ஆசை இருக்கு தாசில் பண்ண; அம்சம் இருக்கு கழுதை மேய்க்க.. அப்படீன்னா என்ன தெரியுமா?

Jan 21, 2026,11:04 AM IST

- ஆ.வ. உமாதேவி


வாழ்வியலின் வழிகாட்டி.. தமிழ்ப் பழமொழிகள். மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, தான் கற்ற பாடங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் பயன்படுத்திய மிகச்சிறந்த கருவி பழமொழிகள். "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" என்பதில் பழமொழிகளுக்கு நிகர் ஏதுமில்லை.


சரி பழமொழிகள் குறித்து சுருக்கமாக பார்ப்போமா.. 




வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒருவருக்குத் தன்னம்பிக்கை மிக அவசியம். "தோல்வியே வெற்றிக்கு முதல் படி" என்பதை உணர்ந்தவன் எதற்கும் அஞ்சமாட்டான். ஒரு செயலைச் செய்யும்போது அவசரம் கூடாது; ஏனெனில் "பதறிய காரியம் சிதறும்". அதே சமயம், நம்மிடம் வளங்கள் (Resources) இல்லாமல் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது என்பதை "வெறும் கை முழம் போடுமா?" என்ற கேள்வி உணர்த்துகிறது. வெற்றி பெற்ற பின்னும் தலைக்கணம் கூடாது, ஏனெனில் "ஆனைக்கும் அடி சறுக்கும்".


ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது செயல்களே காட்டும். "மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி" என்பது தலைமைத்துவத்திற்குச் சான்று. அதேபோல, "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்பார்கள். தப்பு செய்தவன் தானாகவே பிடிபடுவான். நாம் எதைச் செய்கிறோமோ அதுவே நமக்கும் நடக்கும் என்பதை "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற வரிகள் ஆணித்தரமாகச் சொல்கின்றன.


கல்வியே ஒருவனை உயர்த்தும். "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" என்பதைப் புரிந்து கொண்டால் நமக்குள் தலைக்கணம் வராது. கல்வி கற்கும் போது கடினமாகத் தெரிந்தாலும் (கற்கையில் கசப்பு), அதன் பலன் வாழ்நாள் முழுவதும் இனிக்கும் (கற்றபின் இனிப்பு). அதனால்தான் "கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்கிறோம்.


செல்வத்தை விட ஆரோக்கியமே முக்கியம். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை இன்று நாம் அதிகம் உணர்கிறோம். சரியாகச் சாப்பிடும் பழக்கத்தை (நொறுங்கத் தின்றால் நூறு வயது) கடைப்பிடித்தால் மருத்துவமனை போக வேண்டியதில்லை. மன அழுத்தத்தைப் போக்க "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்பது ஒரு சிறந்த மருந்து.


மனித உறவுகளில் தெளிவு வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களிடம் அவமானப்படக்கூடாது; அதையே "மதியாதார் வாசல் மிதியாதே" என்கிறது பழமொழி. உதவி என்று வரும்போது "தானம் கொடுத்த மாட்டைப் பல்லைத் பிடித்துப் பார்க்காதே" என்பது கொடுப்பவரின் மனதைப் புண்படுத்தக்கூடாது என்பதைச் சொல்கிறது. அதேசமயம், யாரையும் வெளித்தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது (உருவத்தைப் பார்த்து எடை போடாதே), ஏனெனில் "மின்னுவதெல்லாம் பொன்னல்ல".


வாழ்க்கையில் எது நடந்தாலும் தீர விசாரிக்க வேண்டும். "கண்ணால் காண்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்". காலம் கடந்த ஞானம் உதவாது என்பதை "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்ற வரிகள் அழகாகச் சித்தரிக்கின்றன.


பழமொழிகள் வெறும் சொற்கள் அல்ல; இவை ஒவ்வொன்றும் ஒரு மனிதனின் வாழ்நாள் அனுபவம். "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்பது போல, இந்த அறநெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தால் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்.


சரி அதை விடுங்க.. உங்களுக்காக சில பழமொழிகளை இங்கு தொகுத்துக் கொடுத்துள்ளோம்.. அதை வைத்து அதன் உண்மையான பொருளைக் கண்டறிந்து எங்களுடன் ஷேர் பண்ணுங்க.. எல்லோரும் தெரிஞ்சுக்குவோம்.


1. ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றான். 

2. சேற்றிலும் செந்தாமரை முளைக்கும். 

3. சூடு கண்ட பூனை பால் குடிக்காது. 

4. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. 

5. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். 

6. பசி வந்திட, பத்தும் பறந்து போகும்.

7. மின்னுவதெல்லாம் பொன்னல்ல .

8. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். 

9. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. 

10. வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். 

11. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா ?

12. இளம் கன்று பயமறியாது. 

13. வெறும் கை முழம் போடுமா? 

14. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து. 

15. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும். 

16. கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை. 

17. தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும். 

18. தர்மம் தலைகாக்கும். 

19. மதியாதார் வாசல் மிதியாதே. 

20. ஆனை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே. 

21. கேடு வரும் பின்னே; மதி கெட்டு வரும் முன்னே. 

22. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். 

23. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். 

24. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. 

25. உருவத்தைப் பார்த்து எடை போடாதே. 

26. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே. 

27. தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்காதே. 

28. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. 

29. எலி வளையானாலும் தனி வளை.

30. துஷ்டனை கண்டால் தூர விலகு. 

31. தோல்வியே வெற்றிக்கு முதல் படி.

32. பழகப் பழக பாலும் புளிக்கும். 

33. ஆனைக்கும் அடி சறுக்கும்.

34. பதறிய காரியம் சிதறும். 

35. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 

36. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். 

37. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். 

38. நொறுங்கத் தி ன்றால் நூறு வயது. 

39. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. 

40. பசி வந்திட பத்தும் பறந்து போகும். 

41. பணம் பாதாளம் வரை பாயும். 

42. கற்கையில் கசப்பு; கற்றபின் இனிப்பு. 

43. கற்றது கையளவு கல்லாதது உலகளவு. 

44. பார்த்தால் பசு பாய்ந்தால் புலி. 

45. கோழி மிதித்து குஞ்சுமுடமாகுமா? 

46. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. 

47. தன் ஊரில் ஆனை அயலூரில் பூனை.

48. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும். 

49. ஆசை இருக்கு தாசில் பண்ண; அம்சம் இருக்கு கழுதை மேய்க்க. 

50. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.


(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!

news

ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!

news

வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!

news

தாலாட்டும் நினைவுகள்!

news

முடியலடா.. முடியலையே!

news

முகத்துக்குப் போடலாம்.. மனதுக்குப் போடலாமா.. Massive Mask!

news

இப்படியும் ஒரு விழாவா.. சின்ன சேலத்தை அசர வைத்த ஜவுளி சங்க விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்