சென்னை: இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்பின்னர் அவர் பேசுகையில், மாநில சுயாட்சி குறித்த முதல் தேசியக் கருத்தரங்கை தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் நான் அடைகிறேன்! பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணுக்கு என்று பல சிறப்புகள் இருக்கிறது!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வள்ளுவ நீதியை சொல்லும் மண் இது!
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்திய கணியன் பூங்குன்றனார் வாழ்ந்த மண்! இந்த மண்.
எல்லோரும் சமம் என்ற சமத்துவ எண்ணத்தின் அடிப்படையில், எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் - அனைவரும் அனைத்து உரிமைகளும் பெறவேண்டும் - எல்லோரும் அரசுப் பணிகளில் இணையாக பணியாற்ற வேண்டும் என்பதுதான் சமூகநீதிக் கோட்பாட்டுக்கு அடிப்படை. தமிழ்நாட்டில் சுமார் நூறு ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி, பல முற்போக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறோம்.
இவர்களின் தொடர்ச்சியாக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்கள், சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை உள்ளிட்ட உயர்ந்த கொள்கைகளுக்காக பாடுபட்டார்கள். பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் தங்களுடைய ஆட்சிக்காலங்களில் ஏழை எளிய மக்கள் அனைத்து துறைகளிலும் ஏற்றம் பெறுவதற்கு எடுத்துக்காட்டான பல முற்போக்கான சமூக - பொருளாதார நலத்திட்டங்களை நிறைவேற்றினார்கள். இப்படி, தமிழ்நாட்டின் அரசியல் என்பதே, சமூகநீதி அரசியலாகதான் இருக்கிறது!
மத்திய அரசு விதிக்கின்ற நேர்முக வரிகளிலும், ஜி.எஸ்.டி. வரிகளிலும் ஒன்றிய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தருகின்ற நிதிப் பகிர்வுத் தொகையில், மாநிலம் அளிக்கின்ற வரி வருமானத்துக்கு ஏற்ப, ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்காமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் சிறந்த பல சமூகப் பொருளாதார திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, கடந்த நான்கரை ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் வழங்கி வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளையும் மீறி, போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம்.
1967-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தன்னுடைய சட்டமன்ற உரையில், “மாநிலங்கள் உரிமை பெற அரசமைப்புச் சட்டத்தில் மறு ஆய்வு தேவையானது” என்று குறிப்பிட்டார். 1969-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
மத்திய – மாநில உறவுகளைச் சீராய்வு செய்து 1971, மே 27-ல் ராஜமன்னார் குழு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அளித்தது.
இன்றைக்கும் ராஜமன்னார் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பரிந்துரைகள் மிகவும் போற்றத்தக்கதாகவும், நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையிலும் இருக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகளின் தலைமையில், ஆட்சி நடைபெறுகிறது.
இந்தப் பட்டியலில் காஷ்மீரும் ஒரு மாநிலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி, தன்னிச்சையாக, காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, ஆளுநர் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் மாநிலத்தை ஒன்றிய அரசின் நேரடியான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக மாற்றி அறிவித்தார்கள். இத்தகைய ஜனநாயக விரோத, கூட்டாட்சியியலுக்கு எதிரான நடவடிக்கைளை திராவிட முன்னேற்றக் கழகமும், எங்களோடு இணைந்திருக்கின்ற காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் என்று அனைத்து கட்சிகளும் இணைந்து கண்டித்தோம்.
நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும் ஒன்றிய அரசு தடுக்கின்றது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய, நியாயமான நிதி பங்கீட்டை மறுக்கின்றது. இதையெல்லாம் மீறி, கடந்த 4 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு, பல சிறந்த திட்டங்களை வகுத்து, நிறைவேற்றி வருகிறது. நிதிப்பற்றாக்குறை காலத்தில்கூட சிறந்த முறையில் நிதி மேலாண்மை செய்து 2024-25-ஆம் ஆண்டில், 11.19 விழுக்காடு எனும் இரட்டை இலக்க வளர்ச்சியை 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் அடைந்திருக்கிறோம்!
நடுநிலை தவறாத நல்லெண்ணம் கொண்ட பல அறிஞர்களும், பொதுநல நோக்கர்களும், திராவிட மாடல் அரசின் சமூக நீதித் திட்டங்களை பாராட்டி வரவேற்கிறார்கள். இந்தி மொழியை திணிப்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும், பல்வேறு மொழிப் போராட்டக் களங்களை எதிர்கொண்டு, இந்தித் திணிப்பை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது. ஏராளமான அரசியல் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் போராடி, கட்டாய இந்தியை தடுத்தார்கள்! அதனால்தான், 1968-லேயே இருமொழிக் கொள்கையை முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத் தீர்மானமாகவே நிறைவேற்றினார். தமிழ்நாட்டில் இருந்து எழுப்பப்படுகின்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு, மாநில உரிமை முழக்கத்தை இப்போது இந்தியாவின் பல மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களில் இரு மொழிக் கொள்கையை ஆதரித்து, குரல்கள் எழுப்புகிறார்கள்.
2025-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து இந்தி எதிர்ப்புப் பேரணியை நடத்தியதும், பாஜக, ஏக்னாத் ஷிண்டே கூட்டணி ஆட்சியின் பாஜக முதலமைச்சர் பட்நாவிஸ் அவர்கள் மராட்டிய மாநிலத்தில் இந்தி கட்டாயம் கிடையாது என்று அறிவித்தார்.
இது இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கின்ற மாபெரும் மாற்றம் இது. மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக திராவிட இயக்க சிந்தனையாளர்களான முரசொலி மாறன், கு.ச.ஆனந்தன், ஆலடி அருணா ஆகியோர் சிறந்த ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகமும் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் மாநில உரிமைகளை வென்றெடுக்க, அனைத்துவிதமான ஆக்கபூர்வமான, ஜனநாயக நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே, மாநிலங்கள் சுயாட்சி பெற, தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தும் முதல் தேசிய அளவிலான கருத்தரங்கில் உரையாற்ற இருக்கக்கூடிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர்களும், சட்ட வல்லுநர்களும், பேராசிரியர்களும் - ஒன்றிய - மாநில உறவுகள் மேம்பட தங்களுடைய சீரிய கருத்துகளை – வழங்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இங்கே எனக்கு முன்னால் நம்முடைய முன்னாள் நீதியரசர் ஜஸ்டி செலமேஸ்வர் அவர்கள் சிறப்பாக உரையாற்றி இருக்கிறார்கள். தற்போதுள்ள நீதித்துறை நடைமுறைகள், அரசுத் துறைகளின் நடைமுறைகளில் தன்னுடைய அனுபவத்திலிருந்து கருத்துக்களை எல்லாம் அவர் பகிர்ந்திருக்கிறார். அவருடைய உரை அனைவருக்கும் புதிய கோணத்திலான சிந்தனையை நிச்சயமாக தூண்டியிருக்கும். அதுபோல இன்று எல்லோருடைய உரையும் அமையும் என்று நம்புகிறேன்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை திட்டம்தான் இந்தியாவின் பன்முகத் தன்மையையும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் மேலும் வலிமைப்படுத்தும்! அதற்கு, நம்முடைய உயர்நிலைக்குழு சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது.
அதற்கு உதாரணம் இந்தக் குழுவின் தலைவர் நீதியரசர் மாண்புமிகு குரியன் அவர்கள் பேசும்போது, ஒரே வரியில் சிறப்பாகச் சொன்னார் – பலரும் சொல்லும் தேசம் முதன்மை என்பதைவிட தேசத்தை உருவாக்கிய அரசமைப்பு சட்டமே முதன்மை என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குழுவில் அவருடன் இணைந்து பணியாற்றும் திரு.அசோக் வர்தன் ஷெட்டி அவர்களுக்கும், டாக்டர் நாகநாதன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தக் குழு அளிக்கக்கூடிய பரிந்துரைகள், மாநிலங்கள் தன்னுரிமை பெற்று, ஒரு புதிய வலிமையான இந்தியா உருவாக வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் முயற்சியால்தான் ஒன்றுபட்ட இந்தியா வலிமை பெறும். பலவீனமான மாநிலங்களால் இந்தியாவை உயர்த்த முடியாது. எனவே, இந்திய ஒருமைப்பாட்டில் உண்மையான அக்கறை கொண்ட எல்லோரும் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு அமைத்த குழு போல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் இதுபோல குழு அமைத்து, மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!
2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
{{comments.comment}}