நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Jul 30, 2025,06:05 PM IST

சென்னை:  நீதி தவறிய செயலுக்காக  தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  அதுமட்டுமின்றி,  செந்தில் பாலாஜி  உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான   வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த  வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அந்த வழக்கில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக  திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும்,  இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.  குற்றம் செய்தவர்களைத் தண்டித்து அப்பாவிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அப்பாவிகளைத் தண்டித்து குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. 




2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.  ஆனால், செந்தில்பாலாஜி அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி , தம்மீது புகார் கொடுத்த அனைவருக்கும் பணத்தைக்  கொடுத்து, புகார்களை திரும்பப் பெறச் செய்தார். இதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது.


அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த  திமுக அரசு, செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களை மட்டும் குற்றச்சாட்டப்பட்டவர்களாக சேர்க்காமல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறது. இதைத் தான் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஒரு  வழக்கில் 2000 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டால்,  செந்தில்பாலாஜியின் வாழ்நாள் முடியும் வரை இந்த வழக்கின் விசாரணை முடியாது என்பதற்காகத் தான் திமுக அரசு இவ்வாறு செய்ததாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.


உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்,  செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில்  அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார்.  இதற்கும் பா.ம.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.


ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும்.  ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ மக்களின் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார். இதற்கு உச்சநீதிமன்றமே  கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில்,  தமது நீதி தவறிய செயலுக்காக  தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  அதுமட்டுமின்றி,  செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை  நீக்கி விட்டு, செந்தில் பாலாஜி  உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

news

சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்

news

ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

news

100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்