மோட்சத்திற்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

Dec 29, 2025,05:21 PM IST

- பாவை.பு

      

எம் பெருமான் நாராயணனை வழிபாடு செய்வதற்கு பல விரத நாட்கள் இருந்தாலும் அதில் மிகவும் சிறப்புக்குரியது, ஏகாதசி திருநாள். இந்த ஏகாதசி மாதeமாதம் வந்தாலும், மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறிய, சிறப்பான மாதமான மார்கழியில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும்.

 

இந்நாளில் தான் பகவான் ஸ்ரீ வைகுண்ட நாதனே பரமபத வாசலை (சொர்க்க வாசல்) திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 


மஹாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டதால் பரமபத பாக்கியம் பெற்றவர்கள் மது கைடபர் என்ற இரு அசுரர்கள். தங்களுக்கு கிடைத்த வைகுண்ட பேறு உலக மாந்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். 




எனவே வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் (உற்சவ மூர்த்தியாக) தாங்கள் வெளி வரும் போது, தங்களை தரிசித்து பின்தொடர்ந்து வரும் பக்தர்களுக்கு பாவங்களை போக்கி முக்தி அளிக்க வேண்டும் என்று பெருமாளிடம் பிரார்த்தித்தனர். அப்படியே அருள் செய்தார் பெருமாள். இதன் பொருட்டே சொர்க்க வாசல் திறந்து மோட்சத்திற்கு வழி காட்டுகிறார் திருமால் என்கின்றன ஞான நூல்கள்.  


இந்த புனிதமான நாளில் நாம் தெரியாமல் செய்த  பாவங்களை இறைவனிடத்தில் கண்ணீர் மல்கி உள்ளம் உருகி தவறுகளை மன்னித்தருளும்படி வேண்டிக்கொள்ளும் போது நாராயணன் நிச்சயமாக நமது பாவங்களை போக்கி நற்கதியை பெற்று தருவார் என்பதும், மாதந்தோறும் வரும் ஏகாதசியன்று விரதம் இருக்க முடியாதவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரும் வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்களுக்கு நிச்சயமாக நாராயணனின் அருள் கிடைக்கும் என்பதும் ஆழ்வார்களின் வாக்கு. 

   

ஒருசமயம் பார்வதி தேவி சிவபெருமானிடத்தில் விரதத்திலே சிறந்த விரதம் எது என்று கேட்க, அதற்கு எம் பெருமான் ஏகாதசி விரதமே சிறந்தது என்றும் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள் என்றும் கூறினாராம். இதிலிருந்து இந்த விரதத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம். 


இந்த வருடம் ஏகாதசி விரதம் டிசம்பர் 30(மார்கழி 15) அன்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முந்தைய திதியான தசமி நாளில் ஆரம்பித்து அன்று இரவு உணவு உண்ணாமல் மறுநாள் ஏகாதசியன்று முழுவதும் (சுத்தப்பட்ணி ) விரதமாக  இருந்து. அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு பாரத்து, அன்று பகல் இரவு முழுவதும் தூங்காமல் நாராயணனின் பாசுரங்களை பாராயணம் செய்ய வேண்டும். மறுநாள் காலை துவாதசி அன்று விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு. 



இந்த வருடத்தின் தசமி திதியானது 29.12.25 அதிகாலை 4.42 மணி முதல் 30.12.25 அதிகாலை 3.50 மணி வரை உள்ளது. ஏகாதசி திதி 30.12.25 (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.51 மணி முதல் 31.12.25 அதிகாலை 1.34 மணி வரை உள்ளது. துவாதசி திதி 31.12.25 அதிகாலை 1.35 மணி முதல் இரவு 11.16 மணி வரை உள்ளது.


தூங்க கூடாத நாள் செவ்வாய் கிழமை இரவு முழுவதும்.  

 

எல்லா வைணவ திவ்யதேச தலங்களிலும்  வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் சிறப்பாக நடைபெற்றாலும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும்  ஸ்ரீரங்கத்தில் (திருவரங்கம்) மிகவும் சிறப்பாக பரமபதம் திறக்கப்படுகிறது. 

 

இங்கு சொர்க்கவாசல் திறக்கும் நேரம் 30.12.25 அதிகாலை 4.30 -5.45 க்குள் சாமி புறப்பட்டு சொர்க்க வாசல் வழியாக பக்தர்களையும் அழைத்து அருள் பாலிக்கிறார். பக்தன் என்ன சொல்கிறான் என்று பகவான் கேட்டு, பகவானே பக்தர்களுக்காக இறங்கி வந்து அருள் புரிகிற நாளாக இந்நாள் அமைகிறது.


(பாவை.பு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

news

மணாளனின் மாண்புகள்!

news

Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..

அதிகம் பார்க்கும் செய்திகள்