டெல்லி: உடல்நலக் குறைவு காரணமாக துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சந்தேகம் கிளப்பியுள்ளது.
தன்கர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 67(a) படி சமர்ப்பித்தார். தன்கர் 2022 ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். 2027 வரை அவர் பதவிக்காலம் உள்ளது. அவர் ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்தார். எதிர்க்கட்சிகளுடன் அவருக்கு அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்தன. சில நேரங்களில் அவரது கருத்துக்கள் அரசாங்கத்திற்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட் குறித்தும் அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தார். மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது அவரது செயல்பாடுகள் கடும் விமர்சனங்களை சந்தித்தன என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில்தான் நேற்று திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.
தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவ ஆலோசனையின்படி உடனடியாக ராஜினாமா செய்வதாக தன்கர் கூறினார். "உடல் நலனுக்கு முன்னுரிமை அளித்து, மருத்துவ ஆலோசனையின்படி, நான் இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்" என்று அவர் கூறினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலேயே அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. நேற்று காலையில் கூட அவர் அவையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்குவதற்கான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதே நாளில், ஆளும் கூட்டணியின் ஆதரவுடன் இதேபோன்ற தீர்மானம் லோக்சபாவிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தன்கரின் ராஜினாமா வந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால், அடுத்த துணை ஜனாதிபதியும் பாஜகவைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. விரைவில் இதுதொடர்பான தேர்தலை தேரத்ல் ஆணையம் அறிவிக்கும்.
புதிய ராஜ்யசபா தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சபையை தலைமை தாங்கி நடத்தி வருவார்.
காங்கிரஸ் கட்சியின் சந்தேகம்
இதற்கிடையே, ஜெகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம் கிளப்பியுள்ளார். நேற்று என்ன நடந்தது என்று அவர் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நேற்று மதியம் 12:30 மணிக்கு, மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் குழு (BAC) கூட்டத்திற்கு ஜெகதீப் தன்கர் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் கிரண் ரிஜிஜு உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு சுருக்கமான கலந்துரையாடலுக்குப் பிறகு, குழுவின் அடுத்த கூட்டம் மீண்டும் மாலை 4:30 மணிக்கு நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.
மாலை 4:30 மணிக்கு, தன்கர் தலைமையில், குழு உறுப்பினர்கள் மீண்டும் கூட்டத்திற்காக கூடினர். ஆனால் அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ரிஜிஜு ஆகியோர் வரவில்லை. நீண்ட நேரம் அவர்களுக்காக அனைவரும் காத்திருந்தனர், ஆனால் அவர்கள் வரவில்லை. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இரண்டு அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவர் வருத்தமடைந்தது இயல்பு. இதைத் தொடர்ந்து, அவர் அடுத்த கூட்டத்தை இன்று பிற்பகல் 1:00 மணிக்கு ஒத்திவைத்தார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அதாவது, நேற்று பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 4:30 மணிக்குள் ஏதோ முக்கியமான சம்பவம் நடந்திருக்க வேண்டும். அதனால்தான் ஜே.பி. நட்டா மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் வேண்டுமென்றே மாலை கூட்டத்தைத் தவிர்த்தனர் என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இப்போது ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அதிர்ச்சி அளிக்கிறது. என்னவோ நடந்துள்ளது. நாங்கள் ஜெகதீப் தன்கரை மதிக்கிறோம். அவர் பதவியில் தொடர வேண்டும். அவரது விலகலில் ஆழமான பல காரணங்கள் அடங்கியுள்ளதாக நாங்கள் வலுவாக நம்புகிறோம் என்று கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
ரவி சாஸ்திரியின்.. சிறந்த இந்திய வீரர்கள் லிஸ்ட்டில்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
வெண்ணெய் .. அது ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்குன்னு தெரியுமா?.. தெரிஞ்சுக்கங்க பாஸு!
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜெமினி, சாட்ஜிபிடி, குரோக்.. போட்டி போட்டு பட்டையைக் கிளப்பும் ஏஐ தம்பிகள்.. கலக்குதுகளே
அஜீத்துடன் மீண்டும் இணையும் ஆதிக் ரவிச்சந்திரன்.. இது வேற மாதிரி விருந்தா இருக்குமாம்!
ஜெகதீப் தன்கர் விரைவில் குணமடைய வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பாபநாசம் பட ஸ்டைலில்.. க.காதலனுடன் சேர்ந்து.. கணவரை கொன்று வீட்டிற்குள் புதைத்த பெண்.. !
குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு
ஆசிய கோப்பைக் கிரிக்கெட் நடக்குமா.. பிசிசிஐ.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் மோதல்!
{{comments.comment}}