வாடா மலரே, வஞ்சனை இல்லா.. தேவனின் மகளே.. தேடித் தேடி தேன்மலர் தூவும்.. சேலை கட்டிய திருச்சபையே!

May 28, 2024,08:01 AM IST

- சுதாகரி


விழிகள் மீனோ?

மொழிகள் தேனோ?

சிலிர்க்கும் பாவை நீதானோ?

அன்பின் பெண்மை

அள்ளும் உண்மை

அழகின் மறு பெயர் நீதானோ?


மனதை வருடும் பூங்காற்றே!

மாசில்லாத பெண்மகளே!

பேசும் கரங்களின் மென்மகளே!

மெல்லிய தேன்காற்றே!

மேவும் கருணையில் மணம் வீசும்

தென் மகளே! என் பொன்மகளே!




படபடக்கும் பட்டாம் பூச்சியோ?

நீ காற்றில் ஆடும் பைங்கிளியோ?

கண்கள் பேசும் தேன்மொழியோ?

நீ துள்ளித் திரியும் 

கம்பனின் நாயகியோ?

உயிர் அள்ளிச் செல்லும்

வானத்து தாரகையோ?


மண்வாசனை நாயகியே!

மனதைக் கொள்ளும் தேவதையே!

ஆன்ம அறிவால் உள்ளம் நுழைந்த

ஆனந்த தேன்மழையே!

ஆர்ப்பரிப்பில்லா 

அன்னை நீயே !

ஆழ்கடலில் விளைந்ந நித்திலமே!


மெல்லிய சிரிப்பில் 

கொள்ளை கொள்ளும்

சின்னப் பூங்கொடியே!

நேசம் காட்டி என்னைத் தொட்டு

நெஞ்சில் நின்ற நேரிழையே!

சலசலப்பில்லா காவிரியே!

சஞ்சலமில்லா தமிழ்மகளே!


காற்றினும் மெல்லிய 

மெல்லியளே!

நடை தோற்கும் 

சாயலில் பெண்மயிலே!

பேசும் மொழியெலாம்

மெல்லினமே!

தேடும் உன்னை என் மனமே!


வானத்து நிலவே!

வாடா மலரே!

வஞ்சனை இல்லா

தேவனின் மகளே!

தேடித் தேடி தேன்மலர் தூவும்

சேலை கட்டிய திருச்சபையே!

     

கண்மலர் சிரிப்பினில்

கொள்ளை கொள்ளும்

முத்து நகையே! முழு நிலவே!

ஆசனம் மாறினாலும்

நேசம் மாறா பைங்கிளியே!

நெஞ்சைத் தொட்ட பைங்கொடியே!


புதிதாய் சேர்ந்த பூங்கிளியே!

போற்றும் உன்னை என் மனமே!

தாயுமானவளே! 

என் தங்கத் தமிழ் மகளே!

என் மன வானில் சிறகை விரிக்கும்

சின்னஞ்சிறு கிளியே!


என் மனமென்னும் தோட்டத்தில்

இத்துணைப் பூக்கள்!

வகை வகையாய்ப் பூக்கள்!

வண்ண வண்ணமாய்ப் பூக்கள்!

மனதை அள்ளும் நட்பூக்கள்

அத்துணைப் பூக்களும்

பாடும் ராகம் அன்பின் ராகமே!

அத்துணைப் பூக்களும்

சிந்தும் துளிகள் 

ஆனந்த தேன் துளிகளே!

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்