வடகிழக்கு பருவமழை 2026 இன்று முதல் துவக்கம்: சென்னைக்கு மழை வருமா?

Oct 15, 2026,10:08 AM IST

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த வழக்கத்திற்கு மாறான வெப்பமான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) தெரிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து, மக்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாறிய காற்றின் திசை:


தென்இந்திய பகுதிகளில் கிழக்கத்திய காற்றோட்டம் படிப்படியாக வலுவடைந்து வருவதை அடுத்து, பருவமழைக்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதியிலிருந்து முழுமையாக விலகியுள்ள நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளது.


பரவலான மழை எச்சரிக்கை:




அக்டோபர் 20 வரை மாநிலத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். குறிப்பாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னதாக, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் முறையே 8 செ.மீ மற்றும் 9 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை, தர்மபுரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.


வெப்பநிலை குறைய வாய்ப்பு:


கடந்த சில நாட்களாக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட உயர்ந்து காணப்பட்டது. உதாரணமாக, ஈரோட்டில் அதிகபட்சமாக 37.8°C வெப்பநிலை பதிவாகியிருந்தது. தற்போது மழை பொழிவு அதிகரிக்கத் தொடங்குவதால், அக்டோபர் 16 முதல் மாநிலம் முழுவதும் வெப்பநிலை இயல்பு நிலைக்கு (33°C - 34°C) திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னைக்கு மழை இருக்கா?


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மேகமூட்டமான வானிலையுடன் இடைவெளி விட்டு மிதமான மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை பொழிவை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. சென்னையின் பல பகுதிகளில் அக்டோடபர் 14ம் தேதியான நேற்று முதல் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காலையில் வெயில் காணப்பட்ட போதிலும் பிற்பகல் முதல் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சென்னையில் வெப்பம் தணிய துவங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்