வேலை ஒன்று தான் ஆனால்.. வேறுபாடு!

Oct 15, 2026,11:25 AM IST

- பா. பானுமதி


கேசவன் வெளியில் சென்று இருக்கும்போது அவன் தாய் கைபேசியில் அழைத்து பூ வாங்கி வரச் சொன்னால் மறந்து விடுவான், மறுபடியும் ஞாபகப்படுத்த வேண்டும். கடைக்கு சென்று என்ன பூ என்று கேட்பான். எவ்வளவு வாங்க வேண்டும் என்று பல வினாக்கள்.


மல்லிப்பூ வாங்கி வாப்பா சாமிக்கு கதம்ப மாலை என்று சொல்ல வீட்டுக்கு வந்தது ரோஜா பூவும் ஒரு முழம் கதம்பமும். அதற்கு கதை வேறு. அம்மா மல்லிகை பூ ரொம்ப விலை உன்னோட கொண்டைக்கு ஒரு ரோஜாவே போதுமே. அடுத்து சாமி படத்துக்கு வாசல்ல இருக்குற பூவெல்லாம் கட்டிப்போடு. ஒரு முழம் கதம்பமும் கொண்டு வந்து விட்டேன் இன்னும் என்ன என்பான். 


மணமான சிறிது காலத்தில் நல்ல மாற்றம். ஒரு முறை தாய் வீட்டுக்குச் சென்றிருந்த மருமகளை அழைத்து வர இருவரும் சென்றோம். கிளம்பும்போதே இதோ கிளம்பி விட்டோம் என்ற தகவல் அடுத்து ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்று கேள்வி. ஒன்றும் வேண்டாங்க கொஞ்சம் பூ மட்டும் வாங்கிட்டு வாங்க என்று மருமகள் சொல்லிவிட்டாள்.




அம்மா என்ன பூ மா வாங்கட்டும் என்று கேட்டு 300 ரூபாய்க்கு மல்லிகை. மனைவி, மாமியார், அம்மா என மூன்று பேர். அடுத்து சாமி படத்துக்கு வேணும்னா, அதற்கு ஒரு மூன்று முழம் கதம்பம். ரோஜா பூவும் ஒரு 30 ரூபாய்க்கு குடுங்க என்று வாங்கி கொண்டான். நான் ஒன்றும் பேசவில்லை 


வீட்டுக்கு சென்றதும் ஏங்க இவ்வளவு பணத்தை தண்ணியா செலவு பண்றீங்க. நான் கொஞ்சம் பிரஷ்ஷா வச்சுக்கலாமேன்னு பூ வாங்கிட்டு வர சொன்னேன். அதுக்கு இவ்ளோ பூவா வாங்கிட்டு வருவீங்க. நீங்க ஒன்னும் பயிற்சி கொடுக்கல அத்தே என்று என்கிட்ட மருமகள் சொல்ல....


என்ன சொல்ல.... நானும் மருமகளும் சொல்லியது ஒருவேலை தான்... ஆனால் வேறுபாடு எப்படி வந்தது.. இதுவரைக்கும் அது விளங்கவே இல்லை... ஆண்களோட டிசைனே அப்படித்தானோ!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், சொற்பொழிவாளர். மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்