சென்னை : பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை காவல்துறை மூலம் கைது செய்துள்ள தவெக அரசுக்கு, தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்:

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில், "கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, செவிலியர்களின் முதுகில் த.வெ.க அரசு குத்தியுள்ளது" என்று விமர்சித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இரவு முழுவதும் போராடிய செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "செவிலியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது வெட்கக் கேடானது. பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்த கோமாளி ஆட்சியாளர்கள், இன்று காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கிறார்கள்" என்று சாடியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் சாடல்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் கொடூரத்தின் உச்சம். ஆட்சிக்கு வரும் முன்பு அளித்த வாக்குறுதிகளை த.வெ.க அரசும், ‘ரீல்ஸ்’ முதல்வரும் மறந்துவிட்டனரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "பேச்சுவார்த்தைக்கு என அழைத்துச் சென்று செவிலியர்களைக் கைது செய்தது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளனர்" எனக் கண்டித்துள்ளார்.
கனிமொழி, அன்புமணி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை:
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, "தேர்தல் வாக்குறுதியில் 'ரீல்' விட்டுவிட்டு, தற்போது செவிலியர்களை ஏமாற்றியுள்ள த.வெ.க அரசு, அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்" எனக் வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "உரிமைகளுக்காக அறவழியில் போராடியவர்களைக் கைது செய்வது நீதியல்ல; அவர்களின் கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் அரசு நிறைவேற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "கொரோனா காலத்தில் உயிரைக் காத்து நின்ற செவிலியர்களின் உரிமைக் குரலைக் காப்பது அரசின் கடமையாகும். அவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து சுமுகத் தீர்வு காண வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் முன்னணி எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளதால், இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் வழி!
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
சிறு துளியின் பெரும் பயன்!
உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!
அறன் வலியுறுத்தல்
என் இறைவன்!
ஒரு கைப்பிடி நம்பிக்கை!
ஐந்து கரத்தனை.. யானை முகத்தனை.. விநாயகர் துதியின் பொருள் என்ன தெரியுமா?
Sudha Thirunarayanan Cute Story: கோலம்!
{{comments.comment}}