சென்னை: கர்நாடகத்தில் 18 ஆக இருந்த புகைப்பிடிப்பதற்கான வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை உடனடியாக 21 ஆக உயர்த்த வேண்டும். அதன்பின் ஆண்டுக்கு ஒரு வயது உயர்த்த வேண்டும் என்பது தான் எனது கனவு ஆகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முன்னோடி மாநிலம் என்று கூறிக் கொள்ளும் தமிழகம், பல நூறு முறை வலியுறுத்தியும் கூட இத்தகைய சட்டங்களை இயற்ற மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டத்தின் 4, 4ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி கர்நாடக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் கர்நாடக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; அதேபோல், இதுவரை 18 ஆக இருந்த புகைப்பிடிப்பதற்கான வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இந்தக் குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாயிலிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடகத்தில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டம் மிகப்பெரிய வரம் ஆகும். இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் பயன்பாடு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் இந்த சட்டம் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் இந்தச் சட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தியவன் என்ற முறையில் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை உடனடியாக 21 ஆக உயர்த்த வேண்டும்; அதன்பின் ஆண்டுக்கு ஒரு வயது உயர்த்த வேண்டும் என்பது தான் எனது கனவு ஆகும். அவ்வாறு செய்தால், இப்போது 18 வயது மற்றும் அதற்கு குறைவான வயதில் உள்ள இளைஞர்கள் எவரும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் சிகரெட் பிடிக்க முடியாத நிலை உருவாகும். இதை பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் போதிலும் தமிழக அரசும், மத்திய அரசும் செவிசாய்க்க மறுக்கின்றன. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதன் மூலம் இதை சாத்தியமாக்கலாம். ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதைச் செய்வதற்கு தயங்கின்றன.
உலகிலேயே புகைப்பிடிப்பதை முற்றிலுமாக தடை செய்யும் சட்டத்தை முதன்முதலில் கொண்டு வந்த நாடு நியுசிலாந்து தான். துரதிருஷ்டவசமாக அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டு விட்டாலும் கூட பிரான்ஸ், ஆஸ்திரியா, கனடா, பூடான், பெல்ஜியம், பிரேசில் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளன. உண்மையில் அந்த நாடுகளை விட தமிழ்நாட்டுக்கு தான் அந்தச் சட்டம் மிகவும் தேவையாகும்.
உலகில் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் சில லட்சம் பேருக்கு மட்டும் தான் அப்பழக்கம் உள்ளது. அவர்களில் சில ஆயிரம் பேர் மட்டும் தான் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். ஆனால், இந்தியாவில் 12 கோடி பேர் புகைப்பிடிக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆண்களில் 25 விழுக்காட்டினரும், பெண்களில் 15 விழுக்காட்டினரும் புகைப்பிடிப்பது உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் தான் இந்தியாவில் புகைக்க தடை விதிப்பது அவசியம் ஆகும்.
தேசிய அளவில் புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் சட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக அரசோ பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தையே இன்று வரை முறையாக செயல்படுத்த மறுக்கிறது. அதனால், பெண்களும், குழந்தைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இந்த வரம்பை ஆண்டுக்கு ஒரு வயது வீதம் உயர்த்துவதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டை புகைப்பிடிக்கும் வழக்கமில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
 
                                                                            பீகாரில் 1 கோடி பேருக்கு வேலை.. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்.. தேஜகூ தேர்தல் அறிக்கை
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            நகை வாங்க இதுவே சரியான தருனம்... இன்று தங்கம் வெள்ளி விலையில் எந்தமாற்றமும் இல்லை!
 
                                                                            கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. சூடு பிடித்தது சிபிஐ விசாரணை.. இன்ஸ்பெக்டரிடம் முக்கிய விசாரணை
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 31, 2025... இன்று நினைத்தது நிறைவேறும் ராசிகள்
 
                                                                            இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
 
                                                                            எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
 
                                                                            கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
{{comments.comment}}