மனைவியோடு இணைந்து சிவனுக்குத் தொண்டு செய்த.. திருநீலநக்க நாயனார் வரலாறு !

Oct 17, 2026,05:21 PM IST

- கலைவாணி கோபால்


"ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீல நக்கற்கு அடியேன்"-- சுந்தரமூர்த்தி நாயனார் 


அன்றைய சோழ நாடான இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 'திருசாத்தமங்கை' என்ற ஊரில் பிராமணர் குலத்தில் பிறந்து சிவனுக்காக தன் மனைவியோடு  சேவை செய்த சிவனடியார்  நீலநக்கர் ஆவார். 


'நக்கம்' என்பதன் பொருள் ( முழுவதும் உணர்ந்தோர் ) இந்த சிவனடியார் சிவனுக்காக தன்னை முழுமையாக கொடுத்ததால் திரு நீல நக்கர் என பெயர் பெற்றார் என்று வரலாறுகள் கூறுகின்றன. 


இவர் மிகப்பெரும் சிவனடியார் ஆவார். இவரைப்போலவே இவருக்கு ஈடாக இவரின் மனைவியும், சிவ பூஜையில் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர். இவரின் பெயர் அறியப்படவில்லை. இருந்தாலுமே, இந்த அம்மையாரின் சிவத் தொண்டு மிகச்சிறப்பாக "கொண்டான் குறிப்பறிவால் பெண்டாட்டி" என்னும் அளவில் உணர்த்தப்படுகிறது. இவர் வீட்டு வேலைகள் மட்டுமல்லாத அதைத் தாண்டி அடியாரின் சிவத்தொண்டுக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர்.




(இங்கு சொல்லப் போனால், அனைத்து நாயன்மார்களின் வரலாற்றிலும் அவர்கள் மனைவிமார்கள் உறுதுணை இல்லாமல் அவர்கள் சிவதொண்டினை முழுமையாக செய்திருக்க முடியாது. இவர்களின் சரிபாதி தியாகங்கள் அவர்களின் மனைவிமார்களுக்கும் நிச்சயம் உண்டு. அக்காலத்தில் பெண்கள் சிவ பூஜையில் எந்த பேதமும் இல்லாமல் தங்களை ஆட்படுத்தி கொண்டார்கள், என்பதற்கு நாயன்மார்கள் வரலாறு ஒரு சான்றாக திகழ்கிறது.)


எல்லா நாயன்மார்களின் வரலாற்றிலும் அவர்களின் மனைவிமார்களின் பெருமையும், அவர்களின் சிவ சேவையையும், மறைமுகமாக பெரிய புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.


திருநீலநக்கர் ஒரு அந்தணர் என்பதால், வேதம் ஓதுவதும், பூஜைகள், யாகங்கள் நடத்துவதும், அவரின் தொழிலாக இருந்தது. புரோகிதராய் இருந்த நீல நக்கரும் தன் யாகங்களிலும் பூஜைகளிலும் சிவனுக்கே முழு இடம் கொடுத்து தான் ஒரு அடியார் என்ற கொள்கையில் நின்றவர் .


வழிபாடுகளில் திருநீல நக்கரின் சாயல் தனியாக இருந்தது. பூஜை என்றால் கண்களை மூடி அமரும் அவர் மந்திரங்களை சொல்லி முடித்த பின்னும் ,எழ மாட்டார் . ஆழ்ந்த தியானத்தில் அப்படியே அமர்ந்து விடுவார். இவர் மனைவியும், இவர் பூஜைகளுக்கு தேவையான பூக்கள் பறிப்பது ,வாசனை திரவியங்களை எடுத்து கொண்டு வருவது , விளக்குகளை சுத்தம் செய்வது...... என அனைத்து ஏற்பாடுகளையும் தயாராக வைத்து இவருடனே பயணித்து வந்தவர்.


அப்படி ஒரு முறை திருநீலர் நக்கர் வழிபாடு முடிந்து தியானத்தில் இருந்தபோது, அம்மையாரும் உடன் இருந்தார். அப்போது, பெருமானின் லிங்க திருமேனியில் ஒரு விஷச் சிலந்தி வருவதை அம்மையார் கண்டார். அதை வாயால் ஊதினார் ஏனென்றால், அது ஒரு விஷச் சிலந்தி அதன் எச்சில் பட்டால் கூட அந்த இடத்தில் கொப்புளங்கள் ஆகிவிடும். அந்த அளவு ஆபத்தானது. அம்மையார் அதை லிங்கத் திருமேனி என்று நினைக்கவில்லை ஒரு குழந்தையாகவே பாவித்து வந்தார். அதனால், அதன் எச்சில் பட்டால் கொப்புளங்கள் வந்து விடுமோ! என்ற பயத்தில் அச்சிலந்தியினை வாயால் ஊதினார்.


அச்சமயம் தியானத்திலிருந்து கண்விழித்த நீலநக்கர் அதைக் கண்டு மிகவும் கோபம் உற்றார். ஏனென்றால், அம்மையாரின் வாயிலிருந்து வந்த எச்சில் எங்கு திருமேனியில் பட்டிருக்குமோ! அப்படிப்பட்டிருந்தால் அது தீட்டு அல்லவா! என மனைவியை மிகவும் கோபமாக என்ன ஒரு மிகப்பெரிய அபச்சார காரியம் செய்து விட்டாய். இனி நீ என்னுடன் வாழ தகுதியற்றவள் என்று கண்கள் சிவக்க கோபம் முற்று மனைவியை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டார் .


அம்மையார் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் புரிந்து கொள்ளவில்லை. அம்மையாருடன் வாழ முடியாது என சொல்லி அவர் மட்டுமே வீட்டிற்கு சென்றுவிட்டார்.. அம்மையார் கோயிலிலே தங்கி சிவனிடம் முறையிட்டார். ஏற்கனவே, அன்று திருவாதிரை நட்சத்திர நாளாய் இருந்ததால் விரதத்தில் இருந்த அம்மையார் சோர்ந்து போயிருந்தார். இதில் அவர் கணவர் பேசிய கடுமையான பேச்சை கேட்டு மிகவும் மனது துன்பற்று அழுது , அழுது மயங்கி கோயிலிலே விழுந்து விட்டார்.


வீட்டிற்குச் சென்ற திருநீலநக்கருக்கும் தூக்கம் வரவில்லை. சிவனுக்கு அம்மையார்  செய்ததை மன்னிக்க முடியாத குற்றமாக நினைத்து கலங்கிக் கொண்டிருந்தார். அவர் கலங்கிக் கொண்டு லேசாக தூக்கத்தில் அழ்ந்தபோது, 'அயந்தீஸ்வரர்' கோவிலில் உள்ள லிங்கமும் அவர் கனவில் தோன்றியது. தோன்றி "எம்மை நன்றாக பார்" என்று திருநீலநக்கரிடம் கூறியது. அதிர்ந்து பார்த்தார் லிங்கத் திருமேனியில் சில இடங்களில் சிலந்தி எச்சில் பட்டால்  எப்படி? கொப்புளங்கள் வருமோ! அது போல  கொப்புளங்களுடன் காட்சி அளித்தார் எம்பெருமான்.


அதைப் பார்க்கும்போது அடியாருக்கு உண்மை புரிந்து அழுதார் .பின், அம்மையாரை எங்கு விட்டாரோ அங்கு தேடி சென்றார். கோயிலில் விழுந்து கிடந்த அம்மையாரை தூக்கி பிடித்து நடந்ததை தெரிவித்து அம்மையாரிடம் மன்னிப்பு கோறினார். அப்போதும், மயக்கத்தில் அம்மையார்..... சிவன் நாமத்தை உச்சரித்தபடியே இருந்தார். அரைகுறை வெளிச்சத்தில் நிமிர்ந்து அங்குள்ள சிவலிங்கத்தை நோக்கினார் அடியார் கண்ட காட்சி அவரை திகைப்பில் ஆழ்த்தியது. நேரிலும், சிவலிங்கத்தில் கொப்புளங்களுடன் காட்சி தந்தார்  இருவரும் மனதார இறைவனை வணங்கி விட்டு பூஜைக்கு தேவை புனஸ்காரங்களை விட மிகச் சிறந்தது மனமார்ந்த பக்தியே! என்பதை உணர்ந்து கொண்டார் நீலநக்க நாயனார்.


கண்ணீர் விட்டு அழுது இருவரும் விழுந்து வணங்கினார்கள்.. சிவபெருமானே! தன் மனைவியை  தன்னோடு சேர்த்து வைக்க சித்தம் கொண்டு இவ்வாறு காட்சி தருகிறார். என்ன !.....ஒரு அன்பு என்பதை நினைத்து மெய்சிலித்தார் நீலநக்க நாயனார்.  பின்பு ,எப்போதும் போல் இருவரும் ஒன்றாக சேர்ந்து சிவத்தொண்டினை செய்து வந்தனர். அப்போது, சம்பந்த பெருமான் புகழை கேட்டு அவரைக் காண துடித்தார் நாயனார்.  அப்போது, நாயனாரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பெருமான் .. திருஞானசம்பந்தர் திருநள்ளாறு தர்பாரன்யீஸ்வரர் கோயிலில் வழிபட்டு பின் திருச்சாத்தமங்கை ஊருக்கு வருவதாக ஒரு நிகழ்வை ஏற்படுத்தி நீல நக்க நாயனாரையும், சம்பந்தப் பெருமானையும் சந்திக்க செய்தார். 


திருச்சாத்தமங்கை ஊருக்கு வந்த சம்பந்தரையும், சம்பந்தர் கூட வந்த அடியார்களையும் சிறப்பாக வரவேற்று, அடியார் கால்களில் விழுந்து வணங்கி அமுது படைத்து பின் அங்குள்ள அயன்தீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு திருஞானசம்பந்தரும்  ,மூன்றாம் திருமுறையில் இடம்பெற்ற "திருமலர் கொன்றை மாலை" என்ற பதிகத்தை பாடினார் .


சம்பந்தர் அங்கு தனியாக செல்லவில்லை அவருக்கு பல்லக்கு சுமக்க ஒரு கூட்டமும், கூடவே திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரின் மனைவி மதங்கசூலாமணி அம்மையாருமே வந்திருந்தனர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் இவரும், 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். ஞானசம்பந்த பிள்ளைக்கு  யாழ் இசைக்கும் சிறப்பை பெற்றவர். அதுமட்டுமல்லாமல், இவரின் மனைவி  மதங்க சூளாமணி அம்மையாரும், ஞானசம்பந்தர் பெருமானுக்கு பண் அமைத்து கொடுப்பார். 


அயந்தீஸ்வரர் கோவிலில் பாடி வழிபட்டு  முடித்த பின், திருஞானசம்பந்தரின் அருட்பெரும் கூட்டம் திருநீல நக்க நாயரின் வீட்டுக்கு ஏகிற்று. அவர்களுக்கு, அமுது படைக்கவும், அவர்கள் தங்குவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் திரு நீலநக்க நாயனாரும் அவரின் மனைவியாரும் மிகவும் ஆத்மார்த்தமாக செய்து கொடுத்தனர்.


அந்தணர்கள் பெரும்பாலும் வெளி ஆட்களை வெளி சமூகத்தினரை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். அதுவும் புனிதமான யாக குண்டம் பக்கம் அனுமதிப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று .....ஆனால், நீல நக்க நாயனாரோ சிவனடியார்கள் திருஞானசம்பந்தரின் கூட வரும் அடியார்கள் என சிவன் மீது இருந்த பக்தியில் எவ்வித பாகுபாடும் பார்க்கவில்லை. இதை கவனித்த ஞான சம்பந்தப் பெருமான் திரு நீலநக்க நாயனார் இடமே கேட்டுவிட்டார். 


அதற்கு, நாயனாரோ.... முப்புரி நூல் அணிந்த அந்தணர்கள் மட்டுமே செல்ல முடியும் இடங்களில் இன்று எல்லோரும் இருப்பதற்கு சிவன் மேல் கொண்ட அன்பும், அவர் மேல் செலுத்திய அளவறிய பக்தியும்  முன்னால் இருக்கும்  போது...,நாங்கள் செய்கின்ற   எங்கள் ஆஷ்டான, அனுஷ்டானங்கள் பெரியதில்லை .என சம்பந்த பெருமானிடம் பணிவுடன் கூறி வணங்கினார்.


சிவன்.... முன்பு அதுவும் அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே நடந்த நிகழ்வுகளுக்கு பின்  தன்னை முழுமையான சிவனடியாராகவே, அன்பு மட்டுமே சிவனிடம் செல்லுபடியாகும் என்ற எண்ணம் கருதி பூஜைகள் செய்து வந்தவர் திரு நீலநக்க நாயனார்.


அதை புன்முறுவலுடன் ஞானசம்பந்த பெருமானும் உணர்ந்து கொண்டார். ஞானசம்பந்த பெருமானும் ,அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும்  நாள் வந்தது. இதை அறிந்த கணவன், மனைவி, இருவரும் துடித்தனர். தாங்கள் இருவருமே சம்பந்தர் பெருமானுடன் கூட வருவதாக அறிவுறித்தனர். ஆனால் சம்பந்தப் பெருமான் அவர்களிடம்,


உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை பெருமான் தருவார். அதுவரை, இங்கு உள்ள அயந்தீஸ்வரர்... பெருமானுக்கு உங்களுடைய பூஜைகளை தொடர்ந்து செய்ய வேண்டிய காலம் உங்களுக்கு உள்ளது. என்று கூறிவிட்டு, அவர்களிடம்  கண்ணீர் மல்க விடைபெற்றார் சம்பந்தர். அவர்களும், கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர். தாயினை பிரிந்த சேயைப் போல இருவரும் துடித்தனர்.


கணவன், மனைவி இருவருமே அவர்கள் வழக்கம் போல, அங்குள்ள பெருமானுக்கு பூஜைகள் புனஸ்காரங்கள் என தொடர்ந்து செய்து வந்த நிலையில் ஒருநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. திருஞானசம்பந்தர் பெருமானிடம் இருந்து ,நீல நக்கருக்கு ஒரு தகவல் வந்தது. அதை கண்டு பெரும் ஆனந்தத்தில் துள்ளி குதித்தார் நாயனார்.


அதில் , வந்த தகவல் என்ன  என்றால் ?திருஞான சம்பந்த பெருமானுக்கு திருமணம் செய்து வைக்கும் புரோகிதராக  திரு நீலநக்க நாயனார் வரவேண்டும் என எழுதி இருந்தது. இதைவிட பெரிய பேறு என்ன உண்டு? பாக்கியம் என்ன உண்டு? என்று கணவனும் மனைவியுமாக இருவரும் ஆனந்தத்தில் கண்ணீர் வடித்தனர்.


திருஞானசம்பந்தரின் திருமணம் (ஆச்சாள்புரம்) அதாவது ,திருநல்லுரில் மிகவும் எளிமையாக நடைபெற இருந்தது. அதில் திருநீல நக்க   நாயனார் புரோகிதராக வந்தார் அவர்களை ஒரு பெண் வரவேற்றாள் அன்று, அவர்களுக்கு தெரியாது ஞானசம்பந்தருக்கு பால் கொடுத்த உமையவள் தான்  என்று ....


அன்று வைகாசி மாசம் மூல நட்சத்திரம் நாளாய் இருந்தது. திருமணத்திற்கு இதர நாயன்மார்களான முருக நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவரின் மனைவி மதங்க சூளாமணி அம்மையார் இன்னும் பல நூற்றுக்கணக்கானோர்  அங்கு கூடி இருந்தனர். 16 வயது ஆன திருஞானசம்பந்தருக்கு.. திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்ட வைத்தார். திரு நீலநக்க நாயனார் பின் ,மணமக்களை நெருப்பினை சுற்றி வரும் போது அந்த அதிசயம் நடந்தது. 


என்னவென்றால் யாக நெருப்பு பெரும் வெளிச்சமாகி ஒரு வாசல் மட்டுமே திறந்தது .அந்த திருநீறு  கொடுத்த பெண் உமையவள் வடிவெடுத்து... சிரித்தபடி திருஞானசம்பந்தரை, உள்ளே செல்ல பணித்தாள். ஆனால் சம்மந்தர் நாயன்மார்களை அதாவது திருநீலநக்க நாயனாரரையும், அவர் மனைவியும், முதலில் உள் செல்ல சொன்னார். பின், திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவர் மனைவி அதன் பின் முருகனாயினார் குடும்பம் என கடைசியாக தன் மனைவியுடன் உள்ளே சென்றார் சம்பந்த பெருமான். அத்தோடு ஜோதி மறைந்தது .ஆம்! அனைவரும் கைலாயத்தில் அடைக்கலம் ஆயினர்.


இதுதான் திரு சாத்த மங்கை திருநீலநக்க நாயனாரின் அருள் வாழ்வு எனும் பெரு வாழ்வு. அடியாரின் வாழ்வு சொல்வதென்ன?... "கான் மலர் கமல வாவிக் கழனி சூழ் சாத்தமங்கை நான் மறை நீல நக்கர் திருத்தொழில் நவீல் உற்றேன்". என்று சொல்லியபடி நாமும் வணங்கலாம் நாயனார் மனைவியோடு கைலாயம் புகுந்த வாழ்வை...


நாயனார் தம்பதிகளின் குருபூஜை வைகாசி மாதம் .மூல நட்சத்திரத்தன்று நடைபெறும். அது அவர்களுக்கு மட்டுமல்ல.... திரு நீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், சம்மந்தர், என எல்லோருக்கும் அதே நாள்தான் குருபூஜை சம்பந்தர் வாழ்வில் பிரிக்க முடியாத அளவு இந்த நாயனார் தம்பதிகளுக்கும் இடம் உண்டு.


நாகப்பட்டினம் _ கும்பகோணம் சாலையில் உள்ள சாத்தமங்கையில் இன்றும்.... நாயனார் தம்பதிகளுக்கு திருவுருவ சன்னதி உண்டு. சுயம்பு மூர்த்தியான இந்த அயவந்தீஸ்வரர் பானம் முழுதும் கொப்புளங்கள் போல ..இன்றும் காட்சியளிக்கும். வலப்புறம் மட்டும் கொஞ்சம் இடத்தில், கொப்புளங்கள் இருக்காது. திருநீலநக்கர் கனவில் அவர் மனைவிக்காக சிவன் காட்சி  அளித்த அதே அமைப்புடன் மிகச் சிறப்பாக காட்சியளிக்கிறார். இன்றளவும் அவருக்கு சுயம்பு என்பதால் வழிபாடுகள் மிகவும் சிறப்பாகவும், தனித்தன்மையுடனும் நடைபெற்று வருகின்றன.


சிவாய நம

திருச்சிற்றம்பலம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

தேனிசை வானில் கலந்தது!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

அதிகம் பார்க்கும் செய்திகள்