குடிநீர் வாரிய ஊழல் குறித்து நியாயமான விசாரணை வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

Jun 06, 2025,02:44 PM IST

சென்னை: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை சுருட்டுவதைப் போன்ற கொடுங்குற்றமும், பாவமும் உலகில் இல்லை. குடிநீர் வாரிய  ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்: ஆண்டு தோறும்   ரூ.90 கோடி சுருட்டப்படுவது குறித்து விசாரணைக்கு  ஆணையிட வேண்டும்!


தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட  வேண்டிய ஊதியத்தை 40%  முதல் 50%  வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும்  மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.




குடிநீர் வாரியத்தில் மின்னியலாளர்கள் ( எலக்ட்ரீஷியன்கள்), நீரேற்றும் மோட்டார் இயக்குபவர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என மொத்தம் 11, 597 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் குடிநீர் வாரியத்தால் நேரடியாக நியமிக்கப்படாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான ஊதியம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக பணியாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.15,401 அல்லது அதற்கும் கூடுதலான தொகையை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அதில் ரூ.7500 முதல் ரூ.9800 வரை மட்டுமே ஊதியமாக வழங்கிவிட்டு மீதத்தொகையை சுருட்டி விடுகின்றனர் என்பது தான் குற்றச்சாட்டு ஆகும்.


இந்த வகையில் மாதத்திற்கு ரூ.7.5 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.90 கோடி சுருட்டப்படுகிறது.  தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இந்தத் தொகையை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் கூட இந்த ஊழலுக்கு முடிவுகட்டப்படவில்லை. முந்தைய ஆட்சியில்  நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது முதலமைச்சரே சுட்டிக்காட்டியும் கூட இந்த ஊழல் தடுக்கப்படவில்லை; ஊழலுக்கு காரணமானவர்களும் தண்டிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு  ஊழல் கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கிறது.


1971-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மலேரியா ஒழிப்புக்கான தினக்கூலி பணியாளர்களை கூடுதலாக நியமித்ததாகக் கூறி,  அவர்களின் ஊதியத்தை அன்றைய சென்னை மாநகராட்சி ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சுருட்டிக் கொண்டனர். அப்போது ஊதியம் முழுமையாக சுருட்டப்பட்ட நிலையில், இப்போது ஊதியத்தில் பாதி சுருட்டப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் வங்கிக் கணக்குகள் மூலம் வரவு வைக்கப்பட வேண்டும் என்பது விதி. அவ்வாறு செய்தால் மோசடி அம்பலமாகி விடும் என்பதற்காக  ஊதியம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.


ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை வழங்கும்படி தொழிலாளர் நலத்துறை,  தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆகியவற்றின் அதிகாரிகள் பலமுறை கோரியும்  அவற்றை குடிநீர்வாரிய செயற்பொறியாளர்களும்,  ஒப்பந்ததாரர்களும் வழங்க மறுக்கின்றனர். இதன் மூலம் ஊழலுக்கான ஆதாரங்களை அழிக்க அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் முயல்கின்றனர். இதை அரசு வேடிக்கை பார்ப்பது  ஊழலுக்கு துணை போவது ஆகும்.


ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை சுருட்டுவதைப் போன்ற கொடுங்குற்றமும், பாவமும் உலகில் இல்லை. இந்த ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.  இதன் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை

news

விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து

news

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?

news

Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்