சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை வைத்து அரசியல் நடக்கிறதா என்ற சந்தேகமும், கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. காரணம், விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடந்து வரும் சம்பவங்கள் இந்த கேள்விகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
தேமுதிகவை உருவாக்கி, தமிழ்நாட்டு அரசியலில் புதிய சகாப்தத்தைப் படைத்தவர் விஜயகாந்த். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகப் பெரிய மிரட்டலாக விஜயகாந்த் உருவெடுப்பார் என்று பரவலாக அப்போது நம்பப்பட்டது. அது நடக்கவும் செய்தது. காரணம், முதல் முறையாக தேமுதிக போட்டியிட்ட தேர்தலிலேயே மிகக் கணிசமான வாக்குகளைப் பெற்றார் விஜயகாந்த். அவர் மட்டும்தான் வென்றாலும் கூட பல இடங்களில் திமுக, அதிமுக வாக்குகளைப் பிரித்தார். அதேபோல வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகளையும் அவர் பதம் பார்த்தார்.
மிரட்டலாக உருவெடுத்த தேமுதிக
திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் மிரட்டலாக உருவெடுத்த தேமுதிகவை, சாய்க்கவும், அதை பலவீனப்படுத்தவும் திமுக, அதிமுக கட்சிகள் களம் குதித்தன. இதனால் அவரை தங்கள் பக்கம் இழுக்க இரு கட்சிகளும் பகிரங்கமாகவே முயன்றன. இதில் ஆரம்பத்தில் நழுவிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு "தீர்வு" இருக்கும் இல்லையா.. அதை வைத்து தேமுதிகவை தன் பக்கம் ஈர்த்து அதிமுக வெற்றி பெற்றது.
அதுவரை மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி என்று கூறி வந்த விஜயகாந்த் மீது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது என்பது உண்மை. ஆனால் அதே மக்கள், எப்போது அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணிக்குப் போனாரோ அந்த நிமிடமே அவரை விட்டு விலக ஆரம்பித்தனர் என்பதும் உண்மை. அதிமுகவால் தேமுதிகவுக்கு பெரிய லாபம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தேமுதிகவால் அதிமுகவுக்குத்தான் லாபம் மிகப் பெரிதாக இருந்தது.
விஜயகாந்த் போட்ட தப்பான கணக்குகள்
எப்போது ஜெயலலிதா தேமுதிகவை உதறித் தள்ளினாரோ அப்போதே விஜயகாந்த்தும், அவரது கட்சியும் பலவீனமாக மாறி விட்டது. திட்டமிட்டு தேமுதிகவை அதிமுக உடைத்தது, சிதைத்தது, சின்னாபின்னமாக்கியது. தனது பிடிவாதத்தாலும், விடாப்பிடியான போக்காலும், சரியான ஆலோசனைகள் கிடைக்காததாலும், கட்சியின் முக்கியத் தலைவர்கள் பிரிவதைத் தடுக்க முடியாமல் இருந்தார் விஜயகாந்த். அங்கு அவர் செய்த பெரும் தவறு, தனது ஆதரவு வட்டத்தை கட்டிக் காக்கத் தவறியது. அதை அவர் செய்யத் தவறியதால், அவரை நம்பியிருந்த பலரும் அவரை விட்டு விலக ஆரம்பித்தனர்.
அடுத்தடுத்து எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் தேமுதிக மேலும் மேலும் பலவீனமடைந்தது. மக்கள் நலக் கூட்டணி என்ற மிகப் பெரிய தவறான முடிவை எடுத்த விஜயகாந்த், தனது சரிவுக்கு தானே பிள்ளையார் சுழி போட்டுக் கொண்டார். ஒரு வேளை அப்போது அவர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று திமுக பக்கம் போயிருந்தால், நிச்சயம் கட்சியும் பலப்பட்டிருக்கும், இன்னும் சில காலம் ஆக்டிவ் அரசியலில் தேமுதிக மிளிர்ந்திருக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
உயிருடன் இருந்தபோதே பலவீனமான தேமுதிக
விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே அவரது கட்சி பெரும் பலவீனமடைந்து விட்டது. மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியாக மாறி விட்டது. இந்தநிலையில்தான் அவரது மரணம் வந்து சேர்ந்தது. அவரது மரணத்தின்போது கூடிய கூட்டம் நிச்சயம் தேமுதிகவினர் மட்டும் அல்ல.. மாறாக அவர் மீது அன்பு வைத்திருந்த சாமானிய மக்கள்தான். அவர்கள் அனைவரும் வாக்கு வங்கிகள் அல்ல.. ஆனால் அதை வாக்கு வங்கியாக கருதி இப்போது பலரும் பல்வேறு திட்டங்களுடன் தேமுதிகவினரை வளைக்க ஆரம்பித்துள்ளனர் சிலர்.
விஜயகாந்த்தின் மரணத்தை வைத்து அரசியல் நடக்க ஆரம்பித்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச்சு கிளம்பியுள்ளது.. இதற்கு பிரேமலதா விஜயகாந்த்தின் பேச்சும் ஒரு காரணம். விஜயகாந்த்தை அடக்கம் செய்து சில நிமிடங்கள் கூட முடியாத நிலையில் மைக்கைப் பிடித்து பிரேமலதா பேசிய பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது.. "ஆகவே இந்த நல்லநாளில்" என்று அவர் சொன்ன வார்த்தையை யாரும் ரசிக்கவில்லை. அடக்க நிகழ்ச்சியின்போது இப்படியெல்லாமா பேசுவது என்றுதான் பலரும் முகம் சுளித்தனர். அது வாய் தவறி வந்த வார்த்தையாகவே இருந்தாலும் கூட அடக்கம் செய்த கையோடு இதுபோல மைக்கைப் பிடித்து பேசுவதை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
ரசிக்கப்படாத பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
இப்போது விஜயகாந்த் அடக்கஸ்தலத்தை கிட்டத்தட்ட ஒரு கோவில் போல மாற்றி விட்டனர். எல்லோரும் வாருங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் பகிரங்கமாகவே அழைத்து வருகிறார். மறுபக்கம் திமுக சார்பு தொலைக்காட்சி சானல்களில் விஜயகாந்த் குறித்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தனர். இதன் மூலம் தேமுதிகவினரை தன் பக்கம் ஈர்க்க திமுகவும் முயல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில்தான் நேற்று திருச்சி வந்த பிரதமர் மோடி, தனது பேச்சின்போது விஜயகாந்த்துக்கு புகழாரம் சூட்டி பாராட்டிப் பேசியிருந்தார். அதுபோதாதென்று தற்போது விஜயகாந்த்தைப் பாராட்டி நீண்டதொரு அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். இதுவும் பலரையும் யோசனையில் ஆழ்த்தியுள்ளது. மிக நீளமான அறிக்கையை கட்டுரை போல வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. அதில் விஜயகாந்த் பற்றி மட்டும் பேசாமல், தமிழ்நாட்டில் தேமுதிகவுடன் இணைந்து போட்டியிட்டபோது தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற "வாக்கு"கள் குறித்தும் பேசியுள்ளார் மோடி. இது பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
வீழ்ச்சி அடைந்த வாக்கு வங்கி
விஜயகாந்த் மரணத்தால் ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தைப் பயன்படுத்திக் கொள்ள தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயல்கின்றனவா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. தேமுதிகவைப் பொறுத்தவரை அதன் வாக்கு வங்கி பெரும் சரிவைக் கண்டுள்ளது. 2 தேர்தல்களில்தான் தேமுதிகவின் வாக்கு வங்கி சொல்லிக் கொள்ளும்படி இருந்தது. அதன் பிறகு அது சரிவைக் கண்டது.
நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 2009ம் ஆண்டு தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்டது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. பெற்ற வாக்கு சதவீதம் 0.75 ஆகும். அது படிப்படியாக ஒவ்வொரு தேர்தலாக குறைந்து 2019 தேர்தலில் 0.15 சதவீதமாக சுருங்கியது. முதல் தேர்தலில் 40 தொகுதிகலிலும், 2014 தேர்தலில் 14 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக, 2019 தேர்தலில் போட்டியிட்டது ஜஸ்ட் 4 தொகுதிகளில்தான்.
என்ன முடிவெடுப்பார் பிரேமலதா விஜயகாந்த்
சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை 2006ல் போட்டியிட்ட தேர்தலில் (இதுதான் தேமுதிகவின் முதல் தேர்தல்) 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது. விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். இது தனித்துப் போட்டியிட்ட தேர்தலாகும். அடுத்து 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது தேமுதிக. இதில் 29 இடங்களில் வெற்றி.. கிடைத்த வாக்குகள் 7.88 சதவீதமாகும். அதன் பின்னர் தேமுதிகவின் வாக்கு வங்கி சிதற ஆரம்பித்தது. 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் 104 தொகுதிகளில் போட்டியிட்டு 2.39 சதவீத வாக்குகளுடன் சுருங்கிப் போனது தேமுதிக. விஜயகாந்த்தே தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. 2021 தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டி.. 0.43 சதவீத வாக்குகளே கிடைத்தன. ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை.
விஜயகாந்த் இருந்தபோதே இந்த நிலை. இப்போது விஜயகாந்த் மரணத்திற்குப் பிறகு தேமுதிக எந்த வகையில் பலம் பெற்றுள்ளது என்று தெரியவில்லை. முக்கியத் தலைவர்கள் என்று யாருமே கட்சியில் இல்லை. பார்த்தசாரதியும், அனகாபுத்தூர் முருகேசனும்தான் முகம் தெரியும் வகையிலானவர்களாக உள்ளனர். மற்றபடி முக்கியமான தலைவர்கள் என்று யாருமே இல்லை. முக்கியமாக இப்போது விஜயகாந்த்தே இல்லை.. அதுவே மிகப் பெரிய பலவீனம்தான். கட்சிகள் பல கணக்குகளுடன் காத்துள்ளன. பிரேமலதா விஜயகாந்த் என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}