புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு

Dec 23, 2025,04:05 PM IST

- ந. லட்சுமி, மன்னார்குடி


புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்குப் போயிருக்கீங்களா.. .அந்தக் கோவில் பற்றி நீங்க கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும்.. அதன் வரலாறு அத்தனை அற்புதமானது.


அவள் அருளாலே, அவள் தாள் வணங்கி என அம்மனின் பாதார விந்தங்களை வணங்கி எழுதத் தொடங்குகிறேன்.

 

புன்னைநல்லூர் என்பது தஞ்சையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊராகும். முற்காலத்தில் புன்னை மரக் காடுகள் நிறைந்து இருந்ததால், இவ் ஊருக்கு அத்தகைய பெயர் வந்தது. இங்கு அருள்பாலிக்கும்  அம்மன் ஸ்ரீ புன்னை நல்லூர் முத்துமாரியம்மன் ஆவார்கள். புன்னைநல்லூர் மாரியம்மனின் தனிச்சிறப்பு ஆறடி உயர்த்திற்கு தானே உருவாகி அமைந்திருக்கும் வெண்புற்று மண் அம்மன் அமைப்பு ஆகும். எவ்வாறு வெண்புற்று மண் ஆக இருந்த அம்மன் கோவிலாக உரு கொண்டார்கள் என்ற வரலாற்றை பார்ப்போம். 


வரலாற்று பின்னணியை பார்ப்போம் 


சோழமன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுவித தேவியரை காவல் தெய்வமாக வைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் உருவாக்கப்பட்ட தேவியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று ‘சோழசம்பு’ நூல் கூறுகிறது. அதுவே பின்னர் புற்று வடிவாக பிற்காலத்தில் தோன்றியது என்கிறார்கள்.


1680-ம் ஆண்டு, தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மன்னர் சமயபுரம் வந்து அங்கு அருள்புரியும் மாரியம்மனை தரிசித்துவிட்டு அன்று இரவு சமயபுரம் கோவிலிலேயே தங்கினார். அயர்ந்து அவர் உறங்கி கொண்டிருந்தபோது அவர் கனவில் அன்னை தோன்றினார்.


தஞ்சைக்கு  அருகில் (7 கி.மீ தொலைவில் உள்ள) புன்னை மரக்காட்டில் புற்று உருவாய் தான் அருள்பாலிப்பதாகவும், அங்கு வந்து தன்னை தரிசிக்கும் படியும் கூறி அன்னை மறைந்தார்கள். மறுநாள் தஞ்சை திரும்பிய மன்னர் தான் கனவில் கண்ட இடத்தை தேடி புறப்பட்டார். 


அங்குள்ள புன்னை மரக்காட்டில் எழுந்தருளியிருந்த புற்று அம்மனைக் கண்டுபிடித்தார். பிறகு, ஒரு கூரைக் கொட்டகை அமைத்து அம்மனை மக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார். அந்த இடத்திற்கு புன்னை நல்லூர் என்று பெயரும் வைத்தார்.


மன்னரின் மகளுக்கு பார்வை தந்த அன்னை:




வெங்கோஜி மன்னருக்கு பின் அவரது மகன் துளஜ ராஜா பட்டத்திற்கு வந்தார். ஒரு சமயம் அவருடைய மகளுக்கு அம்மை நோய் கண்டது. என்ன வைத்தியம் பார்த்தும் நோயின் கடுமை குறையவில்லை. அந்த சிறுமியின் பார்வையும் அந்த நோயால் பறிபோனது.


மன்னர் மனம் வருந்தினார். வேதனைபட்டார், செய்வது அறியாது திகைத்து நின்றார். அன்று அவர் கனவில் ஒரு சிறுமி தோன்றினாள். உன் மகளுடன் என் சன்னதிக்கு வா என்று கூறினாள் அந்தச் சிறுமி. மன்னருக்கு புரிந்தது. கனவில் வந்த சிறுமி வேறு யாருமல்ல. புன்னை நல்லூர் மாரியம்மன் தான் என உணர்ந்தார். மறுநாள் தன் மகளுடன் அன்னையின் சன்னதியில் போய் நின்றார். அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டார். கண்களில் கண்ணீர் வழிய மனம் உருகி அன்னையிடம் பிரார்த்தனை செய்தார்.


அப்போது மின்னலாய் ஒரு ஒளி ஒன்று தோன்றி அவரது மகளை அடைந்தது. அவர் மகள் பார்வையை மீண்டும் பெற்றாள். அன்னையின் கருணையை கண்டு மனம் சிலிர்த்தார் மன்னர். அதே இடத்தில் சுற்றுச் சுவர்களுடன் அன்னைக்கு ஓர் ஆலயம் கட்டினார். மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3-வது திருச்சுற்று மதிலைக் கட்டினார் என்கிறார்கள். 


ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் என்பவர்  உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபம் ஆகியவற்றைக் கட்டினார் எனப்படுகிறது. ஆங்கிலேயே அதிகாரிகள் பலரும் இந்த அம்மனுக்கு காணிக்கையாக பல அணிகலன்களை அளித்துள்ளனர். தஞ்சாவூரை ஆண்ட அரசர்களுக்கும் ஆங்கிலேயே அதிகாரிகளுக்கும் பல சித்து விளையாட்டுகளை நிகழ்த்தி அவர்களின் குறை தீர்த்து அருள் செய்தவள் இந்த அம்மன்.


புற்று மண்ணால் உருவான அன்னை புன்னைநல்லூர் மாரியம்மன், தஞ்சை மாரியம்மன், முத்து மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். புன்னைநல்லூரில் மூலஸ்தானத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.


ஆலயத்தின் கட்டிட அமைப்பு:


புற்று உருவில் இருந்த அன்னைக்கு உருவம் கொடுக்க விரும்பினார் மன்னர். ஞானி ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் உதவியுடன் அம்மனுக்கு வடிவம் கொடுத்து, ஸ்ரீசக்கரத்துடன் சுவாமி அவர்களே பிரதிஷ்டையும் செய்தார். மூலஸ்தான அம்மன் புற்று மண்ணால் உருவானதால், மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு தான் அபிஷேகம் நடைபெறுகிறது. அழகிய ராஜ கோபுரம், விமானம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம் மற்றும் மூன்று திருச்சுற்றுகளுடன் ஆலயம் அமைந்துள்ளது.


மகா மண்டபம் முகப்பில் கொடி மரமும், பலிபீடமும் உள்ளன. கருவறை வாசலில் துவார பாலகிகளின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன.  கருவறையின் உள்ளே அன்னை மாரியம்மன் வைர மூக்குத்தி பளபளக்க நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னை தன் இரு கரங்களில்,  ஒன்றில் கத்தியையும் மற்றொன்றில் கபாலத்தையும் சுமந்து, மறு இரு கரங்களில் ஒன்றில் அபய வரத முத்திரையும் மற்றொன்றில் ஹஸ்த முத்திரையுடனும் அருள் பாலிக்கின்றார்கள்.


அம்மனுக்கு நித்திய அபிஷேக  ஆராதனைகள்:

 

ஸ்ரீ  சதாசிவ பிரம்மேந்திரர சுவாமிகளால், அம்மனுக்கு சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, சந்தனம், குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கோரோஜனை, அகில், பலவித மூலிகை மருந்துகள் கொண்டு புற்று மண்ணில் பிசைந்து புற்றின் மேல் அம்மன் உருவம் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது என்று  தலவரலாறு சொல்கிறது.


அன்னைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய தைல காப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அம்பாளை வெண் திரையில் வரைந்து அதில் அம்பாளை ஆவாகனம் செய்து அதற்குதான் அர்ச்சனை ஆராதனை நடைபெறும். இந்த நாற்பத்தி எட்டு நாட்களும் அன்னைக்கு தினமும் இரு வேளையும் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். 


இந்த வருடம்(2025) அம்மனுக்கு தைலக்காப்பு சிறப்பாக செய்து இருக்கிறார்கள். இனி ஐந்து ஆண்டு கழித்து தான் இந்த தைல அபிஷேகம் நடைபெறும். தைலாபிஷேகம் நேரத்தில் அம்பாளுக்கு உக்கிரம் அதிகமாகும். அதை தவிர்க்க அன்னைக்கு தயிர் பல்லயம், இளநீர் வைத்து நைவேத்தியம் செய்வார்கள். ஆண்டுதோறும் வரும் அக்கினி நட்சத்திர நாட்களில் அம்மனின் முகத்தில் வியர்வை துளிகள் முத்து முத்தாக காணப்படுமாம். அதனால் அன்னை முத்து மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறார். முக்கிய நாட்களில் அன்னைக்கு 23 கிலோ எடை உள்ள தங்க கவசம் சாத்தப்படுவதுண்டு.


ஆனி மாதத்தில் அம்மன் தவசு இருப்பதாக ஐதீகம். ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும்  பிரசித்திப்பெற்ற மாதமாக திகழ்கிறது.  ஆவணி மாதம் அம்மனுக்கு உரிய மாதம் ஆதலால் மாதம் முழுவதுமே மிகவும் பிரசித்தியாக திகழ்கிறது 


நேர்த்திக்கடன் செலுத்துதல்:


திருக்கோவிலின் உட்புறம் வலது பக்கத்தில் வெல்லக் குளம் உள்ளது. உடம்பில் கட்டி அல்லது மரு போன்றவை உள்ளவர்கள் அன்னையை வேண்டி கொண்டு உருண்டை வெல்லத்தைக் கொண்டு வந்து இக் குளத்தில் போடுவார்கள். வெல்லம் கரைவது போல் கட்டிக்களும், பருக்களும் கரைந்து விடும் என்பது பலன்பெற்ற பக்தர்கள் வாயால் சொல்லும் உண்மை. நானும் இதே போல் பலன் பெற்று இருக்கிறேன். நான் கண்ட உண்மையும்  ஆகும்.


வீட்டில் யாருக்காவது அம்மை நோய் கண்டால் இங்குள்ள உள் தொட்டி, வெளித் தொட்டிகளுக்கு நீர் இறைத்து ஊற்றுவதாக வேண்டிக் கொண்டால் அம்மையின் உக்கிரம் படிப்படியாக குறைந்து அவர்கள் பரிபூரண குணமாவது உண்மை.


ஆண்டு முழுவதும் ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள்


ஆடி மாதம் முத்து பல்லக்கு உற்சவமும் ஸஆவணி கடைசி ஞாயிறு தேரோட்டமும்,  புரட்டாசி மாதம் தெப்போற்சவமும், நவராத்திரி உற்சவமும் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை, வைகாசி மாதங்களில் கோடைக்காலத்தில், கூழ்காய்த்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செய்கிறார்கள்.


பால் குடம் எடுத்தல், தீச்சட்டி எந்துதல், காவடி சுமந்து  வருதல் போன்ற நிகழ்வுகள் மூலம், அன்னையை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.


பொதுவாகவே புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு உடல்நலம் முடியாதவர்கள் அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, உப்பு மிளகு வாங்கி கொட்டுகிறார்கள். மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறந்தால் தொட்டில் வாங்கி வைப்பதாக வேண்டிக்கொண்டு, குழந்தை பிறந்தவுடன் தொட்டில் வாங்கி வைக்கிறார்கள்.


கோவில் உள் வளாகத்திலேயே, நிறைய திருமணங்கள் காதுகுத்து போன்ற சுப நிகழ்வுகள்  நடைபெறுகின்றன. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த கோவில் ஆகும்.


புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு, விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து அம்மனை தரிசித்து அருள் பெறுகின்றனர். மேலும் அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, பல ஊர்களில் இருந்தும் மக்கள் வண்டி கட்டிக்கொண்டெல்லாம் வந்து இரவில் தங்கி இருந்து விடியற்காலையில் 4:30 மணிக்கு எல்லாம் அம்மனை தரிசித்து பிரார்த்தனை நிறைவேத்தி செல்கின்றனர்.


சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் இந்த ஆலயத்தின் திருச்சுற்றில் விநாயகர், முருகன்,  பேச்சியம்மன், ஐயனார், காத்தவராயன், மதுரைவீரன், ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். 


புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் நடை திறந்து இருக்கும் நேரம்:


திங்கள் முதல் சனி வரை காலை 5:30 முதல் இரவு 9:00 வரை. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 4:30 முதல் இரவு 10:30 வரை திறந்திருக்கும்.


சிறப்பு நாட்களில் (ஆடி, நவராத்திரி, ஆவணி மாதம் மற்றும் திருவிழா காலங்களில்) நடை திறந்திருக்கும் நேரம் மாறுபடும்.

(பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்). சிறப்பு நாட்களில் காலை 3:00 - இரவு 11:00 வரை திறந்திருக்கும்.


ஆடி, ஆவணி மற்றும் நவராத்திரி  போன்ற விழாக் காலங்களின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்கள் என்று எடுத்தக் கொண்டால், வெள்ளிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள்,ஆடி, ஆவணி மாதம் முழுவதும், புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது உள்ளூர் வெளியூர் பக்கத்து கிராமம், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு செய்கின்றனர். இதனால் அம்மன் ஆலயத்தில் கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும்.


கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இங்கு தேவைப்படும் வசதிகள்:


வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு சில தங்கும் அறைகள் உள்ளன. இருப்பினும் தஞ்சாவூர் நகரம் பக்கத்திலேயே இருப்பதனால் அங்கு நிறைய தங்கும் விடுதிகள்  இருக்கின்றன. அங்கேயும் தங்கிக் கொண்டு அவரவர் சூழலுக்கு ஏற்றார் போல்  கோவிலுக்கு வரலாம்.


உணவு வசதி: நிறைய உணவகங்கள் கோவில் அருகிலேயே உள்ளன. பக்தர்களுக்கு கோவிலைச் சுற்றி கழிப்பிட வசதிகள் (தனியார் / நிர்வாகம்) அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள் .


கோவில் தஞ்சாவூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து ஆலயம் செல்வதற்கு நிறைய பஸ் வசதிகள் உண்டு. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு நிறைய பஸ்கள் உள்ளன. புன்னைநல்லூர்மாரியம்மன் கோவில் செல்வதற்கு,  பழைய பேருந்து நிலையத்தில்தான் பஸ் ஏறி கோவிலுக்கு வர வேண்டும்.


இத்தகைய பிரசித்தி பெற்ற ஆலயத்திற்கு வாய்ப்பு இருக்கும்போது எல்லோருமே வந்து தரிசனம் செய்து அம்மனின் அருளைப் பெற்று, எல்லா வளமும் எல்லா நலமும் பெற்றவர்களாக சிறப்பாக வாழ வேண்டும் என்று அன்னையிடம் வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்.


(ந.லட்சுமி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம்  இணைந்து, நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!

news

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!

news

புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!

news

சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை

news

மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!

news

பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!

news

பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா

அதிகம் பார்க்கும் செய்திகள்