங்க  நடைபாதை  முழுவதும் தங்கக் கட்டிகள்தான். போயும் போயும் இதையா சுமந்துண்டு வந்தே. சரி, நடைபாதை வேலை முடிவதற்கு கொஞ்சம் தங்கக் கட்டிகள் குறைவா இருக்கு. அதுக்கு இதை எடுத்துக்கறோம் என்றனர்.


அதைக்கேட்ட வியாபாரி  நொந்து போய் விட்டான்.


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன். சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்