சென்னை: எங்கள் திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு மூன்றாவது நபரே காரணம். வாழ்வின் ஒளி என அறியப்படுபவர் தான் எங்களுடைய வாழ்க்கையில் இருளைக் கொண்டு வந்தார் என ஆர்த்தி ரவி பரபரப்பான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்த காலகட்டத்தில் என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்து விட்டது.
ஒருமுறை கடைசியாக அனைவருக்கும் உண்மையை சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். எங்களது திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வருவதற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையிடோ அல்லது கட்டுப்பாடோ காரணம் இல்லை.
எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர்தான். உங்கள் வாழ்வின் ஒளி என்று அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளை கொண்டு வந்து விட்டார் என்பதே உண்மை. இந்த நபர் சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே எங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டார். இதை ஒரு வெற்று குற்றச்சாட்டாக அல்ல. மாறாக போதுமான ஆதாரங்களுடன் தான் கூறுகிறேன்.
எனக்கு கட்டுப்படுத்திய மனைவி என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. என் கணவரை அன்புடன் பராமரித்து அவருக்கு கேடு தரும் தீய பழக்கங்கள் வழக்கங்களில் இருந்தும், எங்கள் வீட்டின் உறுதியை சீர்குலைக்கும் விஷயங்களில் இருந்தும், அவரை பாதுகாத்து கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால் அப்படியே இருக்கட்டும். எந்த ஒரு உண்மையான மனைவியும் தன் கணவரின் நலனுக்காக எதை செய்வாரோ நானும் அதைத்தான் செய்தேன். ஆனால் அப்படி நடந்து கொள்ளாத பெண்களுக்கு இந்த சமுதாயம் சுமத்தும் அனைத்து கொடூரமான பட்டங்களையும் அனைவரின் நலனை காப்பாற்றியும் நான் சுமக்கிறேன்.
இன்னும் சொல்வதென்றால் வாழ்வின் கடினமான சமயங்களில் கூட நாங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக என் கணவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோருடன் அன்புடனே இருந்தோம். எங்கள் சமூக ஊடகப் பதிவுகளே அதற்கு சாட்சி. நாங்கள் பிரிவதற்கு முதல் நாள் வரை எங்கள் உறவும் எல்லோருடைய திருமண வாழ்விலும் இருப்பது போல் அன்பும், விவாதமும், ஆசையும், தற்காலிக கருத்து வேறுபாடுகளும் நிறைந்தது என்று தான் நான் நம்ப வைக்கப்பட்டேன்.
கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும் தான் அவர் தன் பிள்ளைகளை சந்தித்து இருக்கிறார். அதுவும் அவருடைய விருப்பத்தின் பேரில் மட்டுமே. எங்கள் பிள்ளைகள் இன்று படும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவர்களது தொலைபேசி எப்போதும் உபயோகத்தில் இருந்தும் அவர்களின் அப்பா அழைக்காத காரணம் அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.
உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் எந்த சக்தியும் அவரை தடுத்து இருக்க முடியாது. நிச்சயம் வந்து சந்தித்து இருப்பார். எங்கள் குழந்தைகள் அவர்கள் தந்தையை சந்திப்பதை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது தந்தை வழி பாட்டி, தாத்தா வீட்டில் அல்லது எங்கள் அலுவலகம் போன்ற நன்கு அறிந்த பொது இடங்களில் அப்பாவை சந்திக்கும்போது மட்டுமே பாதுகாப்பாக உணர்கிறோம் என்று தெளிவாக சொல்கிறார்கள். அதை விட்டு யார் எங்கள் பிள்ளைகளின் மன அமைதியை பறித்தாரோ அவர் வாழும் இடத்தில் அவர்களின் தந்தையை சந்திக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுவது அவர்களை மேலும் அவர்கள் தந்தையை விட்டு விலகச் செய்து விட்டது. குழந்தைகளை அவரிடம் இருந்து அப்புறப்படுத்தியுள்ளேன் என உருகும் அவர், அவர்களை சந்திக்கவோ அல்லது அவர்களை தன் பொறுப்பில் ஒப்படைக்கும் படியோ சட்டபூர்வமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
என் கணவர் வெளிநாட்டில் தொடர்பு கொள்ள இயலா நிலையில் இருந்தபோது இங்கு நடந்த ஒரு சிறு கார் விபத்து ஆண்டவன் அருளால் என் குழந்தைகளுக்கு எந்த துன்பமும் ஏற்படுத்தாத அந்த விபத்தில் சேதம் அடைந்த காரை சரி செய்ய இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்பட்டன. அதை எடுத்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் சொந்தமான அலுவலகத்திற்குச் சென்றேன். ஆனால் என்னை உள்ளே கூட நுழைய விடாமல் காவலர்கள் வெளியேற்றினார்கள். சட்டப்படி எனக்கும் உரிமை உள்ள இடத்திலிருந்து அவமானப்படுத்தி அனுப்பப்பட்டேன்.
அனைத்து வடிவத்திலும் என்னால் துன்புறுத்தப்பட்டதாக சொல்கிறார். மனம் வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக கூறுவதைக் கேட்கும்போது வேதனையில் சிரிப்புதான் வருகிறது. அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும் அது அவரது விருப்பத்தினால் தான் இருந்திருக்க முடியுமே தவிர கட்டாயப்படுத்தினால் அல்ல.
15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எனது சொந்த கனவுகள் லண்டனில் பெற்ற முதுகலை பட்டம் இலட்சியம் என அனைத்தையும் துறந்து விட்டு வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி மீறப்பட்டது. அவருக்காக வாழாமல் எனக்காகவும், என் லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்தால் என் சொந்த அடையாளத்தில் இதைவிட இரு மடங்கு வசதியான உயர்வான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து இருப்பேன் . ஆனால் காதலின் பெயரில் நம்பிக்கையின் பேரில் வாழ்ந்து விட்டேன். நாங்கள் இதுவரை எடுத்த அனைத்து பொருளாதாரம் முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவைகளே. அதன் எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அவை முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னுடைய துணை நிற்கும் செய்தித்துறை, சமூக ஊடகம் மற்றும் பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு உண்மையில் எனக்கு மிகுந்த பலம் அளிக்கிறது.
மேலும் இத்தனை நெருக்கடியையும் தாங்கிக் கொண்டிருக்கும் என் இரண்டு பிள்ளைகள் எங்கள் வீட்டு பெரியவர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இந்த தனிப்பட்ட வேதனையை பிரச்சனையை இப்படி நான் பொதுவெளியில் இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். இந்த சூழ்நிலையில் என் சுய கௌரவத்தை பாதுகாக்கவே இப்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
இத்தனை வருடங்கள் உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறித் தள்ள வேண்டும் என முடிவு எடுத்த நீங்கள் அதைக் கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம் என்று என் கண்ணியமும், நேர்மையும், உங்களால் ஒரு பொது விவாதமாக மாற்றப்பட்டுள்ளது. வேதனையோடு கடக்க முயற்சிக்கிறேன். உண்மை தெரிந்த ஒரு நபர் என் கணவர் எனக்காக நின்று பேச மறுக்கிறார். அவருடைய மௌனத்திற்கு பின் ஒரு நோக்கம் உள்ளது அவருக்கு நிம்மதி கிடைக்க உண்மையில் விரும்புகிறேன். ஆனால் அந்த நிம்மதி உங்களோடு எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது.
நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன். ஒரு போதும் தாழ்ந்து போக மாட்டேன் இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை.ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்க காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Power Tariff: வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.. கட்டண சலுகையும் தொடரும்.. அமைச்சர் சிவசங்கர்
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு..23ஆம் தேதி செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!
ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை கிடையாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு மனவலி தருகிறது.. சீமான்
இந்தியாவில் மீண்டும் கொரோனா... தமிழ்நாட்டில் 34 பேருக்கு தொற்று உறுதி: மத்திய அரசு அறிவிப்பு!
என் கணவரை விட்டுப் பிரிய மூன்றாவது நபரே காரணம்.. ஆர்த்தி ரவி பரபரப்பு குற்றச்சாட்டு!
தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஆர்பிஐ புதாக 9 விதிமுறைகள் அறிவிப்பு!
அரபிக்கடலில் உருவாகிறது சக்தி புயல்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணிப்பு..!
நீட் தேர்வால் 24வது மாணவர் உயிரிழப்பு... டம்மி அப்பா கூறியது அத்தனையும் பொய் : எடப்பாடி பழனிச்சாமி!
கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!
{{comments.comment}}