தப்பாப் பேசி பேரைக் கெடுத்துக்காதீங்க.. மதுரை ஆதீனத்திற்கு ஜோதிமணி அட்வைஸ்!

May 28, 2023,04:02 PM IST
சென்னை:  மதுரை ஆதீனம் மோடி அரசுக்கு தாராளமாக துதி பாடலாம். ஆனால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களை தவறாக விமர்சித்து தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சைவ ஆதீனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். திருவாவடுதுறை, தருமபுரம் உள்ளிட்ட பல்வேறு ஆதினத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் மதுரை ஆதீனமும் ஒருவர்.

இந்த நிலையில் மதுரை ஆதீனம், புதிய நாடாளுமன்றத் திறப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.



இதுகுறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மதிப்பிற்குரிய மதுரை ஆதினம் அவர்கள், இந்தியாவின் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சியை நடத்திவரும் மோடியின் புகழ்பாடி, மனுநீதியை தூக்கிப்பிடிக்க விரும்பினால் தாராளமாகச் செய்யலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியையும்,நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்களையும் தவறாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

300 ஆண்டுகளாக ஆங்கில ஆட்சியில்  அடிமைப்பட்டு,சுரண்டப்பட்டு கிடந்த இந்தியாவை, அந்த ஆட்சிக்கு அடிமை செய்து, சுதந்திரப் போரட்டத்திற்கு துரோகம் செய்த பாஜக/ மோடியின் முன்னோடிகளின் சித்தாந்தத்தால் இன்று வரை வெறுப்பு, பிரிவினை எனும் விஷவிதைகள் விதைக்கப்பட்ட மண்ணை கட்டிகாத்த இயக்கம் காங்கிரஸ்

உலக வரைபடத்தில் இந்தியாவுக்கென்று ஒரு மதிப்பு மிகுந்த இடத்தையும், வலிமையான, வளமான இந்தியாவையும் இந்திய மக்களோடு சேர்ந்து கட்டியெழுப்பிய இயக்கம் காங்கிரஸ் இயக்கம் என்பதை மதுரை ஆதினம் மறந்துவிடக்கூடாது.

சனாதன தர்மத்திற்கு எதிராக நேருவும், காங்கிரஸ் இயக்கமும் அரசியல் சாசனத்தை முன்னிறுத்தி, அந்த அரசியல் சாசனத்தின் முன் அனைவரும் சமம் எனும் சமதர்ம சமுதாயத்தைக் கனவுகண்டதாலேயே, மதுரை ஆதினம் போன்றவர்கள் ஒரு மடாதிபதியாக இன்று அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.

தமிழ் மரபில் ஆதினங்களுக்கு என்று தனித்த அடையாளமும், மரியாதையும் உண்டு. அந்த அடையாளத்திற்கு பெருமை சேர்த்த குன்றக்குடி, பேரூர் போன்ற பல  ஆதினங்கள் தமிழையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். அந்த பெருமையை நரேந்திரமோடிக்கும், பாஜகவுக்கும் அடகுவைத்து தமிழ்நாட்டிற்கும்,தமிழகத்தின் ஆதின மரபிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று மதுரை ஆதினம் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜோதிமணி.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்