- சுதா திருநாராயணன்
1966 அல்லது 67ல் நான் பத்து வயது சிறுமி. வருடா வருடம். அம்மா பிரமாதமாக கொலு வைப்பாள்.
அக்கம் பக்கத்து சிறுவர் சிறுமிகள் எல்லோரும் சேர்ந்து கொலு வைக்கும் அம்மாக்களுக்கு பார்க் அமைக்க மண் கொண்டு வந்து தருவது, படிகள் அமைக்க டின் பெரிய டப்பாக்கள் மற்றும் பொம்மைகள் எல்லாவற்றையும் பரணிலிருந்து எடுத்து தருவது, கொலுப்படிகளுக்கு வேஷ்டி புடவை முதலியவை அலங்காரமாக சாற்றுவது, இன்னும் அம்மா சொல்லும் பலவித குட்டி குட்டி வேலைகளை செய்வது என்று செய்வோம்.
அம்மாக்களும் பெண் குழந்தைகளுக்கு புது பாவாடைகள் தைத்து அணிவித்து அழகு பார்ப்பார்கள். குழந்தைகளுக்கு கிருஷ்ண வேஷம் ராதை வேஷம் சிவன் வேஷம் எல்லாம் போட்டு எல்லார் வீட்டு கொலுவிற்க்கும் அழைத்துச் செல்வார்கள்.
என் அம்மாவும் எனக்கு அந்த மாதிரி கிருஷ்ணர் ராதை வேஷம் எல்லாம் போட்டு விட்டு இருக்கிறாள். நவராத்திரிக்கு புது பாவாடை தைத்து வைத்திருப்பாள். வீட்டில் தையல் மிஷினில் தானே தைப்பாள் அம்மா. பாதி தைத்து இருக்கும் போதே அதை எடுத்து மாட்டிக்கொண்டு பார்த்து பின்னர் அம்மாவிடமும் மாட்டிக்கொண்டு முழித்ததெல்லாம் உண்டு.

ஒரு நவராத்திரியின் ஆரம்ப நாள் அன்று என் அம்மா கொலுப்படிகளை அமைத்துக் கொண்டிருந்தாள். அந்த வருடம் எனக்கு ஸாட்டின் பாடி பாவாடை தயாராக இருந்தது. அம்மா கூடத்தில் பிஸியாக இருந்தாள். கிச்சனில் ஸ்டவ்வில் பால் காய்வதற்காக வைத்திருந்தாள். "அதைப் பார்த்து இறக்குடா" என்று அண்ணனுக்கு உத்தரவு போட்டிருந்தாள்.
அண்ணா கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டே பாலை பார்த்துக் கொண்டிருந்தான். பால் பொங்கத் தொடங்கியது. நான் அவன் அருகில் சென்று "பால் பொங்கறதுடா, பால் பொங்கறதுடா" என்று கத்தினேன்.
"எல்லாம் எனக்கு தெரியும்டி" என்று அண்ணா சொல்லிக் கொண்டே பால் பாத்திரத்தை இடுக்கியால் எடுத்துக் கொண்டு திரும்பினான். நான் அவனுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்ததால், இடுக்கி தான் நொடித்ததோ தெரியவில்லை, கொதிக்கும் பால் என் மேல் அப்படியே அபிஷேகம் ஆயிற்று.
நான் அலற, அவன் பயத்தில் அலற. அம்மா உள்ளே ஓடி வந்தாள். நான் ஏதோ நைலான் மாதிரி துணியில் மேல் சட்டை போட்டுக் கொண்டிருந்தேன். அம்மா அதை கழட்ட முயன்றாள் ஆனால் கழட்ட முடியவில்லை. உடம்போடு ஒட்டிக் கொண்டு விட்டது. எப்படியோ கத்திரிக்கோலால் கத்தரித்து சட்டையை கழற்றி எடுத்தாள். நான் அலறிய அலறலில் தெருவே எங்கள் வீட்டில் கூடிவிட்டது.
இரவு முழுவதும் பயத்தினாலும் எரிச்சல் வலியினாலும் கத்தி கத்தி அழுது கொண்டே இருந்தேன். அம்மா டேபிள் பேனை போட்டு என்னை ஃபேனுக்கு எதிரில் படுக்க வைத்து விசிறியாலும் விசிறிக்கொண்டே இருந்தாள். என் தந்தை ஏதோ டூர் போயிருந்தார். மறுநாள் தான் டாக்டரிடம் போனோம். புஸ் என்று உடலின் மேல் பகுதியிலும் இடது கையிலும் ரொம்ப பெரிய கொப்புளங்கள் வந்துவிட்டன.
அந்த நவராத்திரி 10 நாளும் ஷிம்மியில் தான் இருந்தேன் நான். ஸாட்டின் பாவாடையை அணிந்து கொள்ள முடியாமல் போனது தான் பெரிய குறையாக இருந்தது எனக்கு. காயங்கள் ஒரு மாதத்தில் ஆறிவிட்டன.
என்னை விட அம்மா அண்ணா இருவரும் தான் ரொம்ப பயந்துவிட்டனர்... நவராத்திரியின் மறக்க முடியாத நவரசங்களில் (பயம்) இதுவும் ஒன்று!
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
நவராத்திரி ஸ்பெஷல்.. அடுத்த நான்கு நாட்களுக்கு இப்படித்தான் கும்பிடணும்!
தெகிட்டினால் விருந்தும் கெடும்.. ஔவையின் ஆத்தி சூடி 60 பொன்மொழிகள் (3)
THE LOST STAR
நெஞ்சில் நடமிடும் நவ (ரசம்) ராத்திரி நினைவுகள்!
Cute story: தோழி!
நைனா எப்ப வருவார்?
பூஜை.. ஒரு நிமிடக் கதை (33)
Monday Special Dish: ஆவலைத் தூண்டும் அவல் உப்புமா!
விழித்துக் கொள்!
{{comments.comment}}