"கம்பீரம்.. தைரியம்.. துணிச்சல்".. அஞ்சாமையின் மொத்த அடையாளம்.. "கேப்டன்" விஜயகாந்த்!

Dec 28, 2023,06:56 PM IST

சென்னை:  கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் தமிழ்நாட்டு ஆளுமைகளையே அதிர வைத்தவர் விஜயகாந்த். கம்பீரமான பேச்சு, தைரியமான செயல்பாடுகள், துணிச்சலான முடிவுகள்.. யாருக்கும் அஞ்சாமல் இருந்த தில்.. என்று தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமான ஒரு தலைவராக, மனிதராக  கவர்ந்தவர் விஜயகாந்த்.


தமிழ்நாட்டு அரசியலையே விஜயகாந்த்துக்கு முன்பு, பின்பு என்று இரண்டாகப் பிரிக்கலாம். அந்த அளவுக்கு தமிழ்நாட்டு அரசியலில் புதிய மலர்ச்சியை உருவாக்கியவர் விஜயகாந்த். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை திமுக, அதிமுக என்ற இரு பெரும் சக்திகள்தான் கோலோச்சி வந்தன. ஆனால் அந்த இரு பெரும் இயக்கங்களுக்கு மிகரப் பெரிய சவாலாக உருவெடுத்தவர் விஜயகாந்த்.


அரசியலுக்கு அவர் வரப் போகிறார் என்பதே தமிழ்நாட்டை அதிர வைத்தது. அவரது ரசிகர்களை அரசியலுக்கு வருவதற்கு முன்பே தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்து தனது அரசியல் பிரவேசத்திற்கு ஆழம் பார்த்தவர் விஜயகாந்த். அதில் கிடைத்த நம்பிக்கையில்தான் அவர் மதுரையில் வைத்து தேமுதிகவை உருவாக்கினார். அவரது அரசியல் பிரவேசம் காட்டுத் தீ போல மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற ஆரம்பித்தது.


சந்தித்த முதல் தேர்தலிலேயே அவர் எம்எல்ஏ ஆனார். அவரது கட்சியும் பெருவாரியான வாக்குகளை தமிழகம் முழுவதும் அள்ளி திமுக, அதிமுகவை அதிர வைத்தது. அவருக்கு மக்களிடையே செல்வாக்கும் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த அதிவேக பாய்ச்சலைப் பார்த்து கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி சற்றே யோசிக்க ஆரம்பித்தனர், கவலை கொள்ள ஆரம்பித்தனர் என்பது வரலாறு.




இருவரும் விஜயகாந்த்தை தங்கள் பக்கம் இழுக்கவும் முயற்சிகளில் குதித்தனர். இருவரும் மாறி மாறி மேற்கொண்ட முயற்சிகள் விஜயகாந்த்தை சலனப்படுத்தவில்லை.. ஆனால் அவருக்கு நெருக்கமானவர்களின் வலியுறுத்தலால் அவர் அதிமுக பக்கம் சாய்ந்து ஒரு தவறான முடிவை எடுத்து விட்டார். அந்த முடிவு தேமுதிகவுக்கு முடிவுரை எழுதப் போகிறது என்பதை அப்போது அவர் அறியவில்லை. அதிமுகவுடன் சேர்ந்ததால் அவரது அரசியல் வேகம்.. எதிர்க்கட்சித் தலைவர் என்ற வளர்ச்சியோடு நின்று போய் விட்டது.


அவரை முதல்வராகப் பார்க்க வேண்டும், தமிழ்நாட்டை விஜயகாந்த் ஆள வேண்டும் என்ற தேமுதிகவினரின் கனவுகள் அந்தத் தேர்தலோடு முடிந்து போய் விட்டது வரலாற்று சோகம். என்ன இருந்தாலும், விஜயகாந்த் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. ஜெயலலிதா, கருணாநிதி என்று மட்டுமே அலைபாய்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவர்களை தன்னை நோக்கியும் திரும்பி வர வைத்தவர் விஜயகாந்த் என்பதில் சந்தேகம் இல்லை.


கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த போது எல்லோரும் விஜயகாந்த் குறித்துத்தான் நினைத்தார்கள். அவர் மட்டும் நலமாக இருந்திருந்தால் இப்போது அவர்தான் முதல்வர் என்பதே பலரது ஏக்கமாக இருந்தது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார் விஜயகாந்த். பூசி மெழுகி வழிந்து பேசும் வழக்கமே அவருக்குக் கிடையாது. பட்டென்று பேசுவார்.. வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான்.. யாருடனும் தேவையில்லாமல் சமரசமாக மாட்டார். பிடித்தால் பிடித்தது, இல்லையென்றால் இல்லை.. உதவி என்று கேட்டு வருவோருக்கு அவருடைய கரங்களும் சரி, மனசும் சரி.. ஒரு நொடி கூட தயக்கம் காட்டாதவர் விஜயகாந்த்.


அப்படிப்பட்ட விஜயகாந்த் இன்று மறைந்து விட்டார் என்பது அவரது கட்சியினரை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்