கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!

Oct 31, 2025,06:07 PM IST

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.


அதிமுக.,வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக இருப்பவர் செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தில் அதிமுக.,வின் முகமாக பல ஆண்டுகளாக அறியப்பட்ட செங்கோட்டையன், எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே அதிமுக.,வில் இணைந்து எம்எல்ஏ., ஆனவர். எம்ஜிஆர் மட்டுமின்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலும் அமைச்சர் உள்ளிட்ட கட்சியின் பல பதவிகளையும் வகுத்தவர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற நிர்வாகிகளில் ஒருவராகவும், அதிமுக.,வில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் செங்கோட்டையன்.


கடந்த சில ஆண்டுகளாகவே செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செய லாளரான எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இபிஎஸ் பங்கேற்கும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்த கொள்வதை தவிர்த்து வந்தார். அதிருப்தியில் இருந்த செங்கோட்டையனை சமாதானப்படுத்த, கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில் செங்ஙகோட்டையன், சமீபத்தில் கோபிசெட்டிபாளையத்தில் திடீரென செய்தியாளர்களை சந்தித்து, பிளவுபட்ட அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும், கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க கட்சி தலைமை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியதுடன் கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் பரபரப்பு பேட்டி அளித்தார். இதனால் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புக்கள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதன் பிறகு டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு செங்கோட்டையன் கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வந்தார்.




இந்த சூழ்நிலையில் நேற்று பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் ஒரே காரில் சென்றார் செங்கோட்டையன். அதைத் தொடர்ந்து பிளவு பட்ட அதிமுக.,வை ஒன்று சேர்க்கவே ஒன்று சேர்ந்திருப்பதாக பேட்டியும் அளித்தார்.இந்நிலையில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


50 ஆண்டு கால அதிமுக தலைவர்


1948ம் ஆண்டு பிறந்த கே.ஏ.செங்கோட்டையன், மிக மிக மூத்த அதிமுக தலைவர் ஆவார். எம்ஜிஆர். 1972ம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கிய காலத்திலிருந்தே அதில் பயணித்து வந்தவர். எம்ஜிஆரின் வழியொட்டி நடந்த அவர் பின்னர் ஜெயலலிதா காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற தலைவராக மாறினார்.


அதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள செங்கோட்டையன், மறைந்த ஜெயலலிதாவின் தளபதிகளில் ஒருவராகவும் வலம் வந்தவர். அமைச்சராக பல்வேறு வகையான பொறுப்புகளை வகித்துள்ளார். நீண்ட காலமாக சட்டசபை உறுப்பினராக உள்ள தற்போதைய தலைவர்களில் அமைச்சர் துரைமுருகனும், செங்கோட்டையனும்தான் மூத்தவர்கள்.


கோபிசெட்டிப்பாளையம் தொகுதிதான் இவரது நிரந்தரமான முகவரி. அந்தத் தொகுதியிலிருந்து 1977, 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்.


ஜெயலலிதாவின் முதல் ஆட்சி காலத்தில் (1991 முதல் 1996 வரை) இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2011 நவம்பர் வரை இவர் விவசாயத் துறை அமைச்சராக இருந்தார்.


அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில், செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  2006 முதல் 2012 வரை அ.இ.அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளராகச் செங்கோட்டையன் பணியாற்றினார். 


2வது முறையாக நீக்கம்:


கே.ஏ. செங்கோட்டையன் கட்சியை விட்டு நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2012ம் ஆண்டு ஜெயலலிதா  காலத்தில் அவர் மீது அவரது குடும்பத்தினரே பல்வேறு புகார்களை ஜெயலலிதாவிடம் கொடுத்ததால், அவர் கட்சிப் பதவிகள், அமைச்சர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேசமயம், ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமியால் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டு, அமைச்சராக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அதே எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.


நாளை பதில் சொல்கிறேன் - கே.ஏ. செங்கோட்டையன்


அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் விரிவாக அவர் பேசவில்லை. தனது நீக்கம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது பற்றி நாளை பதில் சொல்கிறேன். மொத்த விவகாரத்திற்கும் விளக்கம் அளிக்கிறேன் என பதிலளித்துள்ளார்.


கே.ஏ.செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன, அவரும் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் இணைந்து என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையில் எடுக்கபோகிறார்கள்.. இதனால் அதிமுகவுக்கு என்ன மாதிரியான பாதிப்பு வரலாம் என்பது குறித்து போகப் போகத்தான் தெரியும். 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!

news

ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!

news

தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!

news

தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி

news

SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?

news

குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை

news

ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

news

இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்