கோப்பையும் மயிலும்

Sep 21, 2026,03:34 PM IST
- ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன்

ரவி ராமுவிடம் ஏன்டா, உன் அலுவலகப் பணிகள் எவ்வாறு உள்ளன? என்று கேட்டான்.

அதற்கு ராமு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு. ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்றான்.

உடனே  ரவி முகத்தை சுளித்தவாறு என்னடா, அசிங்கமா என்னன்னமோ சொல்கிறாய்? விளக்கமா சொல்லு என்றான்.

ராமுவும், எங்கள் அலுவலகத்தில் ஒரு பிராஜக்டை  மூன்று மாதங்களில் முடிக்க வேண்டிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளார்கள். அது சம்பந்தமான கோப்புகளை அதாவது ஃபைல்களை படிப்பதிலேயே  நான் மூழ்கிவிட்டேன். வீட்டிற்கு வந்தாலும் அவைகளை எடுத்து வந்து படிக்கிறேன். வீடு குடும்பம் என அனைத்தையும் மறந்து விட்டு நாள் முழுவதும் கோப்பிலேயே மூழ்கிவிட்டேன். அதனால்  அந்த கோப்புகளிலேயே  எனது குடியிருப்பு என ஆகிவிட்டது. கோப்புகளிலேயே என்பதை வேகமாக சொல்லும் பொழுது கோப்பையிலே என்று சொல்கிறேன் என்றான்.

ரவி பெரு மூச்சு விட்டவாறு இவ்வளவுதானா விஷயம். இது சரியாக உள்ளது. நான் தவறாக நினைத்து விட்டேன். அது சரி,  ஆனால் கோல மயில் என் துணையிருப்புஎன்று கூறுவதுதான் என்னவோ போலுள்ளது என்றான். 

அதைக்கேட்ட ராமுவும்  சிரித்தவாறு நான் திட்டம் சம்பந்தமாக தரும் குறிப்புகளை தட்டச்சு அதாவது டைப்  செய்ய ஒரு பெண் உதவியாளரை நியமித்துள்ளார்கள். அவள் தந்தைக்கு  தமிழ் மீது அதிக பற்று  உள்ளதால் அவளுக்கு மயில்  என பெயர் வைத்துள்ளார் என்றான்.





அதைக் கேட்ட ரவி அப்படியா, சரி, இதை இதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால்  அவள்  பெயரை வெறுமனே மயில் என்று  கூறாமல் ஏன் கோல என்ற வார்த்தையை சேர்த்து அவள் அழகை வர்ணிக்கிறாய்.  ஒரு உயர் அதிகாரியாக இருக்கும் நீ இவ்வாறு செய்யலாமா? என்று கேட்டான்.

அதைக்கேட்ட ராமு சிரித்தவாறு அவசரப்படாதே.  கோல என்பது அவள் முகப்பெழுத்து. அதாவது இனிஷியல் என்றான்.

ரவிக்கு புரியவில்லை. அவள் இனிஷியலா? வியப்பாக இருக்கிறதே எப்படி? என்று கேட்டான். 

ராமு அவளுடைய ஊர்  கோவில்பட்டி . அவள் தந்தையின் பெயர் லட்சுமணன். அதனால் அவளின் முழுப்பெயர்  கோவில்பட்டி லட்சுமணன் மயில் என்று வரும். அதைத்தான் சுருக்கமாக தமிழில்  கோ.ல.மயில்  என்றேன். இதையே  ஆங்கிலத்தில் சொல்வதென்றால்  கே.எல். மயில்  என்று சொல்லலாம். சரியா? என்றான்.

அதைக்கேட்ட ரவி அற்புதம்டா. ஒரு பாடலின் இரண்டு  வரிகளில்  ஒரு ஆபீஸையே அடக்கிட்டாய். இப்ப கவிஞர் கண்ணதாசன் அவர்கள் உயிரோடு இருந்து இதைக் கேட்டால் மிகவும்  சந்தோஷப்படுவார் என்று ராமுவை பாராட்டினான்.

(ராஜஸ்ரீ  என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்