- அகி
சிறுகதை என்பது படித்த மாத்திரத்தில் மனதின் எண்ண ஓட்டங்களைக் கதையின் களத்தோடு பயணிக்க வைக்கிறது. கதையின் காலம் சிறிதாக இருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் நியாயங்களை உண்மையாக்கப் போராடுகின்றன. அதனை என் நியாயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.
அப்படி எழுத்தாளர் வித்யா பாலசுப்ரமணியம் எழுதிய ஒரு சிறுகதைதான் என்னை இன்றுவரை யோசிக்க வைத்த கதை. அதனோடு பயணித்த பாதை...
வெள்ளைப் பனி சூழ்ந்து வெள்ளை மாளிகை போல் காட்சியளிக்கும் காஷ்மீர்தான் கதையின் களம். இரு நாடுகளுக்கும் நடுவில் அமைதியாக நகர்ந்து செல்லும் நதி, இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது. இந்தியாவின் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் காவலில் இருக்கிறார்கள். நதிக்கு அப்புறம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் அந்நாட்டைக் காவல் காக்கிறார்கள். இந்திய வீரர்களில் ஒருவர் பஞ்சாபைச் சேர்ந்தவர்; மற்றொருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இரவு நேர நிசப்தத்தை விரட்ட அவர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்கிறார்கள்.

சிங்: "என் தங்கைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்துவிட்டேன். கல்யாணத்திற்கு லீவு கிடைக்குமானு தெரியலடா?"
சிவா: "நீ மேஜர்கிட்ட கேட்டியா? இப்பவே சொன்னால்தான் வேற யாரையாவது மாற்றிவிட்டு உனக்கு லீவு கொடுப்பாங்க."
சிங்: "சொல்லிட்டேன், சொல்றேன்னு சொல்லியிருக்கார். உடம்பு வேற சரியில்லை, அதையும் போய் செக் பண்ணணும்."
சிவா: "லீவு எல்லாம் கிடைக்கும்டா. நீ நிம்மதியாத் தூங்கு, காலையில பார்த்துக்கலாம்."
இருவரும் தூங்க ஆரம்பிக்கிறார்கள். நள்ளிரவில் சிங்கின் அலறல் சத்தம் கேட்டு சிவா அவனைத் தொட்டுப் பார்க்கிறான். உடல் அனலாகக் கொதிக்கிறது. கையில் இருந்த மாத்திரையும் தீர்ந்துவிட்டது. உடனே சிவா ஹெட் குவார்ட்டர்ஸிற்குத் தகவல் தெரிவிக்கிறான். ஆனால், காலையில்தான் வர முடியும் என்று சொல்லிவிடுகிறார்கள். வேறு வழி தேடுகிறான். இந்த நடுக்காட்டில், நள்ளிரவில் யாரிடம் உதவி கேட்பது? அந்நேரம் நதிக்கு மறுபுறம் இருக்கும் பாகிஸ்தான் வீரர்கள் நினைவுக்கு வர, அவர்களிடம் உதவி கேட்கலாமா என்று யோசிக்கிறான். "அவர்கள் எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களாயிற்றே, எப்படிப் போய் கேட்பது?" என்று தனக்குள்ளேயே விவாதிக்கிறான். பின் நண்பனின் நிலை மோசமாக இருப்பதைப் பார்த்து, 'ஆபத்திற்குப் பாவமில்லை' என்று சென்று கேட்கிறான்.
இவன் சென்று, தன் நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கையில் மருந்து இல்லை என்றும் கூறி உதவி கேட்கிறான். அதற்கு அவர்கள், "எங்களிடம் ஏன் கேட்கிறாய்? நாங்கள் உன் எதிரி நாடு. உன் ஹெட் குவார்ட்டர்ஸிற்குத் தகவல் கொடு" என்கிறார்கள்.
"நான் தகவல் தெரிவித்துவிட்டேன், அவர்கள் காலையில்தான் வர முடியும் என்கிறார்கள். என் நண்பனின் நிலை மோசமாக உள்ளது. அதனால்தான் உங்களிடம் உதவி கேட்கிறேன்" என்கிறான் சிவா.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, ஒருவன் நதிக்கு அருகே வந்து ஒரு மாத்திரையைக் கொடுக்கிறான். "இதை இப்போது கொடு, காலை வரை தாங்கும். விடிந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்" என்று கூறுகிறான். இவன் அந்த மாத்திரையை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியில் "நன்றி" என்கிறான்.
அதற்கு அந்த வீரன், "முதலில் மருந்தை உன் நண்பனுக்குக் கொடுத்து அவனைக் காப்பாற்று. நாளைக்கே போர் என்று அறிவித்தால் உன்னை நானும், என்னை நீயும் சுட்டுத்தள்ளத்தான் வேண்டும். நான் உனக்கு நண்பனும் இல்லை, நீ எனக்கு எதிரியும் இல்லை. எனக்கு நன்றி கூறாதே, போ" என்று கூறுகிறான். அத்துடன் அந்தச் சிறுகதை முடிந்துவிடுகிறது.
உண்மைதான், அவர்கள் ஏன் ஒருவரை ஒருவர் சுட்டு வீழ்த்த வேண்டும்? அவர்களுக்குள் என்ன உறவு? என்ன பகை? ஏதுமில்லை. ஆனால் 'தேசம்' என்று வந்துவிட்டால் கண்மண் தெரியாமல் சுட்டுத்தள்ளத்தான் வேண்டும்.
இதில் மனிதாபிமானம் மிக்க இரு நாட்டுப்பற்றுள்ள வீரர்களைச் சூழ்நிலைக் கைதிகளாகக் கதையின் கருவாக்கம் காட்டுகிறது. பாகிஸ்தான் வீரரின் நோக்கம் எதிரியைக் கொல்ல வேண்டும் என்பதாக மட்டும் இருந்தால், இந்தியருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் கணக்கில் ஓர் எதிரி குறைந்திருப்பான். ஆனால், அதையும் தாண்டி ஒரு உயிரைப் பிழைக்க வைத்திருக்கிறார்கள். நன்றியைத் தடுத்த அந்த வீரன் "போரென வந்தால் உன்னை கொன்றுவிடுவேன்" எனக் கூறும்போது, 'நாட்டுப்பற்று' என்ற கட்டமைப்பிற்குள் மனிதநேயம் நசுக்கப்படுகிறது.
மனிதனின் முதல் எதிரியே 'அதிகாரம்' என்ற அமைப்புதான். தனிநபரின் ஆளுமையை நிரூபிக்கவும் அதிகாரத்தை நிலைநாட்டவும், எந்த விதமான விருப்பு வெறுப்பும் இல்லாத மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வதைத் தான் நாம் 'தேசப்பற்று' என்று அழைத்துக்கொள்கிறோம்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}