- சு.தா.அறிவழகன்
இந்தியத் திரைப்பட உலகிற்குத் தன் புதுமையான பார்வைகளாலும், வியக்க வைக்கும் கற்பனைத் திறனாலும் புதிய கதவுகளைத் திறந்துவைத்த மாபெரும் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் சிங்கீதம் சீனிவாசராவ் அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். அவருக்கு வயது 94.
திரைக்கலைத் தாத்தா என்று செல்லமாக இவரை தாராளமாக கூறலாம். காரணம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் தடம் பதித்த இவர், வெறும் இயக்குநர் மட்டுமல்ல; திரைப்படக் கலை எனும் வித்தையைக் கரைத்துக் குடித்த ஒரு பேராசான்.
1931-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த சிங்கீதம் சீனிவாசராவ், இயற்பியல் பட்டதாரியாகத் தன் வாழ்வைத் தொடங்கியபோதிலும், கலை மீதிருந்த பேரார்வம் அவரைத் திரையுலகை நோக்கி ஈர்த்தது. புகழ்பெற்ற இயக்குநர் கே.வி. ரெட்டியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, திரைப்பட இயக்கத்தின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். தெலுங்கில் 'நீதி நிஜாயிதி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், கதைகளைத் தேர்வு செய்வதிலும், அதைத் திரையில் காட்சிப்படுத்துவதிலும் தொடக்கத்திலிருந்தே தனித்துவத்தைக் காட்டினார்.
சினிமா தொழில்நுட்பத்தில் அசாத்திய நம்பிக்கையும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் துணிச்சலும் சிங்கீதம் சீனிவாசராவின் முதன்மை அடையாளம்.
திரைப்படங்களில் வசனம் மட்டுமே முதன்மையானது என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு வார்த்தைகூடப் பேசாத 'புஷ்பக விமானம்' என்ற சைலன்ட் திரைப்படத்தைக் கொடுத்து திரை உலகையே வியப்பில் ஆழ்த்தினார். கமல்ஹாசன் என்ற பண்பட்ட கலைஞரும், சிங்கீதமும் இணைந்து கொடுத்திருந்த இந்தப் படைப்பு இன்று வரை மாஸ்டர்பீஸாக உள்ளது. நகைச்சுவையும் உணர்ச்சியும் ததும்பிய இத்திரைப்படம், சிங்கீதம் மற்றும் கமல் ஆகியோரின் சிறந்த படங்களில் முக்கியமான ஒன்று.

தென்னிந்திய சினிமாவின் Time Travel கதையான 'ஆதித்ய 369' மூலம் அறிவியல் புனைகதைத் திரைப்படங்களுக்கு வலுவான அடிக்கல் நாட்டினார்.
90-களிலேயே நேரடி ஆக்ஷன் திரைப்படங்களுடன் கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் கூறுகளை இணைத்து, குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரே நேரத்தில் கவரும் கலைநுட்பத்தைக் கையாண்டார்.
சிங்கீதம் சீனிவாசராவ் என்றதும் உலகநாயகன் கமல்ஹாசனுடனான அவரது கலைக் கூட்டணி சட்டென்று நினைவுக்கு வரும். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவின் மைல்கற்கள் என்று தாராளமாக சொல்லலாம். இவரை கமல்ஹாசனின் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இவர் தமிழில் இயக்கிய படங்கள் மொத்தமே 9 படங்கள்தான். அதில் கமல்ஹாசனுடன் இணைந்த படங்கள் 6 ஆகும்.
கமல்ஹாசனின் முதல் தயாரிப்பான ராஜ பார்வை படத்தை இயக்கியவர் சிங்கீதம்தான். அது சிங்கீதத்திற்கு தமிழில் 2வது படமாகும். பரீட்சார்த்த படமான அந்தப் படத்தை விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற வைத்தது சிங்கீதம் - கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணி.
அபூர்வ சகோதரர்கள் படத்தில், குள்ள மனிதனாகக் கமல்ஹாசனை நடிக்கவைத்து, அன்றைய காலகட்டத்தில் கணினி தொழில்நுட்பம் (VFX) ஏதுமின்றி, கேமரா கோணங்கள் மற்றும் லென்ஸ் மாயாஜாலங்கள் மூலமே சாதித்துக் காட்டிய விதம் உலகத் திரைப்பட வரலாற்றிலேயே போற்றத்தக்கது.
அதேபோல மைக்கேல் மதன காமராஜன். நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களின் குழப்பமான நகைச்சுவைக் காட்சிகளை, மிகத் துல்லியமான திரைக்கதையாலும் வேகமான படத்தொகுப்பாலும் செதுக்கி, இன்றளவும் நகைச்சுவைச் திரைப்படங்களுக்கு ஒரு பாடப்புத்தகமாகத் திகழச் செய்தார்.
அது மட்டுமல்லாமல், இந்த இரு மாபெரும் மேதைகளும் இணைந்த மகளிர் மட்டும், காதலா காதலா ஆகிய படங்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. சமூகக் கருத்துகளையும், எல்லை மீறிய நகைச்சுவையையும் மிக இயல்பாகத் திரையில் கொண்டுவந்து வெற்றி கண்டார் சிங்கீதம்.
சினிமாவை வியாபாரமாக மட்டும் பார்க்காமல், அதைக் கதைகூறும் ஒரு உயரிய கலையாகப் பார்த்தவர் சிங்கீதம். கன்னட திரையுலகில் டாக்டர் ராஜ்குமாருடன் இணைந்து அவர் தந்த 'ராஜாகோபி', 'மயூரா' போன்ற திரைப்படங்கள் கன்னடச் சினிமாவின் பொற்காலப் படைப்புகள். இவர் சிறந்த இசையமைப்பாளராகவும் பணியாற்றி, தன் பல்துறை ஆற்றலை நிரூபித்தவர்.
மொழி எல்லைகளைக் கடந்து சிந்தித்த மிகச்சில இந்திய இயக்குநர்களில் சிங்கீதம் சீனிவாசராவ் முதன்மையானவர். நுட்பமான நகைச்சுவை, வேகமான திரைக்கதை, தொழில்நுட்பப் பரிசோதனைகள், மனித உணர்வுகளின் ஆழம் ஆகியவை இவரது படைப்புகளின் பொதுவான பண்புகளாக இருந்தன. தலைமுறை கடந்து இன்றுவரை இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு ஒரு மாபெரும் உத்வேகமாக இவரது படைப்புகள் விளங்குகின்றன.
தனது 94 வயதிலும் கூட இளைஞர் போல மனதளவில் சுறுசுறுப்பாக காணப்பட்ட சிங்கீதம் கடைசியாக இயக்கிய படம் சிங் கீதம். 2026ல் இப்படம் வெளியாகி அவரது இயக்கத் திறமையை ஜென் சீ தலைமுறைக்கும் உணர்த்திச் சென்றுள்ளது.
திரைப்படங்களில் புதிய கதவுகளையும் சாத்தியக்கூறுகளையும் திறந்துவைத்த ஒரு முன்னோடியை இந்தியத் திரையுலகம் இன்று இழந்துநிற்கிறது. காலத்தால் அழியாத தன் கலைப் படைப்புகளின் மூலமும், அவர் விட்டுச் சென்ற புதுமை விரும்புதலின் மூலமும் சிங்கீதம் சீனிவாசராவ் என்றும் திரைப்பட ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார். அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
{{comments.comment}}