- சுதா திருநாராயணன்
பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது.
என் தாயார் திருமதி சரோஜா ராஜகோபால் வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளியால் ஆன சிறிய தவழும் கிருஷ்ண விக்ரகத்தை பூஜிப்பாள். குட்டிப் பையா, பட்டு கிருஷ்ணா, மோகன கண்ணா என்றெல்லாம் கொஞ்சி, பாட்டு பாடிக்கொண்டே விக்ரகத்தை நீராட்டுவாள்.
'கட்டை விரலில் பாதி கூட இல்லாத இந்த விக்ரகத்திற்கு இவ்வளவு உபசாரம் செய்கிறாயே'? என்று நான் சொன்னால், அம்மாவுக்கு கோபம் வந்துவிடும். 'நீராட்டல் பற்றி எவ்வளவு பாசுரம் இருக்கு தெரியுமா'?என்று வியாக்கியானம் செய்வாள்.
ஒரு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அம்மா எனக்கு பதற்றத்தோடு போன் செய்தாள். 'கிருஷ்ண விக்ரகத்தை காணவில்லை' என்றாள். நான் போய் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
"எப்படி காணாமல் போயிற்று"? என்று அம்மாவிடம் கேட்டேன். "நன்னா நீராட்டிய பிறகு பட்டுத் துணியால் துடைத்து விட்டுக் கொண்டிருந்தேன். விக்ரகம் கீழே விழுந்தது. தேடித் தேடி பார்க்கிறேன் கிடைக்கவே இல்லை" என்றாள்.
மிகவும் வியப்பாக இருந்தது. அருகில் ஜன்னலும் இல்லை. மேடைக்கு அடியில், பாத்திரங்களுக்கு நடுவில் என்று எங்கு
தேடியும் கண்ணன் கிடைக்கவில்லை.

அம்மா மனதை சமாதானம் செய்து கொண்டு வேறு ஒரு விக்ரகம் அதேபோல் வாங்கி ஆராதிக்க தொடங்கிவிட்டாள்.
ஒரு மாதம் கடந்தது. மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை, அம்மாவிடமிருந்து போன். "சுதா, இந்த கண்ணனும் காணாமல் போய்விட்டான். எனக்கு ரொம்ப பயமாக இருக்கு." அம்மாவின் பதறும் குரல் கேட்டு நான் கலங்கிப் போனேன். வேலைகளை விட்டுவிட்டு அம்மா வீட்டிற்கு பறந்து ஓடினேன். அம்மாவை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு ஸ்வாமி படங்கள் வைத்திருக்கும் அலமாரியை நன்கு நோட்டமிட்டேன்.
கீழ்த்தட்டில் செம்பில் நீர் இருந்தது. எட்டிப்பார்த்தேன். குறும்பு கண்ணன் தண்ணீருக்கு அடியில் இருந்து சிரித்தான்.
'சரி...இதற்கு முன் தொலைந்த கிருஷ்ண விக்கிரகம் எங்கு போயிருக்கும்?' என்று எனக்குத் தோன்ற, சந்தேகத்தின் பேரில் கடைசி தட்டில் வைக்கப்பட்டிருந்த நல்லெண்ணை தூக்கை திறந்து பார்த்தேன். தைலக்காப்பில் கண்ணனின் மோகன புன்னகை உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. நான் சிரித்துக்கொண்டே அம்மாவிடம், "அம்மா நீ எவ்வளவு நீராட்டினாலும் கண்ணனுக்கு போறலை போலிருக்கு. அதனாலதான் தைலக்காப்பில், எண்ணெய் குளியலில் ஆனந்தம் காண்கிறான்." என்றேன்.
எல்லோரும் ரசித்து சிரித்து மகிழ்ந்தோம். இரண்டு விக்கிரகங்களையும் அம்மா ஆரத்தழுவிக் கொண்டாள்.
இப்போது என் தாயார் தகப்பனார் இருவருமே இல்லை. 90 வயது வரை நல்ல நிறைவான வாழ்க்கை வாழ்ந்து ஆசார்யன் திருவடியை அடைந்து விட்டனர்.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
Folk song by PS Murugesan: பட்டிக் காட்டு மாமன் என்னை கட்டிக் கொள்ள வா புள்ளே!
பாஸ்போர்ட் என்றால் என்ன.. அதை எப்படி எடுக்கணும்.. மாணவர்களுக்கு சூப்பர் கிளாஸ்!
தேவதை போல் நீ நடந்து.. பட்டுப்புடவை அணிவதன் மகிமை என்னன்னு தெரியுமா?
இந்தக் காதலை மட்டும்...கட்டுப்படுத்த முடியலையே!
உசுரே நீதானே ஒறவாய் வருவேனே..
{{comments.comment}}